பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் மாசி மகத்தையொட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளிகொண்டாப்பட்டு கிராமம் கவுதம நதியில், மாசி மகத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதில் பங்கேற்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் தை 5ம் நாள் தென்பெண்ணை ஆற்றிலும், மாசி மாதம் ரதசப்தமியன்று வட பெண்ணை எனப்படும் செய்யாற்றிலும், மாசி மகம் நட்சத்திரத்தன்று கவுதம நதியிலும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு.

அதன்படி, மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று, திருவண்ணாமலை அடுத்த பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தின் வழியாக கடந்து செல்லும் கவுதம நதியில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை கோயிலில் இருந்து சந்திரசேகரர் வடிவான அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் புறப்பட்டு கவுதமநதிக்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து, கவுதம நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர், குழந்தை பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக குரல்வழி தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, கவுதம நதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அண்ணாமலையாரே நேரில் சென்று திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், பின்னர், கவுதம நதியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியையொட்டி, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் விரிவான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. கவுதம நதியில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் கடந்த ஆண்டு தீர்த்தவாரியின் போது அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிமென்ட் தொட்டியை சீரமைத்து, அதில் தண்ணீர் நிரப்பியிருந்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், தண்ணீர் நிரப்பட்டுள்ள தொட்டிக்கு அருகே பக்தர்கள் செல்வதை தவிர்க்க, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories: