மணம் முடிய வரமளிப்பாள் பொயிலாச்சி அம்மன்

நம்ம ஊரு சாமிகள் - உழக்குடி, தூத்துக்குடி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ளது பழவூர். விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பன். இவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த போதும், மற்றவர்களின் விவசாயப் பணிகளான களைபறிப்பு, அறுவடை முதலானவற்றிற்கு கூலியாட்களை அழைத்துச் செல்லும் பணியை செய்து வந்தார். நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவரது மனைவி சடைச்சி, ஐந்தாவதாக பெண் குழந்தை பெற்று எடுத்தாள். இருளப்பன், மகளுக்கு தனது குல தெய்வமான பொயிலம் குளத்து கரையிலிருந்த அம்மன் பெயரை சூட்டினார். சாமி பெயரைக்கூறி அழைத்தால் அது மரியாதைக் குறைவாக இருக்கும் என்று கருதி, பொயிலம் குளத்தாள் என்று செல்லமாக அழைத்து வந்தனர். அந்த பெயர் சுருங்கி பொயிலாள் என அழைக்கப்படலானாள். மகள் பத்து வயது சிறுமியாக இருக்கும்போது தந்தை இறந்து விட, அடுத்த சில மாதங்களில் தாயும் இறக்கலானாள்.

அன்னை தந்தை இல்லாத குறையைப் போக்க, அண்ணன்மார்கள் நாலு பேரும் தங்கை மேல் அளவற்ற பாசம் கொண்டிருந்தனர். தங்கையின் நலனுக்காக மூத்த அண்ணன் மணமுடித்துக்கொண்டான். மனைவியிடம் எனது தங்கையை, நல்ல ஒரு தாயாக இருந்து கவனிப்பதே உனது கடமை என்றுரைத்தான். நாட்கள் நகர்ந்தது. பொயிலாள் பருவம் வந்தாள். உருவம் மாறினாள். படைத்த பிரம்மனே பெருமை கொள்ளும் பேரழகுடன் திகழ்ந்தாள். இரண்டாவது அண்ணனும் திருமணம் செய்து கொண்டான். அண்ணியர் இருவரும் நாத்தனார் பொயிலாளை அன்போடும், அரவணைப்போடும் நடத்தினார்கள். அந்த காலத்தில் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி, மேலப்பாளையம், ஆலங்குளம் உள்ளிட்ட சில இடங்களில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது.  வல்லநாட்டைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

தந்தை இழந்த அவரது குடும்பத்தில் அவர் தான் முழு பொறுப்பையும் ஏற்று தனது தங்கை, மற்றும் 2 தம்பியரையும் கவனித்து வந்தார். ஆடு, மாடு வளர்த்தல், வாங்குதல், விற்பனை செய்தல் தொழிலை செய்து வந்தனர். அவரது குடும்பம் காரையார் சொரிமுத்து அய்யனாரை வணங்கி வந்தனர். அதனால் தான் அந்த கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வைத்திருந்தனர் பெற்றோர்கள். சந்தைக்கு மாடுகளை ஓட்டிச்செல்வது இரண்டாவது தம்பி கொம்பையாவும், மூன்றாவது தம்பி பட்டவராயனும் தான். ஒரு நாள் சீவலப்பேரி சந்தைக்கு 10க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். அங்கு விலை போகாததால், மாடுகளை மேலப்பாளையம் சந்தைக்கும், அங்கிருந்து ஆலங்குளம் சந்தைக்கு ஓட்டிச்சென்றனர். பட்டவராயன் மட்டும் ஓட்டிச்சென்றான். கொம்பையா மாலையில் பால் கறவைக்கு அண்ணனுக்கு உடனிருந்து உதவி செய்ய வேண்டும் என்று ஊருக்கு சென்றுவிட்டார்.

பட்டவராயன், ஆலங்குளம் அருகேயுள்ள பழவூர் கிராமத்திலுள்ள செம்மண் சாலையில் மாடுகளை வேகமாக ஓட்டி வந்தான். அந்த மாலை நேரம் தனது தோழிகளோடு ஊர் பொது கிணறாக இருக்கும் மடத்துக்கிணத்தில் தண்ணீர் எடுப்பதற்காக அதே சாலையில் பொயிலாள் சென்று கொண்டிருந்தாள். மாடுகளின் காலடி சத்தம் கேட்டு வேகமாகத் திரும்பினாள் பொயிலாள். மாடுகள் நெருங்கிவிட்டது. ‘‘ஏய், ஒதுங்குங்கடி மாடு வருது’’ என்றவள். மாட்டின் பின்னால் வந்த பட்டவராயனைப் பார்த்து, ‘‘யேவ், என்ன மனுஷன்யா நீ, மாட்டை பத்திட்டு வந்தா சொல்ல மாட்ட,’’ ‘‘இந்த பாரும்மா, நீங்க தான் ஒதுங்கிப் போகணும். இது என்ன உங்க பாட்டன் போட்ட பாதையா,’’ என்று கேட்க, பொயிலாள் உடன் வந்த அவளது தோழி, ‘‘மாட்டுக்கு கழுத்தில மணிய கட்ட வேண்டியது தான’’, என்றாள். ‘‘சந்தைக்கு கொண்டு போற மாட்டுக்கு மணிய கட்டியா கொண்டு போவா என்ன மடத்தனமா பேசுதே’’ என்ற பட்டவராயன், பொயிலாளை பார்த்து ‘‘நீ என்ன இந்த ஊரு தலைவரு மவளா’’ என்று கேட்க, ‘‘ஏன் அதெல்லாம் கேக்குதீக’’ என்றாள் தோழியரில் மற்றொருத்தி.

அப்போது பொயிலாள் கம்பீரமாக சொன்னாள் ‘‘பட்ட கருப்பன் தங்கச்சி.’’ ‘‘உங்க 3வது அண்ணன் சடையப்பன் என் சேக்காளியோட கூட்டாளிதான்.’’ ‘‘அதெல்லாம் இருக்கட்டும் சும்மா இங்கே பாத்துட்டு போவாமா, முன்ன பார்த்து நடங்க.’’ என்றபடி அவர்கள் கிணத்துபக்கம் திரும்ப, அவர்களை கடக்கும் வரை, பொயிலாளை திரும்பி, திரும்பி பார்த்துச் சென்றான் பட்டவராயன். சில தினங்களுக்கு பின்னர் பட்டவராயன் தனது நண்பன் வெள்ளபாண்டியுடன் பொயிலாள் மூன்றாவது அண்ணன் சடையப்பனை சந்தித்து இந்த பகுதியில் யாராவது மாடுகள் விற்றால் தனக்கு வாங்கித்தருமாறு கூறிச்சென்றான். மங்கை பொயிலாளை பார்ப்பதற்காக, அவளது அண்ணன் மார்களுடன் மாட்டு வியாபாரம் ரீதியாக நட்பை உருவாக்கினான் பட்டவராயன்.

அண்ணன்மார்களுடன் கொண்ட நட்பில் அடிக்கடி பொயிலாள் வீட்டுக்கு வருவதும், அவளோடு சாடைக்காட்டி பேசுவதுமாக அவர்களிடையே உறவு வளர்ந்தது. ஒரு நாள் பட்டவராயன், வீட்டுக்கு வந்தபோது யாரும் இல்லாததால் பொயிலாளிடம், உன் பேரு என்ன என்று கேட்க, அவள் பொயிலாள் என்றாள். தனது பெயர் பட்டவராயன் என்றதும். பொயிலாள் கூறினாள். எனக்கு பட்டவராயன் சாமிய புடிக்கும். அவரு கதையை வில்லுப்பாட்டுல கேட்டிருக்கேன், என்றாள். அப்போது குறுக்கிட்ட பட்டவராயன், இந்த பட்டவராயன புடிக்குமா என்று கேட்க, அந்த நேரம் அங்கே வந்த அவளது இரண்டாவது அண்ணி, ‘‘என்ன தம்பி, ஆம்பிள இல்லாத வீட்டில் சமஞ்ச புள்ளகிட்ட பேசிட்டு இருக்கேளே.’’ என்று கேட்டதும். பொயிலாள் குறுக்கிட்டு ‘‘மைனி, இவிய இப்பத்தான் வந்தாவ’’ என்றாள்.

‘‘சரி, உங்களுக்கு என்னவேணும் தம்பி,’’ ‘‘உங்க நாத்தனாரு வேணும்.’’ என்னது என்றாள் பொயிலாள் அண்ணி.

‘‘உங்ககிட்ட நடவுக்கு நாத்து இருந்தா வாங்கிட்டு போவ வந்தேன். நீங்க பேசுனிதல நாக்கு உளறுது.’’ என்று பதில் கூறியவாறு அவ்விடத்தில் இருந்து

நகர்ந்தான் பட்டவராயன். மாதங்கள் சில கடந்து வளர்ந்தது அவர்களது காதல். ஒரு நாள் மாலை நேரம் தண்ணி எடுக்க வந்த பொயிலாளும், பட்டவராயனும் பேசிக்கொண்டனர். அப்போது பொயிலாள் ‘‘உங்க குடும்பத்திலயும், சாதி சனத்திலயும் என்ன ஏத்துக்கு வாங்களா’’ என்று கேட்க, ‘‘அவங்க ஏத்துக்கிறத விடு, உனக்காக இந்த மண்ணை விட்டு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர, உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை நம்பி வந்தா உசுரையும் தருவேன். உன்னை வேறு யாருக்கும் உங்க அண்ணன் மாரு கட்டிக்கொடுத்திட்டாங்கான்னா,’’ ‘‘உன் தாலிய தாங்கப்போற இந்த கழுத்தில வேறு யாரையும் தாலிய கட்ட விட்டு விடுவேனா. வாழ்ந்தா உன்னோடு, இல்லையேல் மண்ணோடு. இதுதான் என் முடிவு.’’ என்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பட்டவராயன் ‘‘சாகவே முடிவு எடுத்துட்டோம். அப்புறம் என்ன தயக்கம் வா ஊரைவிட்டு போயிருவோம்’’ என்று கூறினான். சில நிமிட மௌனத்திற்கு பிறகு இருவரும் வரும் புதன் கிழமை மாலை நேரம் ஊரை விட்டு ஓடிப்போக முடிவு எடுத்தனர். புதன்கிழமை வந்தது. மாலை நேரம் ஆனது. தனது மூத்த அண்ணன் மகள் ஒயிலாவோடு விளையாடிக்கொண்டிருப்பதாக அண்ணியிடம் கூறிக்கொண்டு 8 வயது ஒயிலாவுடன் பொயிலாள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவர்களுடன் பொயிலாள் செல்லமாக வளர்த்து வந்த பூச்சி என்ற நாயும் உடன் வந்தது. ஒயிலாவுக்கு கண்ணை துணியால் கட்டிவிட்டு தன்னை தேடி தொடும்படி கூறிவிட்டு அங்கே இருந்த செடிகளின் நடுவே ஒளிந்து கொண்டாள் பொயிலாள். அவளை ஒயிலா கண்டுபிடித்து விட, உடனே அருகே நின்ற நாயுருவி செடியை பிடுங்கி, ஒயிலா மேல் அடித்தாள். நாயுருவி விதைகள் ஒயிலா துணி மீது ஒட்டிக்கொண்டது.

‘‘என்ன, அத்தே. நாயுருவி காய், என் பாவாடை மேல முழுதும் ஒட்டிகிட்டு.’’ ‘‘ஒயிலா இதை ஒவ்வொண்ணா எடுத்து முடிச்சிட்டு, அத்தையைக் கண்டு பிடிக்கணும். அதுவரை அத்தை ஒளிஞ்சிருக்கேன்.’’ என்றாள். அவளும் ம்…ம்… என்று ஒப்புதல் கொடுக்க, பொயிலாள் அவ்விடத்திலிருந்து புறப்பட்டாள். அவர்கள் திட்டமிட்டபடி மடத்துக்கிணத்துக்கு பக்கம் ஒதுங்கி நின்ற பட்டவராயனுடன் புறப்பட்டுச்சென்றாள். நாயுருவி விதைகளை எடுக்க முடியாமல் அவதிப் பட்ட ஒயிலா, வீட்டுக்கு பாவாடையை மாற்றச் சென்றாள். அப்போது அவளது தாய் ‘‘அத்தைய எங்க, நீ மட்டும் வார என்று கேட்க, அத்த அங்க ஒளிஞ்சிருக்கியாவ, நான் போய் கண்டுபுடிக்கணும் என்றாள். நீ ஒண்ணும் கண்டு பிடிக்க வேண்டாம். கருக்கலாயிற்று நீ வீட்டுல உட்காரு, நான் போயி அவள கூட்டிட்டு வாரேன்.’’ என்று கூறியவாறு. பொயிலாள் அண்ணியர் இருவருமே வந்து பார்க்கின்றனர். பொயிலாளையும், பூச்சி நாயையும் காணவில்லை.

பொயிலாளும், பட்டவராயனும் பக்கத்து ஊரான உழக்குடி கிராமத்திற்கு வந்தனர். அங்கு அடர்ந்த காட்டுக்குள் முள் முருங்கை செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்தனர். இரவு முழுவதும் தேடி ஓய்ந்து போன பொயிலாள் அண்ணன் மார்கள், மறு நாள் காலையில் தேட தொடங்கினர். உழக்குடி கண்மாய் கரையோரம் இருந்த மூன்று பேர்களை பார்த்து பொயிலாள் அண்ணன், ‘‘கோனாரே, இந்த பக்கம் பருவப்பொண்ணு யாராச்சும் போனாங்களா’’ என்று கேட்க, ‘‘நாங்களே வருத்தத்தில இருக்கோம். கிடைக்கு ஒரு ஆட்டுக்குட்டி தினமும் காணாம  போகுது. யாராச்சும் வெளியூர் காரங்க வந்து காட்டுக்குள் பதுங்கி இருப்பாங்க போல அதனால சாப்பாட்டுக்கு குட்டியாடுகள களவாண்டு போயிருகானுக’’ என்றதும். தம்பிகளுக்கு உத்தரவு இட்டான். ‘‘ஏலே, இந்த ஒடங்காட்டுக்குள்ள தான் பதுங்கியிருக்கணும். அந்த பன மரத்து மேலே ஏறி பாருல என்று கூற’’, அதன்படி பொயிலாள் இரண்டாவது அண்ணன் மூக்காண்டி மரத்தின் மேலே ஏறி இருந்து பார்த்தான். அப்போது அவர்கள் இருந்த இடத்திலிருந்து 2 கி. மீ தொலைவில் அடுப்பு கூட்டி சமையல் நடப்பதும்.

அருகே நாய் ஒன்று படுத்திருப்பதும். பக்கத்தில் பட்டவராயன் மார்பில் தலை வைத்து பொயிலாள் படுத்திருந்தாள். மரத்திலிருந்து கத்தினான் மூக்காண்டி, ‘‘அண்ணன் நாம மோசம் போயிட்டோம், அந்த வல்லநாட்டுக்காரன், நம்ம தங்கச்சிய சீரழிச்சுப்புட்டான்.’’ என்றான். உடனே வேகமாக கீழே குதித்தான். பொயிலாள் அண்ணங்க 4 பேரும் அவர்கள் இருந்த இடம் சென்றனர். பட்டவராயனை கண்ட துண்டமாக வெட்டி எறிந்தனர். அப்போது அண்ணன்களை தடுத்து சபித்தாள் தங்கை. அவளை ஆத்திரத்தில் வெட்டிக்கொன்றனர். நாய் குரைத்தது. நாம வளர்த்த நாயும் நமக்கு துரோகம் பண்ணிட்டு என்று கூறியபடி அந்த நாயையும் வெட்டிக்கொன்றனர். இந்த தகவல் வல்லநாட்டுக்கு தெரிந்தது. பட்டவராயன் அண்ணன்கள், மாமன் மச்சான் உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் வந்து பொயிலாள் அண்ணன்களை வெட்டிக்கொன்றனர். கடைசி அண்ணன் மட்டும் அவர்களிடமிருந்து தப்பிச்சென்றான்.

பொயிலாள் இறந்த எட்டாவது நாள் உழக்குடி கிராமத்தில் கிடையில்(பட்டியில்) இருந்த ஆடுகள் அனைத்தும் மடிந்தன. இப்படி பல பேருக்கு நடந்தது. அவர்கள் குறி கேட்டபோது, ‘‘ சாமியோவ், ஒடங்காட்டுக்குள்ள வெட்டுப்பட்டு மாண்டு போன ரெண்டு உசுரும், கயிலாயம் போகாம இங்கே சுத்திகிட்டு இருக்கு, அவங்க சாவுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்க காரணமாயிட்டிங்க, அதனால தான் உங்க மாடு, கண்ணுங்க துள்ள, துடிக்க சாவுது. உடனே அவங்களுக்கு கல்லெடுத்து நட்டு வச்சு, துணி மணிக எடுத்துவச்சு, பண்ட பலகாரம் செஞ்சு வச்சு பூச பண்ணுங்க. எல்லாம் சரியாயிரும்.’’ என்று கூற, அதன்படி பொயிலாளுக்கும், பட்டவராயனுக்கும், பூச்சி நாயுக்கும் சிலை அமைத்து கோயில் எழுப்பி படையல் வைத்து பூஜை செய்தனர்.

அதன் பின்னர் பொயிலாள் தெய்வமானாள். பொயிலா அம்மன் என்றும் பொயிலாச்சி அம்மன் என்றும், பூச்சி அம்மன் என்றும் இந்த கோயில் அழைக்கப்பட்டு வருகிறது. பட்டவராயன் கோயில் என்றும் அழைக்கின்றனர். (சொரிமுத்தையன் கோயில் முத்துப்பட்டன் வேறு. இந்த பட்டவராயன் வேறு). இந்தக்கோயில் உழக்குடி அருகே ஆலந்தா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பூச்சியம்மன் கோயிலுக்கு நெல்லையிலிருந்து சீவலப்பேரி வழியாக 18 கி.மீ ஆட்டோவில் பயணித்து செல்லலாம். உழக்குடி வல்லநாட்டில் இருந்து 16 கி.மீ தூரம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட கலியாவூர் அருகேயுள்ள உழக்குடி.

சு.இளம் கலைமாறன்

Related Stories: