×

பார்க் (விமர்சனம்)

தமன் குமார், பிளாக் பாண்டி இருவரும் வீடுகள்தோறும் கேபிள் டி.வி கனெக்‌ஷன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களிடம் ஸ்வேதா டோரதி ஓரிருவர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் எப்படிப்பட்ட ஆண்கள் என்று உளவு பார்க்கும்படி தமன் குமாரிடம் சொல்கிறார். ஸ்வேதா டோரதியைக் காதலிக்கும் தமன் குமார், அதை வெளிப்படுத்தாமல், அவர் சொன்னதைச் செய்கிறார். இந்நிலையில், ஸ்வேதா ேடாரதி தன் காதலை தமன் குமாரிடம் சொல்கிறார். இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் ஆயத்தமாகும் நிலையில், ஜாலி பார்க்கில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் தமன் குமார், ஸ்வேதா டோரதி ஆகியோரின் உடம்பிற்குள் புகுந்து கொள்கிறது. கன்னடம் பேசும் ஆவி தமன் குமாரின் உடலிலும், தமிழ் பேசும் ஆவி ஸ்வேதா டோரதியின் உடலிலும் புகுந்து, முன்பு தங்கள் காதலைப் பிரித்தவர்களை பழிவாங்கத் துடிக்கின்றன. இறுதியில் அது நடந்ததா? தமன் குமார், ஸ்வேதா ேடாரதியின் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.
தனது கேரக்டருக்கு ஏற்ப தமன் குமார் இளமைத்துள்ளலுடன் நடித்துள்ளார். ஸ்வேதா டோரதி தன்னைக் காதலிக்கவில்லையே என்ற ஆதங்கத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆவி தனக்குள் புகுந்துகொண்ட பிறகு கன்னடம் பேசும் அவரது கேரக்டர் சுவாரஸ்யமாக இருந்தாலும், வழக்கமான பழிவாங்கும் கதை என்பதால், ‘இவ்வளவுதானா’ என்று சொல்ல வைக்கிறது. ‘ஜூனியர் சினேகா’ சாயலில் இருக்கும் ஸ்வேதா டோரதி இயல்பாக நடித்துள்ளார். தனக்குள் ஆவி புகுந்தவுடன் ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறி, எதிரிகளை அடி பின்னியெடுக்கிறார். பெண்களுக்கு ஆசைப்படும் வில்லனாக யோகி ராம், ஸ்வேதா டோரதியின் தந்தையாக தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ், பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா, கிரேன் மனோகர் போன்றோர், இயக்குனர் சொன்னதைச் செய்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை பகுதி கதைக்களம் என்பதால், அப்பகுதியிலுள்ள கோயில்களின் அழகையும், இயற்கையான கிராமத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார், ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன். ஹமரா.சி.வி இசையில் பாடல்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்றாலும், காட்சிகளின் நகர்வுக்கு அவரது பின்னணி இசை பேருதவி செய்துள்ளது. காதலர்களின் உடம்பில் புகுந்துகொண்ட ஆவிகளின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று பாடம் நடத்தியிருக்கிறார், இயக்குனர் ஈ.கே.முருகன். மிரட்டுவதற்குப் பதிலாக, மிகச் சாதாரணமாக கடந்து செல்கிறது.

The post பார்க் (விமர்சனம்) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Park ,Taman Kumar ,Black Pandi ,Shweta ,Dorothy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா