×

திருச்செந்தூர் மாசித்திருவிழா : சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 5ம் நாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நாளை சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன. இதில் தனித்துவமிக்க மாசித் திருவிழா கடந்த 12ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.

ஐந்தாம் திருநாளான நேற்று சுவாமி,  அம்பாளுக்கு பலவகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 7.30 மணிக்கு  குடவருவாயில் தீபாராதனை கோலாகலமாக நடந்தது. இதேபோல் பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி ஜெயந்திநாதருக்கு மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து  சுவாமி  குமரவிடங்கபெருமானும், தெய்வானையும்  தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை அடைந்தனர். இதை திரளானோர் தரிசித்தனர்.

7ம் திருவிழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் உருகு சட்டசேவை நடைபெறும். காலை 8.45 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படியை வந்தடைகிறார். அங்கு அபிஷேக அலங்கார தீபாராதனையானதும் மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்கள்  செய்து வருகின்றனர்.

Tags : Swami ,Amba ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்