சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் நோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆஞ்சநேயர்

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் படை வீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சு போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டுக்கு கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் ஆற்காடு நவாப்பான சந்தாசாகிப் அவரது சகோதரர் போடா சாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர்.

Advertising
Advertising

ஆரல்வாய்மொழி கோட்டையை கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும் போது, அவர்கள் அறுவடைக்காக காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடி ஈத்தங்காடு என்னுமிடத்தில் வந்த போது அன்றைய வட்டப்பள்ளி ஸ்தானிகர் தலைமையில் ஊர் மக்கள் ஒன்று கூடி போராடினர். ஊர் மக்கள் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். நவாப் இந்த போரில் வென்றார். பின்னர் பழையாற்றை கடந்து சுசீந்திரம் வந்தனர். அப்போது கோயிலில் இருந்த பொருட்களை அவர்களிடம் இருந்து காப்பாற்ற மக்கள் அவற்றை மண்ணில் புதைத்தனர். அப்போது 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும் புதைக்கப்பட்டது. 2 நூற்றாண்டுகளாக யாருமே புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை எடுத்து நிறுத்தி வைக்க முன் வரவில்லை.

சித்திரை திருநாள் மன்னர் மகாராஜாவாக பொறுப்பேற்றதும், பரமேஸ்வர சர்மா வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகராக இருந்த சமயத்தில் மண்ணில் இருந்து சிலை எடுக்கப்பட்டு வடகிழக்கு மூலையில் ராமபிரானின் எதிரே 1930ல் நிறுவப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படாவிட்டாலும் அகில உலகம் முழுவதும் ஆஞ்சநேயர் புகழ் பரவி உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு  வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும் .அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித துன்பங்களும் விலகும் என்பதால், மும்மூர்த்திகளை வணங்கி விட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.

Related Stories: