×

உள்ளம் உருக அன்பூட்டுவாயே

சக்தி தத்துவம் அபிராமி அந்தாதி - 87

‘‘பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’’
‘‘சூடும் பணி’’ என்ற சொல்லானது மந்திர உபதேசம் பெற்று குருவினிடத்து

பெறப்பட்ட யந்திரம், விக்ரகம், முதலிய இறை திருமேனிகளை தினசரி வணங்கும் செயலைக் குறித்தது, இது வடசொல்லால் பூசை எனப்படும். உபாசகரை  பொறுத்தவரை ஜபம், தபம், தியானம், பூஜை இவைகள் எல்லாம் இறையருளை பெற்றுத்தர உதவும் சாதனங்களாகவே இருப்பினும் ஜபத்திலிருந்து தவமும்,  தவத்திலிருந்து தியாமும், தியானத்திலிருந்து பூஜையும், ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும், ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதும் ஆகிய சாதனமாகும். இறு  மாணக்கரின் பக்குவம் பொறுத்தும் குருவின் அனுபவம் பொறுத்தும், இறையருள் பதிவு பொறுத்தும் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த  வகையில் பூசனை என்பது மற்று எல்லா சாதனங்களையும் விட உயர்ந்த நிலையில் உள்ளது, மற்ற எல்லா சாதனத்தையும் தனக்குள்ளே அடக்கியதுமாகும்.  அதை செய்தலையே ‘‘சூடும் பணி என்கிறார்’’‘‘பத்மரதயுகம்’’ அபிராமிபட்டரை பொறுத்தவரை ‘‘பத்மபதம்’’ என்ற வார்த்தை உமையம்மையை  யந்திரத்தில் வழிபாடு செய்யும் ஸ்ரீசக்ரம், அர்தமேரு, மகாமேரு, என்ற யந்திர வழிபாட்டையே குறிக்கும்.

இந்த ஸ்ரீ சக்ரத்தில் ‘‘பதம்’’ என்ற வார்த்தை ஒரு தேவதையை சூழ்ந்து வணங்கப்படும் பிற தேவதைகளுக்கான இடமாகும். இந்த இடமானது  43+8+16+10+10+9= 96 தேவதைகள் எழுந்தருள செய்யும் ஸ்ரீ சக்ரத்திலுள்ள பகுத்து காட்டப்பட்ட இறையின் இருப்பிடங்களாகும்.( உமையம்மையை தவிர). ‘‘யுகம்’’ என்ற வார்த்தை வடமொழியில் இரண்டைக் குறிக்கும். ஸ்ரீ சக்ரம் வைத்து உபாசனை செய்பவர்கள் அதன் அருகில் பாசாங்குசம் கரும்பு மலர்  அம்போடு கூடிய அமர்ந்த நிலையில் இருக்கும் உமையம்மையின் திரு உருவை அமைத்து வழி பட வேண்டும் என்கிறது சாக்த ஆகமம். இந்த உமையம்மையின்  திரு உருவம் அதனோடு இணைந்த ஸ்ரீசக்ரம் இந்த இரண்டையும் ‘‘யுகம்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார் ‘‘பதம் பதயுகம்’’ என்பது ஸ்ரீ சர்ரம்  மற்றும் உமையம்மையின் திருவுருவரம் இந்த இரண்டையும் இணைத்த வார்த்தையாகும். ‘‘சூடும் பணி’ என்பது ஜபம், தபஸ், தியானம், ஜபத்தால்  சோடசாக்ஷ்டரி மற்றும் அது தொடர்பான மூல மந்திரத்தையும் தவம் என்பது பௌர்ணமி விரதம், ஆலயதரிசனம், பிரம்மசிய விரதம். இது போன்ற சிலவற்றை  குறித்தது.

தியானம் என்பது புறத்திலுள்ள உமையம்மையின் உருவத்தை அகத்து உருவகப்படுத்துதலாகும். பூசனை என்பது முதலில் ஜபம் செய்து ஜபத்திற்குறிய நியதியின்  படி, தவம் என்னும் வழவாமை காத்து, அகத்திலி தியானம் செய்து, பிறகு புறத்திலுள்ள ஸ்ரீ சக்ரம், உமைதிரு உருவம், இவைகளுக்கு நிரட்டல், அலங்காரம்  செய்தல் முதலிய உபசரனைகளை செய்வதாகும். இந்த எல்லாவற்றையும் இணைத்தே ‘‘பத்ம பதயுகம் சூடும் பணி’’ என்று குறிப்பிடுகின்றார். ‘‘எனக்கே  அடைத்தனை’’ என்பதால் தானாக பெற்றுக் கொள்வதல்ல குருவருளாலும், திருவருளாலும் அளிக்கப் படுவதனால் ‘‘அடைத்தனை’’ என்ற வார்த்தையை  பயன்படுத்துகின்றார்.‘‘எனக்கே’’ என்ற வார்த்தையினால் ஆத்மார்த்த உபாசகன் தன் ஒருவனுக்கே உரிய தொடர்பை பெற்ற விக்கிரகத்தை குறிப்பிடுவதனால்  ‘‘எனக்கே’’ என்ற வார்த்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கும் தொடர்புடையது அல்ல என்பதை வலியுறுத்துகிறார்.

‘‘எம்பெருமாட்டி’’ 70 ‘‘எங்கள் சங்கரநார்’’ 44 என்பதிலிருந்து மேலும் உணரலாம். ‘‘பத்மபத யுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’’ என்பதனால்.  ஜபம், தவம், தியானம், பூஜை இவை அனைத்தையும் தந்த, எனக்கு மட்டுமே தந்த குருவருளையும், திருவருளையும், தனக்கு தகுதியில்லாத போதும் அதை  அறித்த கருணையை குறித்துவியக்கிறார். ‘‘உள்ளம் உருகும் அன்பு படைத்தனை’’அபிராமியம்மை அருள் செய்வதற்கு முன்னால் இருந்த நிலையை அபிராமி  பட்டர் கூறுகின்றார்.‘‘ஆசைக் கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் கைபாசத்தில் அல்லல் பட இருந்தேனை’’ 32 என்று உமைம்மையின் மீது  அன்பில்லாமல் இருந்ததையும், ‘‘அறிவொன்றிலேன்’’ 81 அந்த அருளை பெறுவதற்குண்டான ஆற்றலில்லாமல் இருந்ததையும், ‘‘பாழ் நரக குழிக்கே  அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனிமே’’ 79 என்பதனால் ஒழுக்கமற்ற தீயவரோடு தான் கூடியிருந்தேன் என்பதையும், வௌிப்படையாகவே
கூறுகின்றார்.

அபிராமி பட்டரை தான் முன்பு இருந்த நிலையை விளக்கி’’ விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய்ப்புளகம் ‘‘அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி  அறிவிழுந்து, சுரும்பிற் களித்து, மொழிதரு மாநி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர்’’ 94 என்ற வரிகளால் இறையருளை பெற்று நிலைப்படுத்தி கொள்ளும்  அந்த உயர்ந்த அன்பு பண்பினை உமையம்மையே தந்து தன் அடியவர்களுடன் சேர்த்துக் கொண்டதனால் முன்பு தனக்கில்லாத அன்பாகிய பண்ரை  உமையம்மையே படைத்ததனால் ‘‘உள்ளம் உருகும் அன்புபடைத்தனை’’ என்ற வரிகளால் சூட்டுகிறார். உடைத்தனை வஞ்சப்பிறவியை’’ பிறவி என்றால்  என்ன? வஞ்சப் பிறவி என்றால் என்ன? அதை எப்படி உடைப்பது? இந்த மூன்று வினாக்களுக்கும் விடை தேடும் வகையில் இந்த வரியை நாம் புரிந்து கொள்ள  வேண்டும். பிறவி என்பதை நாம் புரிந்து கொள்ள அதற்கு அடிப்படையான உயிராகிய ஆன்மாவை பற்றி. நாம் புரிந்து கொள்வது என்பது பிறவியை பற்றி உணர  உதவியாக அமையும். சித்தாந்த நோக்கில் ஆன்மாவானது மூன்று நிலைகளை உடையதாக திகழ்கிறது.

ஒன்று கேவல நிலை, இரண்டு சகல நிலை, மூன்று சுத்தநிலை, என்பதாகும். ‘‘கேவலநிலையில்’’  உயிரானது தன்உடன் தோன்றிய ஆனவமலம் என்ற  மலத்தினால் பாதிக்கப்பட்டு தன்னை தான் அறியாத நிலையில் எந்த விதமான அனுபவமும்மற்று, அறிவுமற்று, செயலுமற்று, பாஷானம் என்ற கல் போன்ற  நிலையில் ஆன்மாயிருக்கும். இதையே இன்றும் கல் ஊன்றுவதிலிருந்து உணரலாம். இதை கேவலநிலை என்பர் இது நம் கண்ணுக்கு தெரியாது. ‘‘சகல நிலை’’   கேவல நிலையில் இருக்கும் ஆன்மாவை கண்டு இறைவனானவன அதற்கு உதவும் பொருட்டு அதன் அறிவு, அதன் செயல், அனுபவம் இவைகள் சார்ந்து அந்த  ஆன்மாவிற்காக ஒரு கூட்டை (உடலை) இறைவன் வழங்குவார். இதை தான் (கூடுபெற்ற நிலையை) பிறவி என்பர் அப்படி அவரால் அமைக்கப்பட்ட அந்த  கூடானது.

பேரு, இழுவு, பிணி, மூப்பு, சாக்காடு, இருத்தலுடன் இவை எல்லாம் ஆன்மாவின் நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்பட்டு, உடல் அமைக்கப்படுகின்றது. அந்த உடல்  பெற்ற நிலையில் அந்த ஆன்மா அடையும் அனுபவத்திற்கே சகல நிலை என்று பெயர்.‘‘சுத்த நிலை’’  என்பது ஆன்மாவானது கேவல நிலையில்லிருந்து  மாறி சகலநிலையில் இறையருளால் ஞானம் பெற்று தன்னை உணர்ந்து, உலகம் உணர்ந்து. இவை இரண்டையும், இயக்குகிற இறைவனை உணர்ந்து அவன்  திருவடியே கலக்கிற பொழுது, அந்த திருவடி.யின் சேர்க்கையால் ஏற்படும் உடல் இல்லாமமேயே தன்னை உணரும் ஆற்றல் பெற்று முன்சொன்ன பேரு, இழுவு,  பிணி, மூப்பு, சாக்காடு இருத்தல் இயல்பு இவற்றிலிருந்து முழுவதுமாய் விலகி ( முக்தியடைந்து) இருப்பதே சுத்த நிலை எனப்படும். இந்த நிலையில்  ஆன்மாவானது ஆணவமலம், கன்மமலம், மாயமாமலம், என்ற மும்மலமுமற்று ஆனந்தவாரிதியில் தினைத்து நிற்கும். இந்த நிலை தூய்மை பெற்றமையால் சுத்த நிலை என்று வழங்கப்படுகிறது.

‘‘பிறவி’’ என்பது ஆன்மாக்களுக்கு உடல் அமைவதாகும். இன்பத்திற்கு காரணமாகின்ற பொழுது இறைவன்

கொடுத்த உடல் நற்பிறவி என்றும், இறையருள்ளந்து துன்பத்தில் விழுகின்ற பொழுது ‘‘வஞ்சப்பிறவி’’ என்றும் குறிப்பிடுகின்றார்.‘‘பின்னே திரிந்து உன்  அடியாரை பேணி பிறப்பறுக்க’’ 25 என்பதை கொண்டு உயர்ந்த பிறவியையும். ‘‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையுலே’’ 48 என்று  ‘‘வஞ்சப்பிறவியை’’ வேறுபடுத்தி குறிப்பிடுவதிலிருந்து மேலும் அறியலாம். வஞ்சப்பிறவியை உடைப்பது என்பது இறை திருவடியில் இரண்டர கலந்து  நிலாத்து நிற்பதை, மீண்டும் உடல் எடுக்காத நிலையை, தன் உணர்வு மறக்காத நிலையை தனக்கு ஏற்படுத்தி கொடுத்தவள் உமையம்மை என்று கூறுகின்றார்.  ஞானம் வந்த இறையருள் நிலையைத் தான் ‘‘உடைத்தனை வஞ்சப்பிறவியை’’ என்ற வார்த்தையால் சூட்டுகிறார். மேலும் பிறவியானது பக்குவமாகும் வரை  ஆன்மாவிற்கு பிறவியாகிற கூடு உடையாது ஒட்டிக் கொண்டேயிருக்கும் பக்குவம் என்பது ஆன்மாவானது தன்னை உடலாக உணராமல், தன்னை தன் இயல்பு  தன்மையான உயிராக உணர்வது ஞானமாகும்.

அந்த ஞானம் பெறும் வரை பிறவி தொடரும். அந்த ஞானத்தை உமையம்மையின் அருள் சக்தி. பதிவல்லாது வேறு எந்த ஒன்றினாலும் தர இயலாது ஞானம்  உமையம்மையினால் தரப்பட்டு குருவருளினால் விளக்கப்பட்டு பிறவி உடைவதற்கு காரணமாக அமைவதால் ‘‘உடைத்தனை வஞ்சப்பிறவிடாமல்’’என்கிறார்.  பிறவி என்று குறிப்பிடாமல் வஞ்சப்பிறவி என்று ஒன் குறிப்பிட்டார். எந்த ஒரு ஆன் விருதலைக்காக. ஆன்மாவிற்கு உடலை கொடுத்து அதன் மூலம் பிறவியை  ஏற்படுத்தினாரோ. அந்த உடலே தான்  பிறவி துன்பத்தில் நம்மை மீண்டும் மீண்டும் ஆழ்த்திவிடுகின்ற துன்பத்திற்கு காரணமாகிறது. ‘‘சுந்தரி’’ என்ற  உமையம்மையின் பெயரானது சுந்திரி என்று குறித்தாலும் பெயரை மட்டுமல்லாது  அது சார்ந்த உபாசகர்கள் உமையம்மையை குறிப்பிடுகின்ற மூல மந்திரத்தை  சூட்டுவதற்கு பயன்படுத்தும் கலைச் சொல்லாகும் அதை பாலாதிரிபுரசுந்தரி, லலிதாதிரிபுரசுந்தரி, மகாதிரிபுரசுந்தரி, சுந்தரி, திரிபுரசுந்தரி என்ற ஐந்து விதமான  வேறுபட்ட பயன்களை விளைவிக்க கூடிய உமையம்மையின் மூலமந்திரத்தை சூட்டும் மறைமுக சொல்லாகும் அந்த வகையிலே இந்த பாடலை ஐந்து வாக்கிய  பொருளாலும் மந்திரத்தையும் தேவதையையும், பயன்பாட்டையும், அடையும் சாதனத்தையும், மறைமுகமாக கூறியுள்ளார்.

முனைவர் பா. இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?