மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம் : 63 பல்லக்கில் நாயன்மார்கள் வீதியுலா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை காண சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் குவிந்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த மாதம் 21ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து இம்மாதம் 11ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு வெள்ளி ரிஷபவாகன பெருவிழாவும் நடந்தது. 12ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 13ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 14ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 15ம் தேதி சவுடல் விமானமும், 16ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 5 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கியது.

முன்னதாக அறுபத்துமூவர் விழாவையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு திருஞானந்த சம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மாலை அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது. 63 நாயன்மார்கள் புடை சூழ விநாயகர் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகன் ஆகியோர் வீதியுலா வருகின்றனர். 63 நாயன்மார்கள் தனி தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர். விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர் மோர், இனிப்புகள் வழங்கினர். அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: