×

காரடையான் நோன்பு உப்பு அடை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு (பதப்படுத்தியது)  1 கப்
காராமணி (தட்டைப் பயிறு)   ¼ கப்
உப்பு  தேவையான அளவு
தண்ணீர்  2 கப்
இஞ்சி    ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய்   3
தாளிக்க
நல்ல எண்ணெய்   4 ஸ்பூன்
கடுகு   ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு   3 ஸ்பூன்
கறிவேப்பிலை  ஒரு கொத்து
 
செய்முறை:

காராமணியை (தட்டைப்பயிறு) வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதனை தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும். பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக்கவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும். கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும். பின் அதனுடன் அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் தேவையான உப்பினைச் சேர்த்து தள தள என கொதிக்க வைக்கவும். பின் அதனுடன் குழைய வேக வைத்த காராமணி, வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.  பின் அதனுடன் பதப்படுத்திய பச்சரிசி மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அதனை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக்கலவையில் சிறுஉருண்டை எடுத்து வடை போல் தட்டவும். இவ்வாறே எல்லா மாவினையும் தட்டவும். இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை தயார்.

Tags : Caratyan ,
× RELATED காரடையான் நோன்பு இனிப்பு அடை