சிவனடியார்களின் இடர் தீர்த்த எறிபத்தர்

எறிபத்தர் குருபூஜை : 22.02.2019

சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துக் கூறும் அடியார் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் எறிபத்தர் என்னும் நாயனார் ஆவார். இவரை ‘இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்’ என்று சுந்தரர் குறிப்பார். இவர் சோழ நாட்டில் புகழ்பெற்று விளங்கிய கரூரில் அவதாரம் செய்தவர். அவ்வூரின்கண் உள்ள  ஆனிலை என்னும் திருக்கோயிலில் உள்ள இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். சிவபெருமானின் அடியார்களுக்கு ஏதேனும் இடர் நேரின் அங்கு விரைந்து சென்று அவர்களின் இடர்களைத் தீர்த்து வந்தார்.

அடியார்களுக்கு இடர் தந்தவர்களை மழு ஆயுதத்தால் எறிந்து தண்டிக்கும் இயல்பினை உடையவர் ஆதலால் எறிபத்தர் எனப்பட்டார், இத்தகைய இலைதொழில் அமைந்த மழு ஆயுதத்தினைத் தாங்கி நின்றமையாலே சுந்தரரால் இலைமலிந்த வேல்நம்பி என்று புகழப்பட்டார். கரூரின் கண் அமைந்திருந்த திருஆனிலைக் கோயிலில் உறைந்து அருட்பாலித்து வரும் இறைவனை வழிபடுவதை தன் வழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சிவகாஃமியாண்டார் என்னும் அடியவர். இவர் வைகறைப் பொழுதில் எழுந்து நீராடித் தூய்மை உடையவராய்த் தன் வாயினைத் துணியால் கட்டிக்கொண்டு நந்தவனம் சென்று மலர்களைப் பறிப்பார். பின் அவற்றை பூக்கூடையில் கொண்டு சென்று  இறைவனுக்குப் படைப்பார். இதனை,

‘‘வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கிவாயும் கட்டி

மொய்ம்; மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்

கையினில்; தெரிந்து நல்ல கமழ் முகையலரும் வேலைத்

தெய்வநா யகருக்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம் கொய்து ’’

என விளக்குவார் சேக்கிழார்,

 இவ்வாறே ஓர் அஷ்டமி நாளன்று  இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காகப் பூக்கூடையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் சோழ மன்னனின் பட்டத்து யானை பாகனுக்கும் அடங்காமல் மதம் பிடித்து தெருவில் ஓடி வந்தது. அந்த யானை சிவகாமியாண்டார் தன் கையில் வைத்திருந்த பூக்கூடையைப் பிடுங்கி தெருவில் எறிந்ததுடன் அந்தப் பூக்களையும் தன் காலால் மிதித்தும் நாசம் செய்தது. அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவகாமியாண்டார் அந்த யானையினைத் தனது தண்டத்தால் அடிக்க ஓடி, தன் வயதின் இயலாமை காரணத்தால் தவறி விழுந்தார். அந்நிலையிலும் சிவபெருமானை நினைத்து சிவதா, சிவதா என்று அரற்றினார், சிவகாமியாண்டாரின் அலறலைக் கேட்ட எறிபத்தர் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார், அங்கு அவர் கண்ட காட்சி அவருக்குக் கடும் கோபத்தினை விளைவித்தது. யானையின் முன் சென்ற அவர் தமது மழுவினால் யானையின் துதிக்கையினை வெட்டிச் சாய்த்தார். இதனை

‘‘பாய்தலும் விசை கொண்டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய் தலையன் பின் நிற்குமே! தகைத்து பாய்ந்து

தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்’’

என விளக்கியுரைப்பார் சேக்கிழார், மேலும் யானையின் மேல் வீற்றிருந்த யானைப்பாகர்களையும் வெட்டி வீழ்த்தினார். தனது யானைக்கும் யானைப் பாகர்களுக்கும் நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்த சோழ மன்னன் அவ்விடத்திற்கு வந்தான். அங்கு கையில் மழுவுடன் நின்றிருந்த எறிபத்தரைக் கண்டான். உடன்  தன்னுடன் வந்திருந்த படையினரைப் பின் நிறுத்தி தான் மட்டும் முன்வந்து  எறிபத்தரை வணங்கி இங்கு நிகழ்ந்தது யாது? என வினவினான். அதற்கு எறிபத்தர் யானையின் செயலினையும் அதன் செயலினைத் தடுக்காது நின்ற பாகர்களின் நிலையினையும் எடுத்துக் கூறினார். அதனைக் கேட்ட அரசன் தனது

பட்டத்து யானை செய்த செயலிற்கு இத்தகைய தண்டனை போதாது, பட்டத்து யானையின் உரிமையாளனான தானே தண்டிக்கப்பட வேண்டியவன் எனத் தாழ்ந்து நின்றான்.

‘‘அங்கணர் அடியார் தம்மைச் செய்தஇவ் அபராதத்துக்குக் இங்கிது தன்னாற் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாமென்று

செய்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்’’

மேலும் குற்றம் இழைத்தவனாகிய தன்னை மங்கல மழுவால் தண்டிப்பது அவ் ஆயுதத்திற்குப் பெருமை சேர்ப்பதாகாது, எனவே என்னை இவ் வாளினால் தண்டியுங்கள் என்று தன் உடைவாளினைத் தந்து நின்றான். சோழமன்னனின் இத்தகைய செயலினைக் கண்ட எறிபத்தர் இம்மன்னன் சிவனடியார்கள் மேல் வைத்திருக்கும் அன்பினை அறிந்தேன் என மனத்தினுள் நினைத்தவராய் மன்னன் கொடுத்த வாளினை வாங்காதவராய் நின்றார். பின் தான் வாளினை வாங்காது விடுத்தால் மன்னன் அவ்வாளினாலே தன்னை மாய்த்துக் கொள்வான் எனக் கருதி அதனைத் தன் கையில் வாங்கிக்கொண்டார். அவரின் செயலினைக் கண்ட  மன்னன் தன்னை கொல்லுமாறு வேண்டினான். எறிபத்தரோ இவ் அரசனைக் கொல்லக்கூடாது என எண்ணித் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். அதனைப் பார்த்த மன்னன் பெரியவரின் செயலினால் கெட்டேன் எனச் சென்று தன் வாளினைப் பறித்துக் கொண்டான். அத்தகைய நிலையில் இறைவனின் திருவருளால் வானிடை ஓர் அசரீரி எழுந்தது. அவ் அசரீரி அன்பர்களே! உங்களது திருத்தொண்டின் பெருமையினை உலக மாந்தர்க்கு உணர்த்துதற் பொருட்டே இத்தகைய திருவிளையாடலை நிகழ்த்தினோம். என்றது.

உடன் யானையும் பாகரும் உயிர்பெற்று எழுந்தனர், இத்தகைய அருஞ்செயலினைக் கண்ட எறிபத்தர் மன்னனை வணங்கினார், இருவரும் இறைத் திருவருளைப் போற்றினர், சிவகாமியாண்டாரின் பூக்கூடையும் நல்ல மலர்களால் நிறைந்தது, பாகர்கள் பட்டத்து யானையினை மன்னன் அருகில் கொண்டு சென்றனர். எறிபத்தர் மன்னனிடம்  அவ்யானையின் மீது என் உளம் மகிழ எழுந்தருள வேண்டும் என வேண்டினார். மன்னன் அவ் யானையின் மேல் அமர்ந்து அரண்மனையினை அடைந்தான். சிவகாமியாண்டார் தன் பூக்கூடையுடன் திருக்கோயிலை அடைந்து இறைவனை வணங்கினார். இவ்வாறு சிவனடியார்களுக்கு இடர் நேர்ந்த பொழுதெல்லாம் தன் ஆண்மைத் திறத்தால் நீக்கியருளிய எறிபத்தர் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தின் தலைவர் ஆனார். இவரது பெருமையினை நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டத் திருவந்தாதியில்

‘‘ஊர்மதில் மூன்றட்ட உத்தமர்க் கென்றோர் உயர்தவத்தோன்

தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர் பறித்த

ஊர்மலை மேற்கொளும் பாகர் உடல் துணி யாக்குமவன்

ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரி லெறிபத்தனே ’’

எனக் குறிப்பார். அடியாரின் இடர்கெடுத்த எறிபத்தரின் குருபூைஜ வருகின்ற பங்குனி மாதம் எட்டாம் தேதி  ( 22  02  2019 ) ஹஸ்த நட்சத்திரத்தன்று வருகிறது. இந்நன்னாளில் திருக்கோயில் சென்று எறிபத்தரை வணங்கி அவரின் குருவருளையும் இறைவனின் திருவருளையும் பெற்று உயர்வோமாக!  

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: