மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோயிலில் 91ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது. மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் பகுதியில் 90 ஆண்டு பழமைவாய்ந்த மைதானம் மாரியம்மன் கோயில் உள்ளது இங்கு 91ம் ஆண்டு  குண்டம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  காலை 8.00 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து நாதஸ்வர மேளதாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும்  ஆடிப் பாடி வந்தனர்.

காலை 10 மணிக்கு கோயில் தலைமை பூசாரி மோகன் குமார்  மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கையில் சூலாயுதம் எடுத்து குண்டம் இறங்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் குண்டத்தை வலம் வந்து  குண்டத்தில் மல்லிகை பூச்செண்டு, எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வீசி எறிந்தார். பக்தர்கள் ‘அம்மா தாயே மாரியம்மா’ என முழங்க தலைமை பூசாரி, முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து உதவி பூசாரிகள், பக்தர்கள் கரகம் எடுத்தும் கோலக்கூடை  எடுத்தும் குண்டம் இறங்கினர். நீண்ட வரிசையில் நின்று ஆண்களும் பெண்களும் குண்டம் இறங்கினர். விழா ஏற்பாடுகளை தக்கார் மணிகண்டன் செயல் அலுவலர்  பெரிய மருது பாண்டியன், விழா  குழுவினர் கே.வெள்ளிங்கிரி, என்.பாலன், பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில்  போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: