மலைமேல் அமர்ந்து அருள்பாலிக்கும் வெள்ளிமலை பாலமுருகன்

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோயிலில் ஒன்று வெள்ளிமலை பாலமுருகன் கோயில். நாகர்கோவிலில் இருந்து பேயோடு, மணவிளை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலும், திங்கள்நகரில் இருந்து தலக்குளம் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மலைமேல் இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் சிலை மலையோடு சேர்ந்து வந்ததாக முன்னோர்கள் கூறி வருகின்றனர்.  இந்த சிலை பிரதிஷ்டை செய்யாமல் தன்னால் உருவானது எனவும் கூறுகின்றனர். இதன் காரணமாக கோயில் கும்பாபிஷேகத்திற்கு புனரமைப்பு செய்யும்போது சிலையுடன் கூடிய மலைக்கும் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடக்கின்றன.

அதே வேளையில் கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த கோயிலில் இடது புறத்தில் விநாயகருக்கு என்று தனி சன்னிதானமும், தர்மசாஸ்தாவிற்கு தனி சன்னிதானமும் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல் கோயிலின் வலது புறத்தில் சிவன் சன்னிதானமும், நவகிரகங்களும் அமைந்துள்ளன. இந்த கோயிலின் முக்கிய திருவிழாவாக கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா தீபாவளி முடிந்து 3வது நாளில் தொடங்குகிறது. விழாவில் சூரசம்காரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தமிழக அரசின் அன்னதானம் திட்டமும் இந்த கோயிலில் உள்ளது.

தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர முருகனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் நடக்கிறது. இந்த கோயிலின் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம் 10ம் தேதி சூரியனின் ஒளி முருகன் காலில் விழும். இது ஆண்டுதோறும் நடக்கும் அற்புத நிகழ்வாக உள்ளது. மேலும் பவுர்ணமி கிரிவலம் மாதம்தோறும் சிறப்பாக நடக்கிறது. இதேபோல் சிவன் சன்னிதானத்தில் பிரதோஷ வழிபாடும், திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

கோயிலுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக மலைமேல் ஏறி செல்லும் வகையில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. படிமூலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோயிலின் முன்பும் வாகனங்கள் நிறுத்த இடவசதியுள்ளது. குமரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வந்து செல்வதை காண முடிகிறது. வெள்ளிமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு மலைமேல் நின்று இயற்கை எழிலை கண்டு களிக்கலாம். மேலும் சூரியன் மறையும் நிகழ்வையும் பார்க்கலாம். இயற்கை எழில் நிறைந்த வகையில் மலை மேல் இந்த வெள்ளிமலை பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

× RELATED வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்...