×

கந்தன் பூஜித்த கயிலைநாதன் கோயில்கள்

சிவபூஜை ஒன்றே வாழ்வில் மேன்மை அளிப்பதாகும். அது உயிர்களுக்கு அறிந்தும் அறியாமலும், செய்த பாவங்களால் வரும் துன்பங்களை நீக்கிப் புண்ணியத்தை வழங்குவதாகும். அதனால் அனைத்து உயிர்களும் சிவபூஜையைச் செய்து மகிழ்கின்றன. வானவர்களும், பார்வதி விநாயகர் முதலான தெய்வங்களும் கூட சிவபூஜையை மகிழ்வுடன் செய்கின்றன. முருகப் பெருமான் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்கவும், ஒப்பற்ற ஆயுதங்களைப் பெறவும், சிவபூஜை செய்ததைப் புராணங்கள் கூறுகின்றன. தென்னகத்திலுள்ள அனேக தலங்களில் முருகன் சிவவழிபாடு செய்து மேன்மை பெற்றுள்ளார். அத்தகைய தலங்களில் சிவத்தலமாக விளங்கும் சிலவற்றை இங்கே சிந்திக்கலாம்.

கீழ்வேளூர்

நாகை மாவட்டத்தில் திருவாரூர் நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் வேளூர் ஆகும். இம்மாவட்டத்தில் வேளூர் என்னும் பெயரில் பல ஊர்கள் இருப்பதால் இது கீழ் என்னும் அடை மொழியோடு கீழ்வேளூர் என்று அழைக்கப்பட்டது. இந்நாளில் கீவளுர் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திலுள்ள ஆலயம் கட்டுமலை எனப்படும் மாடக்கோயில் வகையினதாகும். இதனைக் கட்டியவர் கோச்செங்கட் சோழர் ஆவார். அவர் காவிரியின் கரையில் எழுபத்தெட்டு மாடக் கோயில்களை கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவ்வரிசையில் உள்ள மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அழகிய மாடக்கோயிலில் வீற்றிருப்பவர் கேடிலியப்பர். அம்பிகையில் பெயர் வனமுலைநாயகி என்பதாகும். இந்த மாடக்கோயிலின் மீது ஏறிச் செல்ல நேர்த்தியான பதினெட்டு படிக்கட்டுக்கள் இருக்கின்றன.

இந்த படிக்கட்டின் தென்புறம் வடக்கு நோக்கியவாறு முருகன் சந்நதி அமைந்துள்ளது. முருகனுக்கு எதிரில் பிணிமுகம் என்னும் யானை நிற்கிறது. இவ்வூர்த்தல புராணத்தில் முருகன் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றது குறிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிவபூஜைக்கென உருவாக்கிய திருக்குளம் உள்ளது. அதன் பெயர் சரவணப்பொய்கை என்பதாகும். மேலும் அவர் வேற்டையை ஊன்றி உண்டாக்கிய கிணறு உள்ளது அதனைகடிகுளம் என்கின்றனர். அது படையால் உருவாக்கப்பட்டதால் படைகுளம் என அழைக்கப்பட்டுக் கடிகுளம் ஆன தென்பர். இங்குள்ள முருகன் சுந்நதி மிகவும் சக்திவாய்ந்ததாகப் போற்றப்படுகிறது இவர்மீது அந்தககக்கவி வீரராகவமுதலியார் கீழ்வேளூர் முருகன் பிள்ளைத் தமிழ் என்னும் நூலைப் பாடியுள்ளார்.

இக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் அஞ்சுவட்டத்து அம்மன் என்னும் பெயர் கொண்ட காளி தனி ஆலயத்தில் வீற்றிருக்கிறாள். முருகன் இத்தலத்தில் சிவபூஜை செய்தபோது நான்கு திசைகளில் இருந்தும் வான்வெளியில் இருந்தும் (ஆக ஐந்து திசைகளில் இருந்தும்) வந்த) துன்பங்களை நீக்கிக் காவல் புரிந்ததால் ஐந்து வட்டத்தம்மன் என்று பெயர் பெற்றாள். கேடிலியப்பருக்கு வலப்புறம் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார். மலைமீது ஏறிச்செல்லும் போது நம்மை எதிர் கொண்டழைத்து அருட்பாலிப்பவர் இந்த அட்சயவிடங்கர் எனப்படும் தியாக ராஜ மூர்த்தி யேயாவார். தேவர்கள் இத்தலத்தில் மார்கழி அமாவாசையன்று தியாகேசரை நிறை பணி சாத்தி வழிபடுவதாகக் கூறுகின்றர்.

பஞ்சக்கடம்பனூர்

கடம்பன் என்பது முருகனுக்குரிய பெயர்களில் ஒன்றாகும். இப்பெயரால் கீழ்வேளூரைச் சுற்றி ஐந்து ஊர்கள் உள்ளன. இவை ஐந்திலும் வழிபட்ட பின்னரே கீவளூரில் பெருமானை முருகன் வழிபட்டதாகக் கூறுகின்றனர். இவை முறையே கோயில் கடம்பனூர், ஆதிக் கடம்பனூர், வாழிக் கடம்பனூர் இளங்கடம்பனூர், அகரம் கடம்பனூர் என்பனவாகும். கோயில் கடம்பனூரில் அழகாம்பிகை உடனாய கயிலாயநாதர் எழுந்தருளியுள்ளர். ஆதிக் கடம்பனூரில் ராஜராஜேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஐந்து ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன (இந்த ஐந்து ஊர்களிலும் முருகன் வடக்கு நோக்கி உள்ளார் என்று தமிழ்த்தாத்தா குறித்துள்ளார். நடைமுறையில் அவ்வாறில்லை).

திருமுருகன் பூண்டி ஆறுமுகர்

கோவை மாவட்டத்தில் அவிநாசிக்கு அருகிலுள்ள தலம் திருமுருகன் பூண்டியாகும். முருகன் இங்கு மாதவி வனத்தில் இருந்த லிங்கத்தை வழிபட்டுப் பேறு பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. முருகன் சிவபூஜை செய்து அருள்பெற்றதையொட்டி இங்குள்ள சிவபெருமான் முருகநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு முருகன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவர் சதாகாலமும் சிவபெருமானைப் பூஜித்துக் கொண்டிருக்கிறார். (இத்தலத்தில் இறைவன் சுந்தரர் பொருளைக் களவு செய்தும் அதனால் துன்புற்று அவர் கலங்கியபோது மீண்டும் அவற்றை அளித்தும் திருவிளையாடல் புரிந்தார். அதைச் சுந்தரர் தேவாரம் மூலம் அறிகிறோம்) முருகனுக்குரிய சிறந்த பிரார்த்தனைத் தலமாக இது திகழ்கிறது.

திருவேற்காடு

முருகன் சிவபூஜை செய்துபேறு பெற்ற தலங்களில் சென்னையை அடுத்த திருவேற்காடும் ஒன்றாகும். இங்கு அகத்தியர் வழிபட்டு இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தார் என்று தலபுராணம் கூறுகிறது. அதையொட்டி கருவறையில் முருகனும் அகத்தியரும் பூஜித்த லிங்கமான வேற்காட்டீசுவரருக்குப் பின்னால் உமா மகேசுவரர் மணக்கோலத்துடன் வீற்றிருக்கிறார். இந்த ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக முருகப்பெருமான் பிராகாரத்தின் வடமேற்கு முனையில் கிழக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ளார். இவர் முன்பாக சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய சிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இது அவர் சதாகாலமும் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இத்தகைய அமைப்பு வேறுதலங்கள் எதிலும் இல்லை. வழக்கமாக பரிவாரமூர்த்தியாக அமையும் முருகனைக் கல்யாண முருகனாகவோ ஆறு முகசுவாமியாகவோ அமைப்பதே வழக்கம் இங்கு அவர் பாலசுப்பிரமணியராக இருப்பதுடன் சிவபூஜை செய்து கொண்டிருப்பவராகவும் இருப்பது கண்டு மகிழத்தக்கதாகும்.

சிவபூசையில் திளைக்கும் சேய்ஞலூர் செவ்வேள்

சென்னை குடந்தை சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள தலம் சேய்ஞலூர். சேயாகிய முருகன் சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற நல்லூர் என்பதால் இத்தலம் சேய்ஞலூர் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் இது சேங்கனூர் என வழங்குகிறது. இது மண்ணியாற்றங் கரையில் அமைந்த தலமாகும். சுப்பிரமணியரால் உருவாக்கப்பட்ட இந்த நதி மண்ணியாறு என வழங்குகிறது. இங்கு ஊரின் நடுவே சிவாலயம் அமைந்துள்ளது.  பிராகாரத்தின் நடுவே அமைந்த கட்டு மலைமீது சிவாலயம் உள்ளது.இதனைக் கட்டியவர் கோச்செங்கட் சோழனாவார். மலைமீது அமைந்த முற்றத்தில்  முருகன் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டுள்ளார். இவர் சதா காலமும் சிவபெருமானை பூஜித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுவர்.

சூரனை வென்றழிக்கப் புறப்பட்ட குமரன் இங்குள்ள சத்தியகிரியைக் கண்டு வியந்தார். மண்ணியாற்றைத் தோற்றுவித்து அதன் நீரால் சோலைகளை உருவாக்கினார். சத்யகிரியின்மீது சுயம்புவாய் தோன்றியுள்ள சத்யகிரீஸ்வரையும், சத்யதயாஷியையும் வணங்கித் துதித்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து அவர்முன் தோன்றி ஒப்பற்ற ஆயுதமான உருத்திர பாசுபதம் என்னும் ஆயுதத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் சத்தியகிரியின்மீது முருகன் தெற்கு நோக்கி சிவபெருமானை பூஜித்த வண்ணம் இருக்கிறார். இது சண்டேஸ்வர நாயனார் அவதாரம் செய்தபதியாகும்.

கரிவலம் வந்த நல்லூர் வீர ஷண்முருகநாதர்

தென்பாண்டி நாட்டுத் தலங்களில் சிறப்புப் பெற்றது கரிவலம் வந்த நல்லூராகும். புராணங்கள் இதனைக் கருவை என்று போற்றுகின்றன. இத்தலத்தின் பேரில் பாடப்பட்ட கருவை பதிற்றுப் பத்தாத்தாதி புகழ்பெற்ற நூலாகும். இதனைக் குட்டித் திருவாசகம் என்பர். இத்தலத்தில் ஒப்பனை நாயகி உடனாய பால்வண்ணநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீரஷண்முகர் என்னும் பெயரில் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இவர் சிறந்த வரப்பிரசாதியாகப்போற்றப்படுகிறார். மற்றதலங்களில் செய்வது போல் இவருக்கு பிரார்த்தனைகளை செய்து விடமுடியாது. இவரது முன் அனுமதி பெற்றே அவற்றை மேற்கொள்ள வேண்டும். ஒருசமயம் விநாயகர் சிவராத்திரி நாளில் உலகிலுள்ள சிவாலயங்கள் அனைத்தையும் கண்டு தொழ விரும்புவதாகக் கூறினார். உடனே முருகன் மயில் மீதேறி உலகிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்கச் சென்றார். விநாயகர் சிவபெருமானிடம் உலகிலுள்ள தலங்கள் அனைத்தையும் தரிசித்த புண்ணியம் எந்தத் தலத்து இறைவனை வழிபடுவதால் உண்டாகும் என்று கேட்டார்.

சிவபெருமான் கரிவலம் வந்தநல்லூர் பால்வண்ண லிங்கத்தை வழிபட்டாலேயே உலகிலுள்ள சிவாலயங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன் உண்டாகும் என்றார்.
உடனே விநாயகர் கரிவலம் வந்த நல்லூர் வந்து வழிபாடு செய்தார். உலகைச்சுற்றிய முருகன் அங்குவந்தார். சிவபெருமான் முருகனை நோக்கி வீரதீரத்துடன் உலகைச் சுற்றிவந்த பெருமையினால் வீரஷண்முக சிகாமணி எனப் பெயர் பெறுவாய் என்றார். அது முதல் அப்பெயருடன் முருகன் இங்கே கோயில் கொண்டு அருட்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவ்விதம் முருகன் அனேக தலங்களில் சிவபூஜை செய்து கொண்டே இருக்கிறார். சிவபூஜையில் திளைக்கும் குமரனை சிவகுகன் எனவும், சிவஸ்கந்தன் எனவும் சிவபூஜிதகுமரர் எனவும் அழைக்கின்றனர். முருகனால் பூஜிக்கப்படும் சிவபெருமானை குமாரபூஜிதர் எனவும் குமாரசிவம் எனவும் அழைக்கின்றனர். முருகன் பூஜை செய்துமகிழும் அனேக தலங்கள் பாரதமெங்கும் இருக்கின்றன

Tags : temples ,Kanthan ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...