×

கண்ணிமைபோல் காத்தருளும் காயத்ரி தேவி

புஷ்கரம் அருகில் காயத்ரி மலையில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கரம் என்ற ஊரிலே காயத்ரியாக வீற்றிருக்கிறாள் சக்தி! ஐந்து சிரங்களும், பத்து கரங்களும் உடையவளாகக் காட்சி தருகிறாள். பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டதால் இந்த தலம் புஷ்கர் என்று அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இத்தலம் புகழ்வாய்ந்த ஆஜ்மீர் நகரிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பூமியில் யாகம் செய்ய சிறந்த இடமொன்றைத் தேடினாராம் பிரம்மா. அப்போது அவரது திருக்கரத்திலிருந்து புஷ்பம் ஒன்று தற்செயலாக கீழே விழுந்ததாம். புஷ்பம் விழுந்த இடத்திலிருந்து நீர் பெருகி ஒரு குளம் போல மாறி பின்னர் அதைச் சுற்றி அமைந்த ஊரே புஷ்கரமாகும்.  பிரம்மாவின் கரத்திலிருந்து புஷ்பம் விழுந்ததால் புஷ்கர் எனப்படுகிறது. இயற்கை வளம் சூழ்ந்த இவ்விடத்தில் எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. புஷ்கர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சுப்ரபா, கனகா, பிராச்சி, நந்தா, மற்றும் சரஸ்வதி நதிகள் பாய்ந்து இப்பிரதேசத்தை மேலும் அழகுறச் செய்கின்றன. வருடத்தில் எல்லா நாட்களும் இங்கு ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலைதான் . புஷ்கர் ஏரியில் நீராடுவது மிக ஆனந்த மயமான விஷயம். காசியைப் போலவே இங்கு இறந்தால்முக்திதான். கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் இந்த ஏரியில் மூழ்கி, வராக மூர்த்தியை தரிசிப்பவர்களுக்கு முக்தி நிச்சயம். நூறு வருடம் தவம் செய்த பலன் கிடைக்கும் என்றால் நம்புவீர்களா! இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால் பிரம்மன் இந்த ஏரியில் மூழ்கினால் மக்கள் தங்கள் பாபங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவார்கள் என்று அருளியதால், பாபிகளும் மற்றும் நித்ய கார்யங்களைச் செய்ய வேண்டிய மக்களும் தங்கள் கடமைகளை மறந்ததால் இந்த ஏரியில் நீராடி மோட்சத்தை அடைந்து அங்கு சொர்க்க லோகம் நிரம்பி வழிய, பிறகு பிரம்மன் தன் தவற்றை உணர்ந்து கார்த்திகை மாத சுக்ல பட்சம் (கார்த்திகை மாதம் கடைசி ஐந்து நாட்கள்) என்று மாற்றியருளினார்.

மற்ற நாட்களில் குளித்தாலும் இறைவனின் அருள் கிடைப்பதென்பது நிச்சயம். இத்திருக்கோயிலில் பிரம்மன் அருகிலேயே காயத்ரிதேவியும் வீற்றிருக்கிறாள். கணவன், மனைவியரிடையே ஏற்படும் பூசல்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, இறைவன்,இறைவியர் கூட மனபேதங்களுக்கு உள்ளானர் என்பது பின்வரும் செய்தியிலிருந்து நீங்கள் அறியலாம். பிரம்மன் யாகம் செய்யவே பூமியில் இடம் தேடினார். புஷ்கர் என்ற இடத்தில் யாகம் செய்ய முற்பட்டபோது யாகம் தொடங்கும்போது தன் மனைவியான சாவித்ரி தேவி  நாரதர் கலகத்தால் வர தாமதமாக, அவர் காயத்ரி என்ற இடையர் குலப்பெண்ணை வைத்து யாகம் தொடங்கினார். சிறிது காலதாமதமாக சாவித்ரி தேவி அங்கு வந்து சேர்ந்து மிகவும் வேதனைப்பட்டு (தான் இருக்கும் இடத்தில் வேறொரு பெண்ணா)  பிரம்மாவை உமக்கு இந்த  புஷ்கர் தவிர வேறு இடத்தில் ஆலயம் அமையாது என்றும் மற்றும் யாகத்திற்கு உதவியாக இருந்தவர்களையும் சபித்துச் சென்றாள். இத்தேவிக்கு பிரம்மனின் கோயிலுக்குப் பின்னால் மலையில் ஒரு திருக்கோயில் உண்டு. இத்தேவியை வணங்கி வழிபடுவர் என்றும் நித்ய சுமங்கலியாக இருப்பர்
என்பது திண்ணம்.

ஆஜ்மீருக்கு சென்னையிலிருந்து நிறைய ரயில் வசதி உண்டு. ஜெய்பூரிலிருந்து மூன்று மணி நேர சாலைப் பயணத்தில் புஷ்கரை அடையலாம். புஷ்கரத்தின் சிறப்புகள் அனைத்தும் அங்கு அமைந்துள்ள தீர்த்தத்தில் அடங்கி உள்ளது. தேவியின் விரல்களிலிருந்து பிறந்தது கங்கை என்பர். அந்தக் கங்கையிலே பிரம்ம தேவரின் கமண்டல நீர் கலந்து புஷ்கரம் என்ற புனித தீர்த்தம் உருவானதாகக் கூறப்படுகிறது. புருஷோத்தமன் ஜலரூபமாகக் காட்சியளிக்கிறார். புஷ்கரத்தின் மற்றொரு பெயர் தாமரை என்றும் பொருள் படுகின்றது. பூமி பிளந்து மூன்று இடத்தில் ஜேஷ்ட புஷ்கரம், மத்ய புஷ்கரம், கனிஷ்ட புஷ்கரம் ஆகியவை உண்டானதாம். இவை மூன்றிலும் பிரம்மா விஷ்ணு சிவன் உறைவதாகக் கூறப்படுகிறது. மாபாதங்களைத் தீர்க்கும் அருள் சக்தியாக அன்னை விளங்குகிறாள்.

இறைவனின் சரிபாதி  பெற்ற உமையன்னை மிகவும் கருணை கொண்டவள். உலகத்து உயிர்களின் தீவினைகளை எல்லாம் நீக்குபவளாக அன்னை இங்கே அருளாட்சி செய்கிறாள். கௌதம முனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில் தான் ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியால் சாப விமோசனம் பெற்றாள். விசுவாமித்திர முனிவர் தவம் செய்த இடம் இதுவே. இங்கு அகஸ்திரியரின் குகை அமைந்துள்ளது. மேலும், ஸ்ரீ ராமர், தேசிகர், ராமானுஜர், ஆண்டாள், ஸ்ரீ  நிவாஸர் திருக்கோயில்களும் அமைந்திருக்கிறது. விஷ்ணுவுக்கு மூன்று திருக்கோயில்கள் அமைந்திருக்கின்றன. இதில் முறையே ரங்கநாதர், வராஹ மூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மற்றும் ஸ்ரீ வைகுண்ட நாதர் பூதேவி, ஸ்ரீ தேவியருடன் காட்சி அளிக்கின்றனர். திருமால் கஜேந்திர ஆழ்வாருக்கு மோக்ஷம் தந்ததாக கூறப்படுகிறது. எத்துணை சிறப்புமிக்க  இடம், இந்த அன்னை கோயில் கொண்டிருக்கும் ஆலயம்!

ஸர்வானந்தரின் ராணி காயத்ரி தேவி. இவள் ஒளி வீசும் மணிவேதக பீடத்தில் அமர்ந்தவள். ஸர்வாணி, ஆண்டாண்டுக் காலமாய் அன்போடு வணங்கும் அன்பர்களுக்கு காலனைக் கடிந்த நீலகண்டரின் அருளையும் சேர்த்து வழங்கும் கருணாகரி. எல்லை காண இயலாத சம்சாரக் கடலில் சிக்கி, கரையேறும் வழி தெரியாது வருந்தும் அன்பர்களுக்கு வரம்பற்ற கருணையுடன் குறைவற்ற அருளைப் பொழிந்து காக்கும் தாய் இவளே! கரத்தில் கங்கணம் அசைய பொல்லாத முன்வினைகளுக்கு அஞ்சேல் என்று அபயமளிப்பவள். கணக்கற்ற பிறவிகளாகிய சுழல்களில் இருந்து விடுவித்து உள்ளத்தை தனது திருவடிகளில் கலக்குமாறு உதவி செய்பவள். இவ்வாறு இந்த தேவியின் சிறப்பை கூற வாயெல்லாம் இனிக்கும். இந்த பீடசக்தியின் பெருமையை ஒரு கதை மூலம் உணரலாம். கௌதம முனிவரின் மனைவி அகலிகை. மிகுந்த அழகுள்ளவள்.

அவள் மேல் மோகம் கொண்ட இந்திரன் நள்ளிரவில் கோழியாகக் கூவினான். முனிவர் பொழுது விடிந்ததாக எண்ணி நதியில் நீராடச் சென்றார். முனிவரின் வடிவில் இந்திரன் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தான். அகலிகை பதிவிரதை, அவளுக்கு வந்தவர் முனிவர் அல்லர் எனத் தெரிந்து விட்டது. அதுசமயம் முனிவரும் திரும்பி வந்து தன் உருவில் வந்த இந்திரனை சாபமிட்டார். உடம்பெல்லாம் கண்கள் தோன்றியது. மற்றொருவர் மனதில் புகுந்ததால் அகலிகையும் பாறையாக மாறும்படி சபிக்கப்பட்டாள். (பத்தினிப் பெண்டிர் பிறர் மனத்தில் கூட புகக்கூடாதாகும்). அதனால் தான் சாபம் ஏற்பட்டது. கானகம் சென்று தன் தவறை மன்னிக்கும்படி பிரம்மனை நோக்கித் தவமிருந்தான் இந்திரன். பிரம்மா கமண்டல நீரைத் தெளித்து புஷ்கரம் என்ற குளத்தைத் தோற்றுவித்தார். காயத்ரி தேவியை வேண்டி நீரில் மூழ்கி எழுமாறு ஆணையிட்டார். அவ்வாறே செய்த இந்திரனின் சாபமும் நீங்கியது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் நவம்பரில் வரும் பௌர்ணமியில் ஒன்று கூடி புனித ஏரியில் நீராடுகின்றனர். மகாமுனிவர் விசுவாமித்ரர் தவமியற்றிய தலமும் இதுவே. “வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி” இந்த பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த பட்டம் கிடைத்ததும் இந்திருத்தலத்தின்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி நதிக்கரையில் புஷ்கரவிழா  நடைபெறுகிறது. காயத்ரி மந்திரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அந்த மந்திரத்தை தவறாது சொல்பவர்களும், பலன் பெறுபவர்களும் எண்ணற்றோர். மந்திரங்களுள் மிகவும் மகிமை வாய்ந்த இம் மந்திரம் 24 எழுத்துக்களைக் கொண்டது. வால்மீகி முனிவர் தனது ராமாயணத்தில் ஓராயிரம் ஸ்லோகங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் காயத்ரி தேவியின் அட்சரங்களை உட்பொதிந்து வைத்துள்ளார். வேத மந்திரங்களின் சாரம் என்றே கூறுவர் காயத்ரி மந்திரத்தை, வேத மாதாவின் மறுவடிவம் காயத்ரி தேவீ.

தேவியானவள் ஐந்து முகங்களுடன் பத்துக் கரங்கள் கொண்டு அவற்றில் தாமரை, சங்கு சக்கரம், கதை, பாசம், அங்குசம் அன்னப்பாத்திரம் ஆகிய பொருட்களைத் தாங்கி தாமரை பீடத்தில் வீற்றிருக்கிறாள். மேலும் ஒரு கையில் அபய முத்திரையும், மற்றொரு கையில் வரத முத்திரையும் காட்டி அருட் பாலிக்கின்றாள். இவ்வாறு பத்து கரங்களுடன் திகழ்வதால் தாமே தசமகாவித்யா என்பதனை உணர்த்துகிறாள் தேவீ. சங்கு, சக்கர, கதாயுதங்கள் கொண்டிருப்பதால் திருமாலின் வடிவினளாகத் திகழ்கிறாள். முகங்களில் முக்கண்கள் பெற்றிருப்பதால் சிவ வடிவினைகளாகத் திகழ்கிறாள். தாமே திருமகளும், பிரம்மனுமாகத் திகழ்வதைக் குறிக்க தாமரையில் வீற்றிருக்கிறாள். கையில் உள்ள அன்னப் பாத்திரம் அவளே கலைகளை அருளும் கலைமகள் என்பதை உணர்த்துகின்றது. மூன்று கண்கள் முச்சுடர்களைக் குறிக்கின்றன. ஐந்து முகங்களில் பதினைந்து கண்களைப் பெற்றவள் காயத்ரி தேவி. ஸ்ரீவித்தை எனும் பஞ்ச தசாக்ஷரி மந்திரத்திற்குரிய பராசக்தி இவளே. தேவியின் ஐந்து திருமுகங்கள் பஞ்ச பூதங்களையும் பஞ்ச பிராணன்கள் மற்றும் பஞ்ச தன் மாத்திரைகளை குறிக்கிறது.

ஒரு முறை தேவர் மற்றும் அசுரர்களுக்கிடையே போர்நிகழ்ந்தது. போரில் மிக உயர்ந்த பொருட்கள் அழிவது கண்டு பொறுக்காத அன்னை அவை அனைத்தையும் கவர்ந்து தன் வசப்படுத்தினாள். போர் முடிந்து அமைதி திரும்பியதும் உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தாள் தேவீ. எனவே போராலும், தீயசக்திகளாலும் அழியாமல் நம்மை தேவீ காக்கிறாள் என்பது திண்ணம். ‘யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் ஒளியினை தீயானிப்போமாக!’ இந்த பொருளை உணர்த்துவது தான் காயத்ரீ மந்திரம்.‘ஓம் பூர் புவஸ்ஸுவ: ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோய: ப்ரசோதயத்.’ நாமும் காயத்ரி தேவியின் மந்திரம் சொல்லி கவலைகளை மறப்போம்!

Tags : Gayatri Devi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?