எந்த கோயில்? என்ன பிரசாதம்?

நாமகிரி மலை, விஷ்ணு அம்சம் பொருந்திய சாளக்கிராம மலை. சாளக்கிராமம் என்பது உருவத்திலும், அமைப்பிலும் தெய்வீக தன்மையிலும் சிறப்பு பெற்றது. ஒரே கல்லால் ஆனது. சாளக்கிராம மலையை கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த ஆஞ்சநேயர் இந்தப்பகுதியில் இளைப்பாற தரை இறங்கி, மலையை கீழே வைத்தார். பிறகு எடுக்க முடியவில்லை. இதுவே நாமகிரி மலையாயிற்று. இங்கிருந்தபடியே நரசிம்மருடன் பக்தர்களுக்கு சேவை செய்ய ஆஞ்சநேயர் தீர்மானித்தார் என்கிறது தல புராணம். நரசிம்ம ஸ்வாமி குடவரைக்கோயில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குகைக்கோயிலில் ஸ்ரீநரசிம்மர் - நாமகிரி தாயார், ரங்கநாதர் - அரங்கநாயகி தாயார் அருட்பாலிக்கின்றனர்.

நரசிம்மர் கோயிலில் இருந்து 250 அடி தூரத்தில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். ஆறேமுக்கால் அடி அகலம். ஒரே கல்லில் ஆனது.  திறந்த வெளியில் கை கூப்பி வணங்கும் ஆஞ்சநேயர், தன் அருகில் நரசிம்மர் மலை வடிவில் விதானம்(மேற்கூரை) இன்றி இருப்பதால் தனக்கும் விதானம் (மேற்கூரை)  தேவையில்லை என்று பக்தர்கள் கனவில் வந்து மறுத்து விட்டாராம்.

ஒரே தினத்தில் நரசிம்மசுவாமி, ரங்கநாதர், ஆஞ்சநேயர் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக தேர்த்திருவிழா நடக்கிறது. ஆஞ்சநேயர் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. உற்சவ காலங்களில் இந்தத் தேரில் ஆஞ்சநேயரின் உற்சவமூர்த்தி பவனி வருகிறார். ரூ.1.50 கோடியில் 2008ம் ஆண்டு உருவான தேர் இது. ஆஞ்சநேயருக்கு தினமும் வடை மாலை சாத்துதல் பிரார்த்தனை பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக அனுமன் ஆலயங்களில் தங்கக்கவசம் உள்ள அனுமார் இவர் மட்டும்தான் என்கிறார்கள். அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஐந்து நாட்கள் முன்பிருந்தே 1,08,000 வடைகள் தயார் செய்யப்பட்டு அனுமத்ஜெயந்தியன்று காலை 4.30மணிக்கு அந்த 1,08,000 வடைமாலை அனுமனுக்கு சாத்தப்படும். 9.30 மணி அளவில் அந்த வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

அந்த அனுமன் வடை பிரசாத செய்முறையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், திரு.ராஜா பட்டாச்சாரியார்.

தேவையான பொருட்கள்.

உளுத்தம் பருப்பு  25 கிலோ. 800 கிராம்.

மிளகு 500 கிராம்.

சீரகம் 500  கிராம்.

உப்பு 1 கிலோ.

நல்லெண்ணெய் 15 கிலோ.

செய்முறை:

உளுத்தம் பருப்பை மெல்லிய ரவை பக்குவத்தில் மிஷினில்  உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். உப்பை தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். அந்த  உப்புத்தண்ணீரை உளுத்தம் பருப்பு மாவில் சிறிது சிறிதாக சேர்த்து மிளகு, சீரகத்தைப் பொடி செய்து போட்டு வடை தட்டும் பக்குவத்தில் கட்டிகளில்லாமல் பிசையவேண்டும். பின் ஒரு தட்டின் மேல் ஈரத்துணியைப் போட்டு மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட வேண்டும். வடை முக்கால்பதம் வெந்ததும் அடுத்த கடாயில் உள்ள எண்ணெயில் மீண்டும் பொரித்து அனுமனுக்கு மாலையாக கோர்க்க வேண்டும்.

ராகுவுக்கான தானியம் உளுந்து. சனிக்கு எள். ராகுவும், சனியும் ஆஞ்சநேயருக்கு அடிமைப்பட்டவர்கள். ஆகவே இந்த இரு கிரக பாதிப்பும் உள்ளவர்கள், உளுந்து மற்றும் எள் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட வடைமாலையை அனுமனுக்கு சாத்தி வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள்.

- ந.பரணிகுமார்.

Related Stories: