உலகம் போற்றும் உத்தமன்!

39 வயதாகும் எனக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. 10ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயார் இறந்து நான்கு வருடங்கள் ஆகிறது. சகோதரி வீட்டில் தங்கி சிறுகடை நடத்தி வருகிறேன். நான் பார்த்துவிட்டு வரும் பெண்களுக்கு ஒரு வாரத்திற்குள் திருமணம் கூடிவிடுகிறது. பரிகாரங்கள் செய்தும் நல்ல விஷயங்கள் கைகூடவில்லை. உரிய வழி சொல்லுங்கள். ரகு, திருமங்கலம்.

Advertising
Advertising

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு பகவான் மூன்றாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனியுடன் இணைந்திருப்பது களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. என்றாலும் ஜென்ம லக்னத்தில் குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன், மனைவியைக் குறிக்கும் களத்ர காரகன் சுக்கிரன், லக்னாதிபதி புதன் ஆகியோர் இணைந்து அமர்ந்திருப்பதால் மேற்சொன்ன களத்ர தோஷத்திற்கு பரிகாரம் தேட இயலும். முதலில் உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

யாரும் நமக்கு உதவவில்லையே என்ற எண்ணத்தினைத் தூக்கி தூர எறிந்துவிடுங்கள். இந்த உலகம் நமக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுங்கள். நீங்கள் வைத்திருக்கும் சிறு கடையை கொஞ்சம், கொஞ்சமாக பெரிதுபடுத்த இயலும். நம்பிக்கையோடு உழைத்து வந்தீர்களேயானால் காலமும் நேரமும் உங்கள் வளர்ச்சிக்குத் துணை நிற்கும். வியாழன்தோறும் சென்னை, பாடி, திருவலிதாயம், திருவாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்குவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் உங்கள் திருமணம் நடைபெறுவதோடு தொழில் முறையிலும் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

எனது மகனுக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நானும், என் கணவரும் மிகுந்த மன வேதனையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் வேதனை தீர ஒரு நல்ல வழி சொல்லுங்கள். ரேணுகாதேவி, மதுரை.

விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடக்கிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் இருவருக்கும் சாதகமாக அமைந்துள்ளதால் இந்த நேரத்தில் புத்ர பாக்கியம் என்பது கிடைத்துவிடும். இருவரையும் மருத்துவரின் ஆலோசனையை சரிவர பின்பற்றி வரச் சொல்லுங்கள். இருவருடைய ஜாதகத்திலும் சனிபகவானின் தாக்கத்தினால் புத்ர சந்தானம் தடைபட்டு வருவதாக அறிய முடிகிறது.

சனிக்கிழமை நாளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழைச் சிறுவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். மகன் மற்றும் மருமகளின் கரங்களால் அன்னதானம் செய்வது நல்லது. ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் குடும்ப புரோஹிதரின் துணை கொண்டு சந்தானகோபால ஹோமம் செய்வதும், தினந்தோறும் கீழ்க்கண்ட சந்தான கோபால மந்திரத்தை தம்பதியர் இருவரும் 18 முறை ஜபம் செய்து வருவதும் குழந்தைப் பேற்றினில் இருந்து வரும் தடையினை நீக்கும். ஸ்ரீகிருஷ்ணனின் திருவருளால்12.10.2020ற்குள் வம்சம் விருத்தி அடையக் காண்பீர்கள்.

“தேவகீ சுத கோவிந்த வாஸூதேவ ஜகத்பதே

தேஹிமே தநயம் க்ருஷ்ணா த்வாமஹம் சரணம்

கத:

தேவ தேவ ஜகந்நாத கோத்ர வ்ருத்தி கர ப்ரபு:

தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்

யசஸ்வினம்.

அரசாங்கப் பணியில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்ற எனக்கு தற்போது 73 வயதாகிறது. தற்போது பார்க்கின்சன் என்ற நோயால் கடந்த மூன்று வருடங்களாக பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகிறேன். எனது நோய் குணமாக தகுந்த பரிகாரம் கூறவும். மகாலிங்கம், கோவை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி துவங்குகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி ஐந்தாம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்திருக்கிறார். ஐந்தாம் வீடு என்பது சிந்திக்கும் திறனைக் குறிக்கும். ஐந்தாம் வீட்டின் அதிபதி புதன் 11ல் கேதுவுடன் இணைந்திருக்கிறார். தற்போது ராகு தசை நடப்பதால் நரம்பு மண்டலத்தின் தலைமையிடம் ஆகிய மூளையில் பிரச்சினை உருவாகி உள்ளது. சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அந்த சந்திரன் நரம்பு மண்டலத்தின் அதிபதி ஆகிய புதனின் சாரம் பெற்று நோயினைத் தரும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் தற்போது துவங்கும் ராகு தசையில் சந்திர புக்தியின் காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடும்.

எழுபது வயது வரை இந்த நோய்க்கான அறிகுறி ஏதுமின்றி நீங்கள் நல்லபடியாக பணி செய்து ஓய்வு பெற்றதே கடவுளின் அனுக்ரஹத்தினால்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வயதினைக் கருத்தில் கொண்டு பகவன் நாமாவை சதா ஜபித்து வாருங்கள். திங்கட்கிழமை தோறும் காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை நடக்கும் ராகு கால வேளையில் அபிராமி அந்தாதி பாடல்களைப் படித்து அம்பிகையை மனதில் தியானித்து வணங்கி வாருங்கள். நோயின் தீவிரத்தை சமாளிப்பதோடு அம்பிகையின் அருளால் ஆனந்தமாய் எஞ்சிய காலத்தைக் கழிப்பீர்கள். கவலை வேண்டாம்.

என் மகன் விரும்பிய பெண் அவனை விட வயதில் மூத்தவளாக இருந்ததாலும், ஜாதகப் பொருத்தம் இல்லாததாலும் என் எதிர்ப்பைக் கூறினேன். அதையும் மீறி என் கணவர் அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைத்தார். மருமகள் சம்பாதித்தாலும் வீட்டிற்கு சிறிதளவும் பணம் தருவதில்லை. விடுமுறையில் கூட எனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதில்லை. மகனும், மருமகளும் ஆயுட்காலம் வரை ஒற்றுமையாக வாழ்வார்களா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? விருதுநகர் மாவட்ட வாசகி.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் உங்கள் மருமகளின் ஜாதகம் மகனின் ஜாதகத்தை விட சற்று பலம் பொருந்தியது. குடும்பத்தில் மருமகளின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கும். என்றாலும் மிதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி ஒருவரே என்பதால் அவர்கள் இருவருக்குள்ளும் ஒத்துப் போய் விடும். இரண்டு ராசிகளுக்கும் இடையே வசியப் பொருத்தம் என்பது நன்றாக உள்ளது.

வயது ஒன்றுதான் பிரச்னையே தவிர ஜாதக ரீதியாக பெரிய பிரச்னை ஏதுமில்லை. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கு குடும்பத்தில் உருவாகும் பிரச்னைகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. எதுவாக இருந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளேயே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள். எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் ஓரிரு நாட்களுக்குள் சரியாகிவிடும். நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் உங்கள் மருமகள் பொறுப்புடன் செயல்படுவார். அவர்கள் இருவரின் ஜாதகங்களும் நன்றாக பொருந்தியிருப்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

உத்யோகம் சார்ந்து என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளது. மேலும் உயர் அதிகாரி எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறார். பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட பரிகாரம் கூறுங்கள். கிருஷ்ணகுமார், நாமக்கல்.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய சுப கிரஹங்கள் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சந்திரன் 12ம் வீட்டிலும், குரு 8ம் வீட்டிலும், சுக்கிரன் 3ம் வீட்டிலும் அமர்ந்துள்ளனர். சனி வக்ரகதியில் ஜென்ம ராசியில் இணைந்துள்ளார். சுப கிரஹங்கள் தனித்துச் செயல்பட இயலாமல் மற்ற அசுப கிரஹங்களின் இணைப்பில் உள்ளதால் அரசுப் பணியில் இருந்தும் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க இயலாமல் தவிக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளீர்கள். 46வது வயது முடிந்து 47வது வயது துவங்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

கேது தசை முடிந்து சுக்கிர தசை துவங்கும் காலத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து குறைந்த பட்ச தண்டனையோடு மீண்டு வருவீர்கள். அதற்குப் பின்னரே உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்க இயலும். மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நாட்களில் விரதம் இருந்து சுப்ரமணியரை வணங்கி வாருங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சென்னிமலை சென்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை முடிந்தவரை எழுதுங்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரக் காண்பீர்கள்.

என் மகள் வயிற்றுப் பேரனுக்கு மூன்று வயது முடிந்துவிட்டது. நாம் எது சொன்னாலும் புரிவதில்லை. கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. தனிமையில் இருப்பதையே விரும்புகிறான். நாங்கள் பேசுவது புரிகிறது. அதற்கு அவன் பதில் அளிப்பதில்லை. அவனுடைய ஜாதகத்தில் என்ன குறை இருக்கிறது? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? தனலட்சுமி, பெங்களூரு.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. மற்ற குழந்தைகளைப் போல் ஒரு சராசரி குழந்தையாக உங்கள் பேரனை எண்ணிப் பார்க்க இயலாது. லக்ன பாவகமும், லக்னத்தில் இணைந்திருக்கும் சந்திரன், சனி ஆகியோரின் சஞ்சாரமும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்திருக்கிறது. சிந்தனையைத் தூண்டும் ஐந்தாம் வீட்டில் குருவின் சாரம் பெற்ற கேதுவின் அமர்வு ஞான மார்க்கத்திற்கான வழியைக் காட்டும். தனிமையில் இருக்கும்போது அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதை அவர் அறியாத வகையில் கண்காணித்துப் பாருங்கள்.

பசி மற்றும் இயற்கை உபாதைகளை அவர் எப்படி தெரியப்படுத்துகிறார் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். அவருடைய உடல்நிலையில் எந்தவிதமான கோளாறும் இருப்பது போல் தெரியவில்லை. பூர்வ ஜென்ம பந்தம் தொடர்கிறது. பேரனை அவரது போக்கிலேயே செயல்பட அனுமதியுங்கள். மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடத்திற்கு ஒருமுறை குழந்தையை அழைத்துச் சென்று அங்கே அவரது செயல்பாடு எவ்வாறு அமைகிறது என்பதை கவனியுங்கள். ஏழு முடிந்து எட்டாவது வயது துவங்கும்போது அவரது நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். உலகம் போற்றும் உத்தமனாக உங்கள் பேரன் உயர்வடைவார்.

நான் ஒவ்வொரு மார்கழி மாதமும் பழனி மலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்த வருடமும் பழனிக்குச் சென்று இறைவனை வணங்கி, தங்கத்தேரை தரிசித்தபின் என் பையைப் பார்த்தபோது என்னுடைய நகை மற்றும் பணம் அடங்கிய பையைக் காணவில்லை. இது எனக்கு மிகவும் மன வேதனையை உண்டாக்கிவிட்டது. இதற்கு நல்லதொரு தீர்வினைச் சொல்லுங்கள். சங்கீதா, சென்னை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது பெருத்த இழப்பு என்பது ஏதும் இல்லை. இறைவனின் சந்நதியில் இவ்வாறு நகையையும், பணத்தையும் இழந்து விட்டோமே என்று எண்ணாமல் நிதானமாக அமர்ந்து யோசித்துப் பாருங்கள். ஆலயத்திற்குச் செல்லும்போது கையில் நகையை எடுத்துச் செல்ல வேண்டிய காரணம் என்ன? அணிந்திருந்த நகை என்றால் அதனைக் கழற்றி பையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

கள்வர் குறித்த பயமா அல்லது இறைவனின் மீது நம்பிக்கை இல்லாததாலா? கூட்டத்தில் நகையை யாரேனும் பறித்துவிடுவார்கள் என்ற எண்ணமும், இறைவனின் மீதான நம்பிக்கை இன்மையுமே நீங்கள் உங்கள் பொருளை இழந்ததற்கான காரணம். வருடந்தோறும் பழனிக்குச் சென்று வரும் நீங்கள் ஏதேனும் வேண்டுதலை பாக்கி வைத்திருக்கிறீர்களா என்பதை உள்ளத்தில் சஞ்சலம் ஏதுமின்றி நிதானமாக யோசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும். உண்மையை உணர்ந்து கொண்டு உள்ளன்போடு இறைவனை வணங்கித் துதியுங்கள். உங்கள் ஜாதக பலம் நன்றாக உள்ளதாலும், இறைவனின் திருவருளாலும் வெகுவிரைவில் நீங்கள் இழந்ததைப் போன்று இருமடங்கு பொருள் வந்து சேர்ந்துவிடும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: