×

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேர்த் திருவிழா : உறையூர் நாச்சியார் கோயிலில் நம்பெருமாள் சேர்த்தி சேவை

திருச்சி: ஸ்ரீங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதிபிரம்மோத்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. நான்காம் திருநாளான கடந்த 16ம் தேதி கருட சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6ம் திருநாளான நேற்று நம்பெருமாள் உறையூரில் எழுந்தருளும், சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரி ஆற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு காலை 11 மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலை அடைந்தார்.

உறையூர் மாப்பிள்ளையான நம்பெருமாளுக்கு வரவேற்பு அளித்து, உபசார நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடந்தது. நள்ளிரவு வரை நாச்சியாருடன் சேவை சாதித்த நம்பெருமாள் அதிகாலை 1.30 மணிக்கு நாச்சியாரிடமிருந்து பிரியாவிடை பெற்று புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்த அவருக்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் கண்ணாடி அறை சென்றடைந்தார். பங்குனி தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Nirrurumal ,Srirangam ,Nalliyur Nachiyar ,
× RELATED ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...