உங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா?

ஜாதக கட்டம் என்பது நாம் பிறக்கின்ற நேரத்தில் எந்தெந்த ராசிக் கட்டங்களில் நவகிரகங்கள் அமைந்துள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ளும் கிரக சஞ்சார  சக்கரமாகும். இவையெல்லாம் நம் வினைப் பிறவி என்ற கர்ம கணக்கின்படி முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்படுகின்ற விஷயமாகும். அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதற்கேற்ப இறைவன் அருள்கூர்ந்து, கருணையுடன், நாம் பல்வேறு பிறவிகளில் செய்த பாவ புண்ணியக் கணக்குப்படி  இப்பிறவியை தந்துள்ளான். இந்தப் பிறவி என்பது நமக்கு யோகமா, அவயோகமா என்பது நாம் வாங்கி வந்த வரம். அதன்படி கிரக அமைப்புகள், தசா புக்திகள்  அந்தந்த கால கட்டத்தில் நமக்குரிய போக பாக்கியங்களை அனுபவிக்கக்கூடிய பிராரப்தத்தை நமக்குத் தருகின்றன. இந்த நேரம், காலம், யோகம், அம்சம்,  அதிர்ஷ்டம், பாக்கியம், அமைப்பு, கொடுப்பினை என பல விஷயங்கள் ஒருவரின் உயர்ந்த உச்ச வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடுவதாகும்.

Advertising
Advertising

ஒரு சிலருக்கு வம்சா வழியாக பரம்பரை பரம்பரையாக செல்வச் செழிப்பு ஏற்படுகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையிலே தாத்தா, தகப்பன் படாதபாடு பட்டிருப்பார்கள்.  ஆனால், பிள்ளைகள் கல்வி மூலமோ, தொழில், வியாபாரம் மூலமோ நல்ல நிலையை தொட்டு விடுவார்கள். தற்காலத்தில் கட்சி, அரசியல் மூலம் நிர்வாகப்  பதவிகள், அரசு உயர் பதவி, எம்பி, எம்.எல்.ஏ., மந்திரி என பல வகைகளில் ராஜ யோக பலன்கள் அமைகின்றன. பலரின் வாழ்க்கை பரமபத விளையாட்டுபோல  விறுவிறு என்று ஏணியில் ஏறுவதும், பாம்பில் சறுக்கி இறங்குவதுமாக சகட யோக ஜாதகமாக இருக்கிறது. சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கின்ற தொழில் ஒஹோ  என்று பல லட்சம், கோடிகளைக் தொட்டு கிளைகளைப் பரப்பி வளர்கிறது. பெரிய அளவில் படாடோபமாக ஆரம்பிக்கின்ற தொழில் குறுகிய காலத்திலேயே  நசிந்து, நஷ்டம் அடைந்து தலை தூக்க முடியாத நிலைக்கு வந்து விடுகிறது.

இதைத்தான் கோள்களின் விளையாட்டு என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உழைப்பு உயர்வு தரும். அதற்கேற்ற ஊதியம் தரும். எல்லோருமே உழைக்கத்தான்  செய்கிறார்கள். உழைப்பு ஊதியம் தரும் கூடவே அதிர்ஷ்டம் இருந்தால் உயர் உச்சத்தை அடைய முடியும். அதற்கு நேரம் என்றும், நாளும், கோளும் நமக்கு  துணை நிற்க வேண்டும். ‘‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா’’ என்பது ஔவையார் வாக்கு. அதற்கேற்ப நமக்கு செல்வம்,  செல்வாக்கு, பதவி, புகழ் கிடைக்க எப்படிப்பட்ட கிரக அமைப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை பல ஜோதிடச் சுவடிகள் நுட்பமாக சொல்லி இருக்கின்றன. ஜாதக  அலங்காரம், பல தீபிகை, சந்திர காவியம், பிருகத் ஜாதகம் போன்ற பல வகையான நூல்களில் இதற்கான மகாராஜா யோகம், சக்கரவர்த்தி யோகம், சிங்காதன  யோகம் என பல நூற்றுக்கணக்கான யோக அமைப்புகள் காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் நம் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து  கொள்ளலாம்.

உயர் உச்ச அஷ்டலட்சுமி யோகத்தை தரக்கூடிய கிரக அமைப்புக்கள்.

1. லக்னம், லக்னாதிபதி உச்சம், ஆட்சி, கேந்திரம், திரிகோணம் போன்ற அமைப்பில் இருப்பது ஐஸ்வர்யமாகும்.

2. லக்னத்தில் 4, 5, 9க்கு உடைய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் ராஜமரியாதை சுப கீர்த்தி யோகம் உண்டு.

3. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர் பார்ப்பது சுபமங்கள  யோகமாகும்.

4. பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருப்பது திடீர் தன பிராப்தத்தைத் தரும்.

5. ஆதாயம் லாபம் எனப்படும் 11ம் இடமும், 2ஆம் இடமும் சம்பந்தப்பட்டால் பொன், பொருள், பூஷணங்கள் உண்டு.

6. குரு, சந்திரன் கடக ராசியில் இருந்தால் மந்திரி நாடாளும் யோகம்.

7. சந்திரன், புதன் கன்னி ராசியில் இருந்தால் தனதான்ய சம்பத்து உடையவர்.

8. லக்னத்தில் சூரியன் அல்லது செவ்வாய் உச்சம் பெற்று கடகத்தில் சந்திரன் இருந்தால் பூமி யோகம், அரச யோகம்.

9. ராசியில் நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்து தசா வந்தால் நீச பங்க யோக அம்சமாகும்.

10. ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும்,  த்ரிகோணத்திலும் இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம்.

11. தர்ம கர்மாதிபதிகள் எனப்படும் 9, 10க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம்  சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும் பாக்கியம் உண்டு.

12. நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம், வாகனம், கால்நடைகள், தாயார், வீடு  நிலம், சொத்துக்களை பற்றி பேசும் இடம். இந்த இடத்தில் சந்திரன், சுக்கிரன்  சம்பந்தப்பட்டால் சொத்து சுகம் அதிகம் இருக்கும். தாய் மூலம் சொத்து சேரும். விவசாய விளைநிலங்கள், வீட்டு வாடகை, ஹோட்டல், லாட்ஜ், தங்கும் விடுதி  போன்றவற்றில் அதிக வருமானம் பெறுவார்கள்.

13. வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து பூமி பாக்ய ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்தால்: ரியல் எஸ்டேட், செங்கல், மணல், கட்டிட கட்டுமான  பணிகள், விவசாய வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள்.

14. 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி. 12ல் இருந்தாலும்  விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும்.

15. ஜென்ம லக்னத்தில் உச்சம், ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தாலும், லக்னத்தைப் பார்த்தாலும் புகழ், கீர்த்தி, அதிகார பதவி கிட்டும்.

16. குரு, செவ்வாய், சூரியன் மூவரும் ஜாதகத்தில் மிக பலமாக இருந்தால் அதிகார பதவிகள் கிடைக்கும், அறிவு, ஆற்றலால் புகழ் உண்டாகும்.

17. புதன், சுக்கிரன் பலமாக அமைந்து, இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பலமாக இருந்தால் வித்வான், கலை, இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனத்தில்  பாண்டித்யம் உண்டாகும்.

18. சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது ெஸளந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் தனம் சேரும்.

19. கிரக மாலிகா யோகம் என்பது மிகச் சிறப்பானது. அதாவது லக்னம் முதல் தொடர்ந்து 5 அல்லது 6 வீடுகளில் கிரகங்கள் இடைவிடாமல் இருப்பது யோக  அம்சமாகும். லக்னத்திற்கு 4, 5, 6, 7, 8 என்று இருக்கலாம். லக்னத்திற்கு எந்த இடத்தில் இருந்து கிரகம் ஆரம்பமாகிறதோ அந்த வீட்டிலிருந்து தொடர்ச்சியாக  கிரகங்கள் இருப்பது சிங்காதன யோகமாகும். வாழ்க்கையில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும்.

20. சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் இருப்பது முத்ரிகா யோகம். சந்திரனுக்கு 6, 7, 8ல் கிரகங்கள் தொடர்ச்சியாக அமைவது சந்திராதி யோகம். இதனால்  நற்கீர்த்தி, சக்கரவர்த்தி யோகம்.

21. லக்னத்திற்கு 9, 10க்குரியவர்கள் அல்லது சந்திரனுக்கு 9, 10க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு. கோவில்  திருப்பணிகள், தர்மஸ்தாபனம் அமைத்தல், அரச போக வாழ்க்கை கிடைக்கும்.

22. லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார்.

23. லக்னம், நான்கு, எட்டில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை  படைப்பார்கள்.

24. பொதுவாக 6, 8, 12க்குடையவர்கள், நீச்ச கிரகங்கள், சுப ஸ்தானங்களாகிய 2, 5, 7, 9, 11 போன்ற வீடுகளில் சம்பந்தம் பெறாமல் இருப்பது சிறப்பான  ராஜயோகமாகும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Related Stories: