திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத  ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா, கடந்த  10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நிகழ்ச்சியில் தினமும் பல்வேறு அலங்காரம் மற்றும் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின்சார சப்பரப்படலில் சுவாமி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு கடந்த 16ம் தேதி இரவு நடைபெற்றது.

நேற்று(18ம்தேதி) காலை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால்  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு சம்ஹாரம் என்கிற ராவண யுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. ராமாயண நிகழ்வுகளை மையமாக வைத்து பல்வேறு காட்சிகளும், கழுகு அரசனாகிய ஜடாயுவுக்கு ராமன் மோட்சம் தரும் நிகழ்வுகளும் சம்ஹார விழாவில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

Related Stories: