×

மாசி மகச் சங்கில் உதித்த சங்கரி

கயிலையில் பரமனும், பார்வதியும் அமர்ந்திருந்தனர். அப்போது உமா தேவி இறைவனை நோக்கி ‘‘சுவாமி! உங்களின் உண்மை நிலையை உணர்த்தியருள வேண்டும்’’ என்று வேண்டினார். அதற்கு ஈசன் ‘‘உயிர்கள் அனைத்தையும் உய்யும் பொருட்டு ஐந்தொழில் புரியும் நான் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றேன் எனக்கென்று ஓர் உருவம் கிடையாது. அருளே எனது உருவம்’’ என்றுரைத்தார். அப்போது உமாதேவி ‘‘அருள்தான் உங்கள் உருவம் என்றால் நான்தான் அந்த அருள்’’ என்று தன்னைப் பெருமையாக எண்ணிக் கூறினார். அப்போது இறைவன் உயிர்கள் இயங்கும் தன்மையை நிறுத்தினார். ஒன்றும் இயங்காமல் இருப்பது கண்டு உமா தேவி கலக்கம் அடைந்தார் பின்னர் ‘‘சுவாமி எனக்கு உண்மையை உணர்த்தும் வகையில் இதைச் செய்தீர்கள் இருப்பினும் உங்களுக்கு ஒருகணம் என்பது உயிர்களுக்கு பல யுகங்களாகும் எனவே உயிர்களுக்கு அருள் புரியுங்கள்’’ என்றார்.

ஈசனும் அவ்வாறே அருள்புரிந்ததை அடுத்து உயிர்கள் அனைத்தும் இயக்கம் கொண்டன,‘‘ஆயினும் இந்த பாவம் உன்னைச் சேரும். ஆகையால் நீ பூலோகம் சென்று, தக்கன் மகளாய் அவதரித்து தவம் செய்துவா! நான் அங்கு வந்து உன்னை மணம் செய்வேன்’’ என்று பார்வதி தேவிக்கு அருளினார் சிவபெருமான். அந்த நேரத்தில் தக்கனும் உமையை மகளாகப் பெறவேண்டி தவம் செய்து வரம் பெற்றிருந்தான்.  எனவே அம்பிகை காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிசங்கு வடிவாய் இருந்தார். தக்கன், வேதவல்லியோடு அங்குநீராட வந்த போது அந்த வலம்புரி சங்கை எடுத்துப்பார்த்தான். அது அழகிய பெண் குழந்தையாக மாறிற்று. இறைவியே குழந்தையாக தவிழ்ந்த அந்ததினம் மாசிமகம் ஆகும். சங்கில் தோன்றியதால் சங்கரி எனப் பெயர் பெற்றாள் அன்னை.
 
இலக்குமணப் பெருமாள்

Tags : Maschi Maha Sanghari ,Sangam ,
× RELATED தினம் தினம் திரிவேணி சங்கமம்