×

அம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்

புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதுபற்றிய கர்ண பரம்பரை கதை முன்னொரு காலத்தில் வேட்டையாடவந்த சோழமன்னர் தனது பைரவர் என்றழைக்கப்படும் நாயுடன் ஊத்துக்காடு பகுதிக்கு வந்துள்ளார். வேட்டையாடி களைத்துப் போனதால் அவருக்கு தாகம் எடுத்தது. உடனே அவருடன் வந்த பைரவர் உதவியுடன் அங்குள்ள ஊற்றுநீரை அருந்தி தனது தாகத்தை தணித்துக் கொண்டார். அப்போது அக்குளத்தில் அம்மன்சிலை இருப்பதைக்கண்டு அதனை வெளியே கொண்டுவந்தார். இதற்கிடையே நாகல் நாயுடு என்பவரது கனவில் தோன்றிய மாரியம்மன் தான் காட்டின் மையத்தில் உள்ள ஊற்றின் அடியில் இருப்பதாகவும், தன்னை ஆலயம் கட்டி வழிபடுமாறும் கூறியதாம்.

இதன்பேரில் நாகல் என்பவரால் இந்த ஆலயம் தோன்றியதாக வரலாறு உள்ளது. இந்த கதை நடந்த ஊத்துக்காடு செங்கல்பட்டு அருகில் உள்ளது. அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் தற்போதுள்ள செல்லப்பெருமாள் பேட்டைக்கு குடியேறியதால் அவர்கள் ஊத்துக்காடு மாரியம்மன் என்ற பெயரில் கோயில் அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இந்த ஆலயத்தில் அமர்ந்த நிலையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் ஐம்பொன் சிலையாகவும், நின்ற நிலையில் உள்ள கற்பக விநாயகர் ஐம்பொன் சிலையாகவும், தண்டு கொண்டு நிற்கும் பழனியாண்டவர் சிலை, ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத செல்வமுருகன் சிலை இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்திகளாகும். அம்மனும், கற்பக விநாயகரும் 100 ஆண்டு பழமை வாய்ந்தவையாக கருதப்படுகிறது.   

முக்கிய விழாக்கள்:  


வள்ளி தேவசேனா சமேதராக காட்சியளிக்கும் மூன்று உற்சவமூர்த்திகள் 1991ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் உருவாக்கப்பட்டதாகும். 2011ம் ஆண்டு கும்பாபிஷேகத் தின் போது திருவாட்சியுடன் ஐயப்பசுவாமிகள் மூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆடிமாத விழா, கார்த்திகை தீபவிழா, மார்கழிமாதம் திருவாதிரை விழா, தை மாதத்தில் பொங்கல்விழா நடைபெறுவதோடு வருடந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நவராத்திரி நாட்களில் அம்புபோடுதல், சிவராத்திரி விழா, தைப்பூச விழா ஆகியவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வள்ளலாருக்கு ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானமும் நடக்கிறது. மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தி, சஷ்டிபூஜை, கிருத்திகை, மாதபூஜை, பவுர்ணமி பூஜை நடக்கிறது. ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா, செடல்விழா, திருத்தேரோட்டம் நடக்கிறது. பிரதோஷவிழாவும் சிறப்பாக நடக்கிறது.

கும்பாபிஷேகம்:

இந்நிலையில் துர்க்கை அம்மன், மூன்றுநிலை ராஜகோபுரம், கொடிமரம் புதிதாக நிர்மானம் செய்து, மூலவர் விமானம் பதுமைகளுடன் புதுப்பிக்கப்பட்டு 21011991ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சவுந்தரநாயகி அம்பாள் ஆலயம், நந்தீஸ்வரர் ஆலயம், ஐயப்பன் ஆலயம், ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டு 2412011ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 3112019 அன்று அறுபத்துமூன்று நாயன்மார்கள், 11 தொகையடியார்கள், சூரியன், சந்திரர், பைரவர் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அம்மை நோய் குணமாகும்: ஊத்துக்காட்டு மாரியம்மனை மனமுருக வணங்கி வேண்டினால் திருமணத்தடை நீங்கி சிறப்பான இல்லற வாழ்வு அமையும். அதேபோல் குழந்தையில்லாதவர்கள் இந்தக் கோயிலில் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிடைக்கும். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டினால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

செல்வது எப்படி?

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலும், இசிஆர் சாலை கருவடிக்குப்பத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

Tags : Mariamman ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...