காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமக விழா தேரோட்டம்

கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசிமக விழா தேரோட்டம் நேற்று நடந்தது. மகாமக குளத்தில் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணத்தில் மகாமக தொடர்புடைய சிவன் கோயில்களான ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6  சிவன் கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதேபோல் கடந்த 11ம் தேதி வைணவ தலங்களான சக்கரபாணிசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

இந்நிலையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசிவிசுவநாதசுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி கோயில், கவுதமேஸ்வரர் கோயில்களின் தேரோட்டம், மகாமக குளக்கரையில் நேற்று மாலை நடந்தது. அதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோயில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோயில் தேரோட்டம் நடக்கிறது. பின்னர் 10 நாள் உற்சவம் நடைபெறும். சிவன் கோயில்களான கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர்,  நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய 6 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் இன்று மதியம் 12 மணிக்கு வந்து அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடக்கிறது. அப்போது பக்தர்களும் புனித நீராடுவர்.

Related Stories: