காளியம்மன் கோயில் திருவிழாவில் தேரோட்ட உற்சவம் கோலாகலம்

தோகைமலை: தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எருமை கிடாய்களை வெட்டி வழிபாடு செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளையில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டுக்கான திருவிழாவின் முதல் நாள் காளியம்மனுக்கு பூப்போடுதல், கரகம் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertising
Advertising

அதனை தொடர்ந்து கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், கரகாட்டம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பின்னர் கள்ளை காளியம்மன் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பகவதி அம்மன் முத்து பல்லக்கிலும், கருப்பசாமி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். அப்போது வாண வேடிக்கை மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

பின்னர் காளியம்மன் தேர், முத்து பல்லக்கு, குதிரை வாகனம் ஆகியவை கோயில் வளாகம் வந்தவுடன் அங்கு தயார் நிலையில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டு இருந்த எருமை கிடாய்களை வெட்டி கள்ளை காளியம்மனுக்கு பலி கொடுத்தனர். அதன் பிறகு மஞ்சள் நீராடுதல், கரகம் எடுத்து விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளை, சுக்காம்பட்டி, மங்காம்பட்டி, சின்னகள்ளை, குழந்தைபட்டி, மணியகவுண்டன்பட்டி, பூவாயிபட்டி, முடக்குபட்டி ஆகிய 8  பட்டி ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர். திருவிழாவில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: