×

வேண்டுதல் நிறைவேற அருள் தரும் பூதநாராயண சுவாமி

தேனியிலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது சுருளிமலை. இங்கு பழமையான பூதநாராயண சுவாமி கோயில் உள்ளது. மூலவராக பூதநாராயணசுவாமி என்று அழைக்கப்படும் விஷ்ணு பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு வல்லபகணபதி என்ற பெயருடன் விநாயகர் வீற்றிருக்கிறார். சுற்று பிரகாரத்தில் உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தல மரமாக புலிச்சி மரம் உள்ளது. சுரபி நதி தீர்த்தம் உள்ளது.  

தல வரலாறு

இந்த கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் இல்லை. புராண காலத்தில் ராவணேஸ்வரன் என்ற அசுரன், தேவர்கள் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். ராவணேஸ்வரனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், விஷ்ணு பெருமானை சந்தித்து முறையிட்டனர்.  தேவர்களைக் காணாத ராவணேஸ்வரன், நாரதரை அனுப்பி அவர்களை கண்டறிந்து வருமாறு உத்தரவிட்டான். நாரதரும், தேவர்களை தேடி கிளம்பினார். வழியில், ஒரு புற்றின் நடுவில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதை நாரதர் பார்த்தார். அந்த முனிவரிடம், தேவர்கள் இருக்குமிடம் குறித்து நாரதர் கேட்டார்.

தேவர்கள், விஷ்ணுவுடன் இருப்பதாக முனிவர் தெரிவித்தார். நாரதர் மூலம் இதனையறிந்த ராவணேஸ்வரன், தேவர்களை அழிக்க தனது படையுடன் சுருளிமலை வழியாக சென்றான். தேவர்களைக் காப்பதற்காக, பஞ்சபூதங்களின் மொத்த வடிவமாக, பூத உருவமெடுத்த விஷ்ணுபெருமான், ராவணேஸ்வரனை மறித்தார். அவரது பூத கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன், தனது படையுடன் அங்கிருந்து தப்பியோடினான். அங்கு வந்த தேவர்கள், பூத நாராயணனாக உக்கிரத்துடன் காட்சியளித்த விஷ்ணுபெருமானுக்கு அன்ன பிரசாதம் வழங்கி வழிபட்டனர். பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட விஷ்ணுபெருமான், சிறிது நேரத்தில் சாந்தமடைந்தார். பின்னர் தேவர்கள் முன்பு ஒளி வடிவமாக காட்சியளித்தார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது என்பது புராணம்.

இங்குள்ள சுரபி நதியில் நீராடி மூலவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். துன்பங்கள் நிவர்த்தியடைந்து, நல்வாழ்வு கிட்டும். வேண்டும் வரம் கிடைக்கும். தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். நினைத்த காரியம் வெற்றி பெற, பக்தர்கள் மூலவரை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், மூலவருக்கு அபிஷேகம் செய்தும், மாலையணிவித்து, தேங்காய், பழங்கள் படைத்து பூஜை செய்கின்றனர். முன்னோர் ஆத்மா சாந்தியடைய காசி, ராமேஸ்வரம் சென்று புண்ணிய காரியம் செய்ய முடியாதவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து திதி கொடுக்கின்றனர். சித்திரையில் திருவிழா, ஆடி மற்றும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கின்றன. கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  திறந்திருக்கிறது.

Tags : Bhoothanarayana Swamy ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?