×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

134. கவயே நமஹ (Kavaye namaha)

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு ‘பகவத்குண தர்ப்பணம்’ என்ற அற்புதமான உரையை வழங்கியவர் பராசர பட்டர். அவரைப் பெரிய ஞானி என்றும் ரிஷிகளுக்குச் சமமானவர் என்றும் திருவரங்கத்தில் அடியார்கள் கொண்டாடினார்கள். ஆனால், திருவரங்கத்தில் வாழ்ந்த ஆலவாயன் என்பவன் பராசர பட்டரின் மேல் பொறாமை கொண்டான். “பராசரர் என்பது வியாசரின் தந்தைபெயர். அந்த மகரிஷியின் பெயரைச் சுமக்கும் தகுதியே இல்லாதவர் இவர் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!” என்று சவால் விட்டான். ஒருநாள் ஆலவயானின் வீட்டுக்குள் நுழைந்த ஒரு பாம்பு, ஒரு பானைக்குள் சென்று உடலைச் சுருட்டிக் கொண்டு விட்டது. அந்தப் பானையின் வாயை ஒரு துணியால் மூடிய ஆலவாயன் அந்தப் பானையைப் பராசர பட்டரின் வீட்டுக்கு எடுத்து வந்தான். பட்டரின் முன் பானை வைத்து விட்டு, “நம் கண்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் காணவல்லவர்கள் தான் ரிஷிகள். பராசர ரிஷியின் பெயரைச் சுமக்கும் உங்களால் இந்தப் பானைக்குள் என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான் ஆலவாயன்.

பட்டர் சிரித்தபடி, “இதற்குள் குடை இருக்கிறது!” என்றார். “என்ன? குடையா? இந்தப் பானைக்குள் குடை இருக்கிறது என்று ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டான். பராசர ரிஷியின் பெயரைச் சுமப்பதற்கான எந்தத் தகுதியும் உமக்கில்லை!” என்று சொன்ன ஆலவாயன், பானையின் வாயைத் திறந்து பாம்பை வெளியே விட்டான். அடைபட்டிருந்த பாம்பு விறுவிறுவென வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டது. “இது என்ன குடையா?” என்று கேட்டான். புன்னகைத்த பராசர பட்டர், “பொய்கையாழ்வாரின் பாடல் உனக்குத் தெரியுமா? சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள்  என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு. திருமால் எங்கே சென்றாலும் ஆதிசேஷன் அவருக்குக் குடையாக இருக்கிறார். அவர் அமர்ந்தால் ஆசனமாகிறார். அவர் நின்றால் பாதுகையாகிறார். சயனித்தால் படுக்கையாகிறார்.

(நாம் டேபிள்மேட்டைப் பலவிதமான முறைகளில் பயன்படுத்துவது போல, ஆதிசேஷனும் பலவிதமான வடிவங்களில் திருமாலுக்குத் தொண்டு செய்கிறார்) அந்த வகையில் பெருமாளின் குடையாக ஆதிசேஷன் என்னும் பாம்பு இருப்பதால், உன் பானைக்குள் குடை இருக்கிறது என்று மறைமுகமாகப் பாம்பைக் குறிப்பிட்டுச் சொன்னேன்!” என்றார் பராசர பட்டர். திகைத்துப் போன ஆலவாயன், பட்டருக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான். அப்போது பட்டரின் சீடரான நஞ்ஜீயரிடம் மற்ற சீடர்கள், “நம் குரு எப்படி பானைக்குள் பாம்பு உள்ளதைச் சரியாகச் சொன்னார்?” என்று கேட்டார்கள். அதற்கு நஞ்ஜீயர், “நம் குருவான பராசர பட்டர் சாட்சாத் திருவரங்கநாதனின் அவதாரம் ஆவார்.

அவர் எழுதிய விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் இதை அவரே சூசகமாகக் கூறியுள்ளார்  “பூயோ பட்ட பராசர இதி பணிதோ ஸ்ரீரங்கபர்த்து: ஸ்வயம்” என்று. பரம்பொருளான திருமால் நம் கண்களுக்கு அப்பாற்பட்டவற்றையும் காணவல்லவர் ஆதலால் ‘கவி:’ என்றழைக்கப்படுகிறார். உபநிஷத் திருமாலை “அத்ருஷ்டோ த்ரஷ்டா  அவனை யாராலும் காண முடியாது, ஆனால் அனைவரையும் அவன் காண்கிறான்” என்கிறது. அந்தத் திருமாலின் அவதாரமானபடியால், நம் குருநாதரும் பிறரால் காணமுடியாதவற்றைக் காணவல்லவராகத் திகழ்கிறார்!” என்று கூறினார். இவ்வாறு நம் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயத்தைக் காணவல்ல பரம்பொருளான திருமால், ‘கவி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 134வது திருநாமம். “கவயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு திவ்வியமான கண் பார்வையைத் திருமால் அருளுவார்.

135. லோகாத்யக்ஷாய நமஹ (Lokaadhyakshaaya namaha)

பூமியைக் கடலுக்குள் ஒளித்து வைத்த ஹிரண்யாட்சனை வதம் செய்து, வராகப் பெருமாள் பூமியை மீட்டார். அப்போது பூமிதேவி, “சுவாமி! இந்தக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும். பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கும் நம் குழந்தைகளைக் காக்க வழி சொல்லுங்கள்!” என்று கேட்டாள். அதற்கு வராகர், “என் பக்தர்கள் இளமைக் காலத்தில் நல்ல மலர்களைப் பூமாலையாகவும், எனது நாமங்களைப் பாமாலையாகவும் தொடுத்து எனக்குச் சமர்ப்பித்தால், முதுமைக் காலத்தில் அவர்கள் என்னை மறந்தாலும், நான் அவர்களை மறவாமல் காத்துப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்பேன்!” என்றார்.
“நீங்கள் சொன்ன இந்த ரகசியத்தை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகப் பூமியில் நான் அவதரிக்க விரும்புகிறேன்! அனுமதி தாருங்கள்!” என்று திருமாலிடம் கோரினாள், பூமிதேவி. அதற்குத் திருமால், “பூமா! சற்றுப் பொறுத்திரு! உனக்கான சரியான தந்தையைத் தேர்ந்தெடுக்கிறேன். அதன்பின் அந்த நபருக்கு மகளாக நீ போய்ப் பிறக்கலாம்!” என்றார்.

சில யுகங்கள் கடந்தன. மதுரையை ஆண்ட வல்லபதேவன் எனும் பாண்டியனின் உள்ளத்தில் எழுந்த ஐயத்தைப் பெரியாழ்வார் அவனது அரசவைக்கு வந்து தீர்த்தார். பெரியாழ்வாரைக் கொண்டாடும் விதமாக மன்னன் ஓர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தான். யானையின் மேல் அவரை அமர வைத்து நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்து வந்தான். அச்சமயம் பெரியாழ்வாருக்குக் காட்சியளிப்பதற்காக ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனத்தில் அங்கே எழுந்தருளினார் திருமால். திருமாலைத் தரிசித்த பெரியாழ்வார், அவரிடம் தனக்கென ஒரு பிரார்த்தனையை முன்வைக்காமல், “எம்பெருமானே! உனது திருமேனி அழகெல்லாம் வெளிப்படும்படி நீ இப்படி வெளியே வந்து விட்டாயே! பொல்லாத இந்த ஊரிலுள்ள யாருடைய கண் எச்சிலாவது உன்மீது பட்டால் நான் என்ன செய்வேன்? நீயும், உன் வடிவழகும், ஸ்ரீதேவி பூதேவியும், உன் கரங்களிலுள்ள சக்கரமும் பல்லாண்டு பல்லாண்டு நன்றாக இருக்க வேண்டும்!” எனத் திருமாலை வாழ்த்திப் பாசுரங்களைப் பாடினார்.

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா  உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்ப் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே”

அப்போது பூமிதேவியிடம் திருமால், “நம்மீது இவருக்குள்ள பொங்கும் பரிவைப் பார்த்தாயா? இப்படிப்பட்டவருக்குத் தான் நீ மகளாகச் சென்று பிறந்து, நான் உன்னிடம் சொன்ன ரகசியத்தை  மக்களுக்கு வெளியிட வேண்டும்!” என்று கூறினார். பூமிதேவியும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் அவதரித்தாள். அவளைக் கண்டெடுத்த பெரியாழ்வார் ‘கோதை’ எனப் பெயர்சூட்டி அவளை வளர்த்து வந்தார். அந்தக் கோதை வராகர் தனக்குச் சொன்ன ரகசியத்தைப் பிறருக்கு உபதேசித்ததோடு மட்டும் நிற்கவில்லை. நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து, தானும் இறைவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்துப் பாமாலைப் பாடிக் கொடுத்து, அவனுக்குத் தொண்டு செய்யும் முறையைக் காட்டினாள். அரங்கனே அவளை ‘ஆண்டாள்’ என்று அழைத்தான். அவளைக் கடிமணம் புரிந்தான் என்பது நாம் அறிந்த வரலாறு.

பூமிதேவிக்குத் தந்தையாவதற்குச் சரியானவர் பெரியாழ்வார் என்று தேர்ந்தெடுத்து அவருக்கு மகளாகப் பிறக்கும் படி பூமிதேவியிடம் சொன்னது போல, ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்ற நபரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலம் அச்செயலை நிறைவேற்றுவதால் திருமால் ‘லோகாத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார். ‘லோக:’ என்றால் செயலைச் செய்வதற்கான அதிகாரி என்று பொருள். தகுதியான அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் திருமால் ‘லோகாத்யக்ஷ:’ எனப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 135வது திருநாமம். “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.” என்ற குறளும் இங்கே நோக்கத்தக்கது. “லோகாத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து விஷயங்களையும் சரியாகத் தேர்வு செய்யும் திறனைத் திருமால் அருளுவார்.

136. ஸுராத்யக்ஷாய நமஹ (Suraadhyakshaaya namaha)

கேனோபநிஷத்தில் இடம்பெற்றுள்ள சரித்திரம் இது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது. அந்த யுத்தத்தின் முடிவில் தேவர்கள் வெற்றி பெற்றனர். ஒரு யாகம் செய்து தங்கள் வெற்றியைக் கொண்டாட வேண்டுமென்று தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். யாகம் நிறைவடைந்த பின், வெற்றி விழா ஒன்றையும் நடத்தினார்கள். அந்த விழாவின்போது, போரில் பெற்ற வெற்றிக்கு “நானே காரணம்!” “நானே காரணம்!” என அக்னி, வாயு, வருணன் போன்ற ஒவ்வொரு தேவரும் பேசினார்கள். அப்போது அங்கே ஒரு யட்சன் வந்து தேவர்களைப் பார்த்துச் சிரித்தான். “யார் நீ?” என்று கேட்டான் தேவேந்திரன். “அருகில் வா, சொல்கிறேன்!” என்றான் அந்த யட்சன். தான் போகாமல், தனக்குப் பதிலாக அக்னி தேவனை யட்சனிடம் அனுப்பினான் இந்திரன். “யார் நீ?” என அக்னியைப் பார்த்துக் கேட்டான் யட்சன். “நான் நெருப்புக்கு அதிபதி.

எதை வேண்டுமானாலும் எரிப்பேன்” என்றார் அக்னி தேவன். ஒரு புல்லை அக்னியின் முன் போட்ட யட்சன், “இதை உன்னால் எரிக்க முடியுமா?” என்று கேட்டான். “இதோ எரிக்கிறேன்!” என்று சொன்ன அக்னி எவ்வளவோ முயன்றும், அவரால் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. அவமானத்துடன் திரும்பினார். அடுத்தபடியாக வாயு தேவன் யட்சனிடம் சென்றார். “நீ யார்?” என்று கேட்டான் யட்சன். “நான் காற்றுக்கு அதிபதி. எதை வேண்டுமானாலும் ஊதித் தள்ளுவேன்!” என்றார் வாயு. “இந்தப் புல்லைப் பறக்கச் செய்!” என்றான் யட்சன். வாயு முழுவேகத்தில் வந்த அதன் மேல் மோதிய போதும் புல் அசையவே இல்லை. அவரும் அவமானத்துடன் திரும்பினார். இறுதியாக இந்திரன், “நானே இந்த யட்சனை நேரடியாகச் சந்திக்கிறேன்!” என்று சொல்லி யட்சனை நோக்கிச் சென்றான். உடனே யட்சன் மறைந்துவிட்டான். “பார்த்தீர்களா? என்னைக் கண்டு அஞ்சி அந்த யட்சன் ஓடி ஒளிந்து கொண்டான்!” என்று ஆணவத்துடன் சொன்னான் இந்திரன்.

அப்போது வானில் சிம்ம வாகனத்தில் உமாதேவி தோன்றினாள். “மூடனே!” என்று இந்திரனை அழைத்த அவள், “பரம்பொருளான திருமால் தான் யட்சன் வடிவில் வந்தார். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் அந்தர்யாமியாக இருந்து போர் புரிவதற்கான சக்தியை அளித்தார். உள்ளிருந்து அவர் தந்த சக்தியால் போரில் வென்ற நீங்கள், அவரை மறந்து விட்டு, நீங்கள் ஒவ்வொருவருமே வெற்றிக்குக் காரணம் எனக் கருதித் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்களது கர்வத்தை அடக்குவதற்காகவே திருமால் யட்சன் வடிவில் வந்தார். அவரது அருள் இல்லாவிட்டால், அக்னியால் ஒரு புல்லைக் கூட எரிக்க முடியாது. வாயுவால் ஒரு புல்லைக் கூட அசைக்க முடியாது என்பதை உணருங்கள்!” என்று கூறினாள். “என்னைக் கண்டதும் ஏன் அவர் அஞ்சி ஓடினார்?” என்று கேட்டான் இந்திரன். “அவர் அஞ்சி ஓடவில்லை.

தேவர்களுக்கெல்லாம் நீ தலைவன். உனது தொண்டர்களான மற்ற தேவர்களுக்கு முன் உன்னை அவமானப் படுத்தி விட்டால் நாளை அவர்கள் உன்னைத் தலைவனாக மதிக்க மாட்டார்கள் அல்லவா? அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் அவர் உன்னை அவமானப் படுத்தாமல் விட்டுவிட்டார்!” என்று கூறினாள் உமா.மேலும், “தேவர்களான உங்களுக்கு சுரர்கள் என்று பெயர். சுரர்களாகிய உங்கள் அனைவருக்கும் தலைவராகத் திருமால் திகழ்வதால் ‘ஸுராத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்!” என்று கூறிவிட்டுச் சென்றாள். தேவர்களுக்கெல்லாம் தலைவனாகத் திருமாலைக் காட்டும் ‘ஸுராத்யக்ஷ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 136வது திருநாமம். “ஸுராத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அலுவலகங்களில் பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவை தாமதமின்றிக் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

137. தர்மாத்யக்ஷாய நமஹ (Dharmaadhyakshaaya namaha)

மறைந்திருந்து ராமன் எய்த பாணம் வாலியைத் தாக்கியது. சொல்லொக்கும் சுடுசரத்தின் தாக்கத்தால் சுருண்டு விழுந்தான் வாலி. அதில் ‘ராம’ என்ற நாமத்தைக் கண்டான். ராமனும் மெல்ல வந்து தன் எதிரே நிற்பதைக் கண்டான் வாலி. ராமனைப் பார்த்து, “நீ இப்படி ஒரு செயலைச் செய்யலாமா? ரகு குலத்துக்கு ஏற்ற செயலா இது? மறைந்திருந்து என்னைத் தாக்கி விட்டாயே! எவனோ ஒருவன் உன் மனைவியை அபகரித்ததற்கு என்னை ஏன் பலியாக்கினாய்? உன் மனைவியை மீட்க வேண்டுமென்றால் அதற்கு ஏன் சுக்ரீவனிடம் சென்றாய்? என்னிடம் வந்திருந்தால் நானே ராவணனை மாய்த்து உன் மனைவியை மீட்டுத் தந்திருப்பேனே! மனைவியைப் பறிகொடுத்ததால் புத்தி பேதலித்துப் போய் செய்வதறியாது எதையோ செய்து விட்டாய்!” என்றெல்லாம் பலவாறு பேசினான் வாலி. அப்போது லட்சுமணன் குறுக்கிட்டு வாலிக்குப் பதில் சொன்னான். அதைக் கம்பனின் வரிகளைக் கொண்டு அனுபவிப்போம்.

முன்புநின் தம்பி வந்து
சரண்புக ‘’முறையிலோயைத்
தென்புலத்து உய்ப்பென்’’ என்று
செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக் காகி
‘’அடைக்கலம் யானும்’’ என்றி
என்பது கருதி  அண்ணல்,

மறைந்து நின்றெய்தது என்றான். “வாலி! என் அண்ணன் ஏன் உன்னை மறைந்திருந்து தாக்கினார் தெரியுமா? முன்பு மாயாவி என்ற அரக்கனோடு நீ போர் புரிகையில் இருவரும் ஒரு குகைக்குள் சென்று விட்டீர்கள். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளிவரவில்லை. பல நாட்கள் கழித்து மாயாவியின் ரத்தம் மட்டும் குகையின் வாயில் வழியே ஓடி வந்தது. அது உன்னுடைய ரத்தம் என அஞ்சிய சுக்ரீவன், மாயாவி உன்னைக் கொன்று விட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டான். மாயாவியால் மற்ற வானரர்களுக்கும் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்றெண்ணி, குகையின் வாயிலை ஒரு பாறையால் மூடிவிட்டு நாட்டுக்கு வந்தான். உன் மரணத்தை எண்ணி மிகவும் கலங்கினான். ஆனால் மற்ற வானரர்கள் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்யத் திட்டமிட்டார்கள். அச்சமயம் குகையிலிருந்து வெளிவந்த நீ, சுக்ரீவன் உன் பதவியை அபகரிக்க எண்ணுவதாகக் கருதி அவனைக் கொல்லப் போனாய். சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணாகதி செய்தான். அப்போது அவன் செய்த சரணாகதியை நீ ஏற்றாயா? இல்லை! சரணடைந்த சுக்ரீவனைக் கொல்லப் பார்த்தாய்!

சரணம் என்று சொன்னவனை ஏற்காதவனான உனக்கு என்றுமே அபயம் அளிக்கக்கூடாது என ராமன் முடிவெடுத்தான். ஒருவேளை ராமன் உன் முன்னே வந்து நின்றிருந்தால், நீ ராமனிடம் சரணாகதி செய்து பிழைத்துக் கொள்ளப் பார்ப்பாய். நீயோ உன்னிடம் சரணாகதி செய்தவனை ஏற்றுக்கொள்ளாதவன். அப்படிப்பட்ட நீ செய்யும் சரணாகதியை, ராமன் எந்நாளும் ஏற்கமாட்டான்! இறைவன் தன் மீது கருணை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், சக மனிதர்களிடம் தான் கருணையோடு நடந்து கொள்ள வேண்டாமா? சகமனிதனிடம் கருணை காட்டாத ஒருவன், இறைவன் தன்மீது கருணை காட்ட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அதனால் தான் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூட உனக்கு அளிக்காமல் மறைந்திருந்து உன் மேல் பாணத்தை எய்தான்!” என்றான் லட்சுமணன்.

இவ்வாறு மனிதர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும், அந்தச் செயலிலுள்ள தர்மம்  அதர்மம் அனைத்தையும் திருமால் நன்கு கவனித்து வருகிறார்.
அந்தந்தச் செயல்களுக்கேற்ற படி அவர்களுக்குப் பலனையும் தருகிறார். ‘தர்ம:’ என்பது நாம் செய்யக் கூடிய செயல்களைக் குறிக்கிறது. நமது அனைத்துச் செயல்களையும் கவனித்து வந்து அவற்றுக்கேற்றபடி பலனளிக்கும் திருமால் ‘தர்மாத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 137வது திருநாமம். “தர்மாத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள், என்றும் தர்மத்தின் பாதையிலிருந்து விலகாமல் இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

138. க்ருதாக்ருதயே நமஹ (Kruthaakruthaye namaha)

கோவிந்தசாமி என்பவர் திருப்பதியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பெரிய மன்னராகி ராஜ போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருமுறை கிருஷ்ண லீலை சொற்பொழிவு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். அங்கே சொற்பொழிவாளர் ஐந்து லட்சம் கோபிகைகளோடு கண்ணன் நடனமாடிய ராச லீலையைப் பற்றி விவரித்தார். அதை மேலோட்டமாகக் கேட்ட கோவிந்தசாமி, அது ஏதோ காமக் கேளிக்கை எனக் கருதினார். இயல்பாகவே உலகியல் இன்பங்களை நோக்கிச் செல்லக் கூடியதான அவரதுமனம், அந்த ராச லீலையென்னும் கேளிக்கையைக் காண வேண்டுமென ஏங்கியது. அந்த ஏக்கம் தவிப்பாக மாறியது. அவ்வூரில் இருந்த ஒரு ஞானியைச் சந்தித்துத் தனது ஏக்கத்தைப் பற்றித் தெரிவித்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த ஞானி, “ராச லீலை என்பது நீ நினைப்பது போல உடல் ரீதியிலான காமம் அல்ல. வைகுண்டத்தை அடைந்த ஜீவாத்மாக்கள், அங்கே பரமாத்மாவோடு உறவாடுவதைத் தான் இந்த ராச லீலை மூலமாகக் கண்ணபிரான் உருவகப் படுத்தி நமக்குக் காட்டியுள்ளான்.

அது ஜீவாத்மாபரமாத்மாவுக்கு இடையே உள்ள பரிமாற்றம். எனவே அதைக் காமக் கேளிக்கையாக எண்ணுவதை விட்டு, நீ பரமாத்மாவை அடையும் நோக்கில் அவரது திருவடிகளில் சரணாகதி செய்!” என்று உபதேசித்தார். ஆனாலும் கோவிந்தசாமி மனம் தளரவில்லை. அது காமக்கேளிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது அந்த ஞானி சொல்வது போல் ஜீவாத்மாபரமாத்மா இடையிலான பரிமாற்றமாக இருந்தாலும் சரி, அந்த ராச லீலையைக் கண்டே தீர வேண்டுமென்ற நோக்கில் கடும் தவம் புரிந்தார். அவர் முன் தோன்றிய கண்ணன், “குழந்தாய்! கோவிந்தசாமி! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். இறைவன் நம்முன் தோன்றினால், அவரிடம் முக்தியைத் தவிர வேறெதையும் வேண்டல் ஆகாது என்று பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தார் கோவிந்தசாமி. சடக்கென்று, “எனக்கு மோட்சம் வேண்டும்!” என்று கேட்டார். “அப்படியானால் ராச லீலையைக் காண்பதில் உனக்கு விருப்பமில்லையா?” என்று கேட்டான் கண்ணன்.

“அதிலும் ஆசை தான். ஆனால் முக்தியடைய வேண்டுமென்ற ஆசையும் உன்னைத் தரிசித்தவுடன் வந்து விட்டது!” என்றார் கோவிந்தசாமி. புன்னகைத்தபடியே, “முதலில் ராச லீலையை முழுவதுமாக உனக்குக் காட்டுகிறேன். அதை நீ கண்டுகளித்தபின் உனக்கு முக்தியும் அளிக்கிறேன்!” என்று சொன்ன கண்ணன், பிருந்தாவனத்தில் நடந்த ராசக் கிரீடையை அப்படியே மீண்டும் ஒருமுறை கோவிந்தசாமிக்காக நடத்திக் காட்டினான்.“இப்போது நான் முக்தி பெறலாமா?” என்று கேட்டார் கோவிந்தசாமி. அதற்குக் கண்ணன், “உன் மனதில் இன்னும் உலகியல் ஆசைகள் பல உள்ளன. அதனால் நீ அடுத்த பிறவியில் மன்னர் குலத்தில் பிறந்து சுகபோகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு என் திருவடிகளை வந்தடைவாய்!” என்று கூறி விட்டு மறைந்தான். இச்சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்,

“மாக மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும்
மலரடி கண்ட மாமறையாளன் தோகை மாமயில் அன்னவர் இன்பம்
துற்றிலாமையிலத்த இங்கு ஒழித்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே
போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடியிணை அடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!”

என்று பாடியுள்ளார். கோவிந்தசாமியும் மன்னனாய் வாழ்ந்து உலகியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு அதன்பின் முக்தியும் அடைந்தார் என்பது வரலாறு. இவ்வாறு தன் அடியார்களுக்கு இகபர சுகங்கள் இரண்டையும் வழங்குபவர் திருமால். ‘க்ருத:’ என்பது இம்மைக்கான பலன்களைக் குறிக்கும். ‘அக்ருத:’ என்பது மறுமைக்கான பலன்களைக் குறிக்கும். இம்மைமறுமை (க்ருத+அக்ருத=க்ருதாக்ருத:) இரண்டு பலன்களையும் வழங்குவதால் ‘க்ருதாக்ருத:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 138வது திருநாமம். “க்ருதாக்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு இம்மை, மறுமை இரண்டுக்குமான பலன்களையும் குறைவின்றித் திருமால் அருளுவார்.

டாக்டர். உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!