பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் முருகன்  வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து  விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை 5.30  மணிக்கு வள்ளியம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு சிவன் கோயிலை அடைந்தார்.  மாலை சாயரட்சை தீபாராதனை நடந்த பின் குமரவிடங்க பெருமான் தபசு காட்சிக்கு  கோயிலில் இருந்து எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக மாலையில் சிவன் கோயில் வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கும் வள்ளியம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க மயில்  வாகனத்திலும், வள்ளியம்பாள் பூஞ்சப்பரத்திலும் ரதவீதிகளை சுற்றி மீண்டும் இரவு திருக்கோயில் வந்தடைந்தனர். இரவு 10 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு குமரவிடங்கபெருமான்வள்ளி திருக்கல்யாண வைபவம் நடந்தது. உத்திரத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான  பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்திருந்தனர். இதேபோல் திருக்கோயிலின்  உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி  உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.  ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: