திருமணம், மகப்பேறு அருளும் பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் முனுகப்பட்டு எனும் பகுதியில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோயில். உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோயில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.  

ஆலய அமைப்பு:

ஆரணிசெய்யாறு சாலையின் ஓரத்தில், கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி ஆலயம் அமைந்துள்ளது. சாலையின் கீழ்ப்புறம் வாழ்முனி, செம்முனி, குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் அமைந்துள்ளன. சாலையின் மேற்புறம் பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுர வாசலில் அமைந்துள்ளது. இந்திரனும், எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அடிவாரத்தில் சிறிய விநாயகர் சன்னதி தெற்கு முகமாய் உள்ளது.

அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னி முனியான அக்னி பகவானும், அதனையடுத்து நவக்கிரகங்களாக நவ முனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்ட முனிகளும், சப்தரிஷிகள் எனும் சப்தமுனிகளும் மேற்கு, வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாக காட்சி தருகின்றனர். மன்னார்சாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில் சிலா ரூபத்தில் காண முடிவது சிறப்பானது.  

இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னதி உள்ளது. கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், முருகனும் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும். இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்பாலிக்கிறார்.   

இக்கோயிலின் தலவிருட்சமாக வெப்பாலை மரம் உள்ளது. கோயிலுக்கு வடக்கே ஓடும் செய்யாறு தலத் தீர்த்தமாக விளங்குகிறது. எண்ணற்ற குடும்பங்களுக்கு முனுகப்பட்டு பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகிறாள். இந்த அம்மன், மணப்பேறு, மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு. மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்து பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில் தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: