லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் : 5 தேர்களை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்

லால்குடி: லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் 5 தேர்களை திரளான  பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். லால்குடியில் சப்தரீஸ்வரர் கோயில் சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் ஆண்டு தோறும். தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம்  கடந்த மார்ச் 11ம் தேதி நடைபெற்றது. 10ம்தேதி விக்னேஸ்வரர், 11ம் தேதி துவஜாரோகணம், 12ம் தேதி பல்லக்கும் 13ம் தேதி அன்ன வாகனம் மற்றும் பல்லக்கு புறப்பாடு, 14ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதியுலா, 15ம் தேதி கைலாச வாகனம், சிம்ம வாகனம் புறப்பாடு நடைபெற்றது. 16ம் தேதி சோமாஸ்கந்தருக்கு  திருக்கல்யாணம் நடைபெற்றது. 17 மற்றும் 18 ஆகிய தேதியில் குதிரை வாகனம் புறப்பாடு நடந்தது. இதில் வாண வேடிக்கைகள் நடந்தன.

 விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  தொடர்ந்து முதல் தேரில் விநாயகர் 2வது தேரில் சுப்ரமணியர்  திருவீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து மிகப் பழைமையான மெகா தேரில் தேரில் சோமாஸ்கந்தர் சுவாமியும், நான்காவதாக பெருந்திரு பிராட்டியர் அம்மனும், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரரும் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய தேரோடும் வீதிகளில் சென்ற தேர்கள் மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு லால்குடியில் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர், பானக்கரம் ஆகியவை சிவ பக்தர்களும், தொண்டு நிறுவனங்களும் பக்தர்களுக்கு கொடுத்தனர். லால்குடி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், இணை ஆணையர் ராணி, ஆர்டிஓ பாலாஜி, தாசில்தார் சத்தியபாலகங்காதரன், பேரூராட்சி செயல் அலுவலர் குமரன், அதிமுக லால்குடி ஒன்றிய செயலாளர் நடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா  ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவி ஆணையருமான ஜெயப்பிரியா தலைமையில் கோயில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் குருக்கள் உட்பட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். லால்குடி டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: