அகஸ்தியர் வழிபட்ட திருக்குற்றாலநாதர் கோயில்

தென்பொதிகை மலையில் அகஸ்தியர் வழிபட்ட குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பிருகு மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப்போது பிரகஸ்பதி வம்சத்தில் வந்த சுருசி என்பவன் நாடு முழுவதும் சிவநிந்தனை செய்து வந்தான். பிருகு மன்னன் மனம் வருந்தி சிவபெருமானிடம் நாட்டில் சிவபக்தியை நிலைநாட்ட அருள் புரிய வேண்டினான். அப்போது சிவபெருமானும் தென்நாட்டிற்கு அகஸ்தியர் வந்துள்ளார். அவர் மூலம் சிவபக்தியை நிலைபெறச் செய்வோம் என அருளினார். கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணத்தின் போது மூவுலகமும் அங்கே கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. புவியை சமன் செய்ய அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்பினார் இறைவன். தென்திசைக்கு அகஸ்தியர் வந்ததும் பூமி சமநிலையடைந்தது.

பொதிகை மலையில் உள்ள குற்றாலநாதர் கோயில் வைணவ கோயிலாக இருந்தது. திருநீறும், உத்திராட்சமும் அணிந்திருந்த அகஸ்தியரை துவார பாலகர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அகஸ்தியர் இலஞ்சி குமரனை வழிபட்டு தனக்கு குற்றாலத்தில் நேர்ந்ததைக் கூறினார். அப்போது குமரன், அகஸ்திரை வைணவர் வடிவம் கொண்டு கோயிலுக்குள் சென்று திருமாலை சிவனாக்கி மகுடாகமப்படி வழிபடுவீர் என அருளினார். அகஸ்தியரும் அருவியில் நீராடி வைணவர் வேடத்தில் திருமாலை வணங்க கோயிலுக்குள் சென்றார். அகஸ்தியரை கண்ட வைணவர்கள் குரு என கருதி வணங்கினர். அப்போது பூஜைக்கு தேவையான திரவியம் கொண்டு வருக எனக்கூறி வேதியரை அங்கிருந்து அகலச் செய்து திருமாலை வணங்கி விஸ்வரூபம் எடுத்து ‘குறுகுக குறுகுக குற்றாலநாதரே’ என திருமாலின் தலையில் தன் கையை வைத்து குற்றாலநாதராக ஆக்கினார் என தலபுராணம் கூறுகிறது.

இதனால் குற்றால நாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், அதை போக்க தினமும் காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதித் தைலம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அர்த்தசாம பூஜையின்போது மூலிகைகள் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதியில் இக்கோயில் வைணவ தலமாக இருந்ததை உணர்த்தும் வகையில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி திருக்குற்றாலநாதராகவும், குழல்வாய்மொழி அம்மையாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

சிவமதுகங்கை தீர்த்தமும், குறும்பலா மரம் தல விருட்சமாகவும், மகுட ஆகமம் படி பூஜைகளும் நடக்கிறது. பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ளது. சித்திரை விசு, ஐப்பசி விசு, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, ஆவணி மூல திருநாள், ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. தினமும் காலை 6 மணி திருவனந்தல், 7 மணி உதய மார்த்தாண்டம், 8 மணி விளாபூஜை, 9 மணி சிறுகால சாந்தி, நண்பகல் 12 மணி உச்சிகாலம், மாலை 6 மணி சாயரட்சை, இரவு 8 மணி அர்த்தசாமம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில் தென்காசி  செங்கோட்டை சாலையில் உள்ளது. நெல்லை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி வரை ரயில் வசதி உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு பஸ் வசதியும் உள்ளது.

Related Stories: