×

முற்பிறவி பாவம் போக்கும் மேலப்பெருங்கரை சொக்கநாதர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது மேலப்பெருங்கரை. இங்கு பழமையான அட்டாள சொக்கநாதர் கோயில் உள்ளது. மூலவராக சொக்கநாதர் உள்ளார். சுவாமி சன்னதியை சுற்றிலும், கோட்டத்தில் 8 யானைகள் உள்ளன. இந்த யானைகளே சுவாமி சன்னதி விமானத்தை தாங்கியபடி இருப்பதாக ஐதீகம். எட்டு யானைகளால் தாங்கப்படும் விமானத்தின் கீழ் சொக்கநாதர், காட்சி தருவதால், “அட்டாள சொக்கநாதர்” என்று அழைக்கப்படுகிறார். கரிக்குருவிக்கு உபதேசம் செய்ததால், பக்தர்கள் மூலவரை குருவாக கருதி வழிபடுகின்றனர். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் தோற்றமளிப்பதால், ’ருத்ராட்ச சிவன்’ என்ற பெயரிலும் மூலவர் அழைக்கப்படுகிறார். அங்கயற்கண்ணி, அனுக்ஞை விநாயகர், மயிலுடன் சுப்பிரமணியர், திருமால், யோக பைரவர், ஐயப்பன், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. நவக்கிரக சன்னதி உள்ளது. தல மரமாக சரக்கொன்றை மரம் உள்ளது. கோயில் வளாகத்தில் தீர்த்த கிணறு உள்ளது.

தல வரலாறு

பண்டைய காலத்தில் தர்மங்கள் செய்த ஒருவர், அறியாமல் செய்த சில தவறுகளுக்காக  மறுபிறவியில் கரிக்குருவியாகப் பிறந்தார். பிற பறவைகளால் துன்பமடைந்த அந்த கரிக்குருவி அப்போது கடம்ப வனமாக இருந்த மேலப்பெருங்கரைக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தபடி தனக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்காதா? என்று கரிக்குருவி வருந்தியது. அந்த மரத்தின் அடியிலிருந்த முனிவர் ஒருவர், தனது சீடர்களுக்கு சிவபெருமான் குறித்து உபதேசம் செய்து கொண்டிருந்தார். முனிவர் தனது உபதேசத்தின்போது, ‘‘பாவம் செய்தவர் யாராக இருந்தாலும், மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதர் அருள் கிடைத்தால், அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இதனைக்கேட்ட கரிக்குருவி தனக்கு விமோசனம் வழங்க வேண்டி சொக்கநாதரை வழிபட்டது. இதனால் மனமிரங்கிய சிவபெருமான், ‘‘தர்மங்கள் செய்பவர் யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்தால், செய்த தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்” என்று குரு ஸ்தானத்தில் இருந்து கரிக்குருவிக்கு உபதேசித்தார். இதனால் கரிக்குருவி விமோசனம் பெற்றது. பின்னர் கரிக்குருவியின் வேண்டுதலையேற்று அப்பகுதியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு சொக்கநாதர் கோயில் எழுப்பப்பட்டது என்பது புராணம். சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா,  திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை உள்ளிட்டவை  விசேஷ தினங்களாகும்.

நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க பக்தர்கள் இங்கு வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவர், அம்பாள் ஆகியோருக்குத் திருமுழுக்காட்டு செய்து, பச்சை வண்ணப் புத்தாடை அணிவித்து, நெய் விளக்கேற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். குருப்பெயர்ச்சியின் போது சிவன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன. கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோஷங்களை நீக்குபவளாக அங்கயற்கண்ணி அருள் பாலிக்கிறார். இதனால் விசேஷ தினங்களில் அம்பாளுக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவித்து பக்தர்கள் பூஜிக்கின்றனர். கோயில் நடை காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கிறது.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி