×

போட்: விமர்சனம்

ஒருபுறம் 2வது உலகப்போர் நடக்க, மறுபுறம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நடக்கும் 1943களில் இக்கதை நடக்கிறது. சர்வாதிகாரி ஹிட்லரின் ஆதரவு நாடான ஜப்பான் குண்டுவீசி மற்ற நாடுகளை அச்சுறுத்திய நிலையில், சென்னை கடற்கரை வெள்ளையர் முகாமிலும் குண்டுவீச்சு நடக்கும் என்ற தகவல் பரவுகிறது. முகாம் சிறையில் இருக்கும் தம்பியை விடுவிக்க, உயரதிகாரியின் சிபாரிசுடன் மீனவர் யோகி பாபு, அவரது பாட்டி குலப்புள்ளி லீலா வருகின்றனர். ஆனால், எதுவும் நடக்காத நிலையில், ஜப்பான் விமானங்கள் குண்டு வீசுவதாக அச்சுறுத்தப்படுகிறது.யோகி பாபு, குலப்புள்ளி லீலா ஆகியோருடைய படகில் ஏறிய எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா மற்றும் அவரது மகன், சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் கவுரி கிஷன் ஆகியோர் கடலுக்குள் தப்பிக்கின்றனர். 12 மைல் தூரம் தாண்டி நடுக்கடலில் 9 பேர் பயணிக்கும் நிலையில், வெள்ளைக்கார போலீஸ் உயர் அதிகாரி ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் அப்படகில் ஏறுகிறார். 10 பேரில் ஒருவர் தீவிரவாதி என்ற தகவல் கிடைக்கிறது.

இந்த நிலையில், படகில் ஓட்டை விழுந்து கடல்நீர் புகுந்துகொள்ள, 3 பேர் படகில் இருந்து அகன்றால் மட்டுமே மற்ற 7 பேர் உயிர் பிழைக்க முடியும் என்று யோகி பாபு சொல்கிறார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முற்படும் ஒவ்வொருவரின் மிருக குணம் என்ன? யார் அந்த தீவிரவாதி என்பது மீதி கதை.தூத்துக்குடி உவரி கடலில் காட்சிகள் நகர்கின்றன. நீலக்கடலின் நீளம், அகலம், ஆழம், அழகு, பேரிரைச்சல், அலைகளின் ஆர்ப்பாட்டம் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. விறுவிறுப்பான திரைக்கதையுடன், ஒரே படகில் 10 பேருடன் படத்தை நகர்த்திய இயக்குனர் சிம்புதேவன், வசனங்களின் மூலம் அரசியல் பகடி மற்றும் சமூக அக்கறையை விதைத்துள்ளார். கதையின் நாயகன் படகோட்டி குமரன் கேரக்டரில், யதார்த்தமான நடிப்பில் அசத்தி இருக்கிறார் யோகி பாபு.

வழக்கமான அவரது ‘பன்ச்’ டயலாக்குகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. கவுரி கிஷன், மதுமிதா ஆகியோரின் சாந்தமான முகங்களே அனைத்து உணர்வுகளையும் அற்புதமாகக் கடத்திவிடுகிறது. கவுரி கிஷனின் ‘கர்நாடக கானா’ பாடல், ஒன்ஸ் மோர் ரகம். எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோரின் கடவுள் மற்றும் சாதி, மத ஏற்றத்தாழ்வு வசனங்கள், சரியான சவுக்கடி என்்று சொல்லலாம். ஷாரா, சாம்ஸ், குலப்புள்ளி லீலா, ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.முதல் பாதியின் விறுவிறுப்பு, 2ம் பாதியில் சற்று குறைவுதான். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, கடலில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சி நகர்வுக்கான வீரியத்தை அதிகப்படுத்துகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராதது. சிம்புதேவன் வழக்கமான காமெடியைக் குறைத்து, கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.

The post போட்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : World War 2 ,India ,Japan ,Hitler ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சில்லி பாயின்ட்