ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் : பக்தர்கள் புனித நீராடினர்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மாசி மாத பவுர்ணமியான நேற்று காலை அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், ஸ்ரீகாளத்தீஸ்வரர் சமேத ஞானபிரசூனாம்பிகை தாயார், சண்டிகேஸ்வரர், கண்ணப்பநாயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பஞ்ச மூர்த்திகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து சொர்ணமுகி ஆற்றில் அர்ச்சகர்கள் திரிசூல ஸ்நானம் செய்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த ஏராளமான சொர்ணமுகி ஆற்றில் புனிதநீராடினர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் நான்குமாட வீதிகளில் உலா வந்தனர். இதேபோல், ஸ்ரீகாளத்தீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தங்க அதிகார நந்தி வாகனத்திலும், ஞானபிரசூனாம்பிகை தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் மேள தாளம் முழங்க வீதி உலா வந்து திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: