×

குகைக்குள் இருந்து நோய் தீர்க்கும் குமரன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான். அந்த குமரனுக்கு, அறுபடையனுக்கு நடைபெறும் முக்கிய விழா தான் தைப்பூச திருவிழா. தைப்பூச நாளில் முருகப்பெருமானை வணங்கினால் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து தீங்குகளில் இருந்து காத்தருளுவான். மலை மேல் அமர்ந்து இருந்து அருள்பாலிக்கும் குமரன், குமரி மாவட்டம் செக்கர்கிரி மலையில் குகைக்குள் இருந்து அருள்பாலிக்கிறான். பல்வேறு விதமான மூலிகைகள் நிறைந்த செக்கர்கிரி மலை, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ளது. சித்தர்கள் இந்த மலையில் தங்கி முருகப்பெருமானை பூஜித்ததாக வரலாறு உண்டு. இந்த கோயிலில் லாட சுவாமி என்ற சித்தரின் சிலை உள்ளது. இதில் அவர் ஜடாமுடியுடன் கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் உத்திராட்சை மாலைகளுடனும் காட்சி அளிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமி பல்வேறு விதமான நோய்களை தீர்ப்பவராக உள்ளார்.

இங்குள்ள மூலிகைகள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி உள்ளன. செக்கர்கிரி முருகப்பெருமான் மாடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி அவ்வை மூதாட்டிக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடா பழம் வேண்டுமா? என கேட்டதாகவும் வரலாறு கூறுகிறார்கள். குமரி மாவட்டத்தில் குகைக்குள் முருகப்பெருமான் அமர்ந்து இருப்பது இங்கு தான் என்ற சிறப்பும் செக்கர்கிரி மலைக்கு உண்டு.  சித்தர் லாடசுவாமியின் சீடர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர். லடாசுவாமி சீடர்களில் ஒருவரான ஆவுடையம்மாள் என்பவர் , லடா சுவாமி முக்தி அடைந்த பின்னர் கோயில் பூைஜகளை கவனித்து வந்துள்ளார். பின்னர் இவர் முக்தி அடைந்ததும், சுப்பிரமணியசுவாமி சன்னதிக்கு செல்வதற்கு முன்பாகவே அவருக்கு சமாதி  அமைக்கப்பட்டு உள்ளது.  

மலைக்கோவிலில் பால் கிணறு ஒன்றுள்ளது. இதில் உள்ள தண்ணீர் பால் போன்று சுவையாக இருக்கும். எவ்வித கோடையிலும் இந்த கிணறு வற்றியது  இல்லை. பக்தர்களுக்கு தீர்த்தமாக கிணற்று நீர் வழங்கப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த தீர்த்த நீரை அருந்தினால் அவர்கள் உடலில் உள்ள நோய் தீர்ந்து விடுகிறது. இதே போல் இந்த கோயிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் முடிந்ததும் கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த கஞ்சியை கர்ப்பிணிகள் பருகினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எந்த வித குறைபாடும் இல்லாமல் முருகப்பெருமான் அருளுடன், ஆரோக்கியமாக பிறக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

சுப்பிரமணியசுவாமி சன்னதிக்கு மேல் உள்ள பாறை பகுதியில் ராமர், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் முன் பகுதியில் உள்ள ஆவுடையம்மாள் சன்னதிக்கு முன்பாக காளி கோயில் உள்ளது. செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசம், சூரசம்ஹார விழா, வைகாசி விசாகம் போன்றவை சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடக்கும். தைப்பூச நாளில் செக்கர்கிரிக்கு வந்து சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா வித நன்மைகளையும் முருகப்பெருமான் நடத்தி காட்டுவார் என்பதும் நம்பிக்கை ஆகும். 

Tags : cave ,
× RELATED சிவசக்தி குகத்தலமான திருப்பரங்குன்றம்