×

பார்வேட்டை காணும் பழைய சீவரம் பெருமாள்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம் - 2

ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம்.  ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டில், ஊற்றுக்காட்டு கோட்டத்து விண்ணபுரத்து பிராமண ஊர் சபையில் குழுக்களுக்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் பற்றி எட்டு வரிகளில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ளது. எனவே பல்லவர் ஆட்சியிலும், சோழர் ஆட்சியிலும், இவ்வூர் புகழோடு விளங்கியுள்ளதை அறிய முடிகிறது.

இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம்  என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.

மூலவர் பற்றிய செவி வழிச் செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது. தற்போது காஞ்சிபுரத்தில் இருக்கும்ஸ்ரீவரதராஜப் பெருமாளின் மூலவர் பழைய சீவரத்தில் உள்ள மேல் மலையிலிருந்து எடுத்துச் சென்றதாக செவி வழிச் செய்தி கூறுகிறது. அடுத்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.

பழைய சீவரம் மலைக்கோயில் போன்று திகழ்கிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.

கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.

ஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது.
வலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம், மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள். ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரத்தில் வீற்றிருந்த நிலையில் எழுந்தருளியுள்ளது.

மூல விக்கிரகத்திற்கு முன்பு பிரகலாதவரதன் எனும் பெயரில் அழைக்கப்படும் திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில்  தலையை கிரீடமகுடம் அலங்கரிக்க, மேற்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து, கீழ்வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி அருட்பாலிக்கிறார். இடக்கரம் கட்யவலம்பித ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. வலப்புறம் ஸ்ரீதேவி நாச்சியார் வலது கரத்தை லோல ஹஸ்தமாகக் கொண்டு இடக் கரத்தில் தாமரை மலரை கடக ஹஸ்தத்தில் கொண்டுள்ளாள். இடப்புறம் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கரம் நீலோற்பலம் பற்றியும், இடக்கரம் லம்ப ஹஸ்தமாக கொண்டு திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இங்கு தனிக்கோயில் நாச்சியார்  அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள்..

மூலஸ்தானத்தின் முன்புறம்  செவ்வக வடிவுடைய அந்தராளத்தைக் காண்கிறோம். இது தூண்கள் ஏதுமின்றி எளிமையான அமைப்புடையது. அந்தராளத்தின் வாயில் இரு திருநிலை கால்களுடன் உயர்ந்து காட்சியளிக்கிறது. நிலைக்கால்களில் பக்கங்களை தாமரை இதழ்களும், கொடிக்கருக்குகளும் அலங்கரிக்கின்றன. வாயிலின் இருபுறமும் இரு அரைத்தூண்கள் அமைந்திருக்கின்றன, இத்தூண்கள் இடைச்சோழர் கால கலைப்பாணியில் அமைந்துள்ளன.

அந்தராள வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் இருவர் நின்ற கோலத்தில் வாயிலைக் காத்து நிற்கின்றனர். வலப்புறம் உள்ள துவாரபாலகர் சங்கு சக்கரத்தை மேற்கரத்தில் ஏந்தி கீழ் வலக்கரத்தால் சூசி ஹஸ்தம் காட்டுகிறார். கீழ் இடக்கரம் நாகம் சுற்றிய காதயுதத்தின் மீது அமைந்துள்ளது. இடப்புறம் உள்ள துவாரபாலகர் சக்கரத்தையும், சங்கையும் மேற்கரத்தில் ஏந்திய வண்ணம் கீழ் வலக்கரத்தை கதாயுதத்தின் மீது கொண்டுள்ளார்.

அந்தராளத்தின் முன்புறம் முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபம் சதுரமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தை உருளை வடிவுடைய சோழர் காலத்தூண்கள் நான்கு தாங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் வட திசையில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்,தேசிகர் ஆகிய ஐவரது உற்சவ விக்கிரகங்கள் தென்திசை நோக்கிய வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றன. உற்சவர்கள் அனைத்தும் சேவார்திகளை பரவசப்படுத்தும் வகையில் பஞ்சலோக விக்கிரகங்களாக வனப்புடன் வார்க்கப்பட்டுள்ளன.

மகாமண்டபம் தென்திசை வாயிலின் முன்புறம் அமைந்துள்ளது. சதுரமாக அமைந்துள்ள இம்மண்டபத்தை வரிசையாக மூன்று தூண்கள் வீதம் இரு வரிசைகளில் ஆறு சோழர்காலத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சுமார் 6 அடி உயரமுடையத் தூண்கள் யாவும் உருளை வடிவுடையவை. கீழ்த்திசையிலும், மேற்திசையிலும் இம்மண்டபத்தை அடைய நான்கு படிகளுடைய இரு வாயில்கள் உள்ளன. பழைமையான கீழ்த்திசை வாயிலின் இடபுறம் அழகிய யானைத் துதிக்கையை ஒத்த வேலைப்பாடுகள் அமைந்து வனப்பூட்டுகிறது.

ஆலய சுற்றுப் பிராகாரத்தில் வடமேற்குப்பகுதியில் கீழ்த்திசை நோக்கியவண்ணம் ஆண்டாள் சந்நதி அமைந்துள்ளது. ஆண்டாள்  இரு கரங்களுடன் திரிபங்கியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவளது வலக்கரம் நீலோற்பலத்தைப் பற்றியும், இடக்கரம் தாழ்கரமாக லோல ஹஸ்தத்திலும் அமைந்து காட்சியளிக்கிறது.  இம்மண்டபத்தின் முன்புறம் கீழ் மேலாக செவ்வக வடிவில் நீண்டு இரு வரிசைகளில் எட்டுத் தூண்களுடன் அலங்கரிக்கின்றது.

வெளிப்பிராகாரத்தில் கீழ்த் திசையில் நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. இம் மண்டபத்தை அலங்கரிக்கும் தூண்களின் கால்பகுதி நீள் சதுர வடிவுடையது. உடற்பகுதி 16 பட்டை வடிவுடையவை, இத் தூண்களில் கோதண்டராமர், லக்குமண பெருமாள், சீதாபிராட்டி, திருமால்,தாயார். சிறிய திருவடி, லக்ஷ்மி நரசிம்மர், மச்சாவதாரம். இடம்புரி விநாயகர், சூரியன். சந்திரன் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மண்டபம் கி.பி.18 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சார்ந்தது. நான்குகால் மண்டபத் தூண் ஒன்றில் இம்மண்டபத்தை தோற்றுவித்தவர், அவரது துணைவியார் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

கோயிலுக்குச் செல்லும் முன்மண்டபத்தின் மேல் தசாவதார சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோயில் விமானத்தின் தென்கிழக்கு திசையில் தாயார் சந்நதி அமைந்துள்ளது. தாயார் நான்கு கரங்களுடன் இரு கால்களை மடித்து பத்மாசனத்தில் வீற்றி அருள்கிறாள். மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலர்களை ஏந்தியும் கீழ்க்கரங்கள் அபய-வரத ஹஸ்தம் காட்டியும் அருட்பாலிக்கின்றன.  இந்த சந்நதியையொட்டி முன்புறம் முகப்பு மண்டபமும் அதனையொட்டி கோயிலை வலம்வர திருச்சுற்று பிராகாரமும் , திருமதிலும் இடம் பெற்றுள்ளன.
வௌிப் பிராகாரத்தின் தென்திசையில் திருமதிலையொட்டி நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், விஷ்ணுசித்தர் ஆகிய மூவருக்கும் தனிச் சந்நதிகள் உள்ளன. இவை வடதிசையை நோக்கி அமைந்துள்ளன. திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் திருமடப்பள்ளி அமைந்துள்ளது. இதன் எதிரே வடதிசை மதிலை ஒட்டி தேசிகர் சந்நதி அமைந்துள்ளது. அதையொட்டி பக்கவாட்டில் கண்ணாடி மாளிகை உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மரின் உற்சவரை.ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ நாட்களில் எழுந்தருளச் செய்வர். மறுபுறம்
யாகசாலை உள்ளது.

திருமதிலின் கீழ்த்திசையில் ராஜகோபுரம் எழுந்துள்ளது. கோபுர வாயிலான மாகதுவாரம் வேலைப்பாடு மிக்க தாமரை குமிழ்களை உடைய மரக்கதவுகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து நிலைகளை உடைய கோபுரமாகத் திகழ்கிறது.  ஒவ்வொரு நிலையிலும் துவாரபாலகர்களின் சுதை உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம், பவித்ர உற்சவம், உடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராம நவமி, புரட்டாசி மாதம் வேதாந்த தேசிகர் உற்சவம், மார்கழி பகல்பத்து, இராப்பத்து உற்சவம், தை பார்வேட்டை உற்சவம், மாசி மகம், நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடைமுறையில் உள்ளன.

ஆண்டுதோறும் தைமாதம் இரண்டாம் நாள் திருமுக்கூடலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅப்பன் வெங்கடேசன் கோயிலிலும், பழைய சீவரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோயிலிலும் தை மாதம் நடைபெறும் பார்வேட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள்,  பழைய சீவரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள், காவந்தண்டலம் பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வரதராஜர் இங்கு எழுந்தருள ஓர் சுவையான காரணம் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முதன்முதலில் வரதராஜர் அத்திமரத்தாலான மூலவராய்தான் இருந்தார்.


நாளடைவில் அந்த திருவுரு பின்னப்பட அந்த விக்ரகத்தை வரதராஜர் ஆலய திருக்குளத்தில் பாதுகாத்தனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவரை நீருக்கடியிலிருந்து எடுத்து பக்தர்கள் தரிசிக்க வைப்பர்.  இவ்வருடம் ஜூலை மாதம் அத்திவிரதரை தரிசிக்கலாம் தினசரி தரிசனத்திற்கு மூலமூர்த்தியை கற்சிலையாக வடிக்க பழையசீவரத்திலிருந்துதான் கல் எடுத்தனராம். அதை பாராட்டும் வண்ணமே சீவரம் பார்வேட்டை உற்சவம் என அழைக்கப்படும் இந்த உற்சவத்திற்கு இங்கே எழுந்தருள்கிறாராம்.

ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமியை பௌர்ணமி,ஸ்வாதி, ஏகாதசி, அமாவாசை, பிரதோஷ காலம், சங்கராந்தி புண்ய காலத்தில் தரிசனம் செய்தால் சர்வ ஐஸ்வர்யங்களும் தந்து மோட்சம் அளிப்பார். திருமணத் தடை விலகும் மனம் சாந்தி பெறும். நம் தீவினைகளுக்கு பயங்கரமானவனாகவும், நல் வினைகளுக்கு அன்பானவனும் ஆகிய நரஹரியைப் பணிவோம். செங்கல்பட்டு காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் பழைய சீவரம் அமைந்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூரை அடையலாம். பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம். பழைய சீவரம் என்னும் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.

ந.பரணிகுமார்

Tags : Perumal ,Parvati ,
× RELATED திருமெய்யம் சத்யமூர்த்தி பெருமாள்