இளம்பெண்களின் ஆரோக்யமே இந்தியாவின் எதிர்காலம்

ஜோதிடம் என்கிற மருத்துவம்  - 51

   
Advertising
Advertising

மார்கழி மாதத்தில் வருகின்ற கர்ப்போட்ட காலத்தில் அதிகாலை பனிக்காற்றினை சுவாசித்தால் அந்த வருடம் முழுவதும் ஆரோக்யத்துடன் வாழ இயலும் என்றும் அந்த வருடத்தில் புதுப்புது கிருமிகளால் உருவாகின்ற புதிய நோய் எதுவும் நம்மை அண்டாது என்றும் கடந்த இதழில் கண்டோம். நோய் தடுக்கும் வழிமுறைகளை எப்படியெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒருபுறம் முயற்சித்து வந்தாலும் எதிர்பாராத விதமாக பல்வேறு வழிகளில் நோய் நம்மைத் தாக்குவதையும் காண்கிறோம். நடுச்சாலையில் எச்சில் துப்புதல், பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழித்தல், சுகாதாரமற்ற பொதுக் கழிப்பிடங்கள் என்று பல்வேறு அசுத்தமான செயல்களால் நோய்கள் எளிதாகப் பரவுகின்றன. இவை போதாது என்று பொல்யூஷன் என்ற ஒன்றும் தற்போது சேர்ந்துகொண்டிருக்கிறது. மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதாலும் நுரையீரலில் பிரச்னை உருவாகிறது.

தற்காலத்திய இளம்பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் லேசாகக் கொறிப்பது, விரல் நுனியில் கிள்ளிச் சாப்பிடுவது, மேலைநாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதை பெருமையாக எண்ணுவது என நம்நாட்டு பாரம்பரிய உணவு முறைகளை சுத்தமாக மறந்து போய்விட்டனர். குறிப்பாக இளம் பெண்கள் ஆரோக்யம் நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளை  உட்கொள்ள வேண்டும். சிறுவயது முதலே அவர்களின் உணவுப்பழக்கம் சிறப்பாக அமைய  வேண்டும். தற்காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கையிருப்பில்  விலையுயர்ந்த சாக்லேட்டுகளே பெரும்பாலும் நிரந்தர இடத்தினைப் பிடித்திருக்கிறது. இந்த விலையுயர்ந்த சாக்லேட்டுகளை என்றோ ஒரு நாள்  சாப்பிட்டால் பரவாயில்லை, அதுவே தினசரி உணவாக மாறிப்போனதுதான் காலத்தின் கொடுமை.

ஜோதிடவியல் ரீதியாக ஆராய்ந்தால் ஜனன ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய பாவகங்களே சிரமத்தைத் தரக்கூடியவை என்பதைத் தொடர்ந்து நாம் கண்டு வருகிறோம். ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் பாவகமும், ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் பாவகமும், கடுமையான அலைச்சலையும், மன உளைச்சலையும் தரக்கூடிய 12ம் பாவகமும் வலிமை பெறும்போது இது போன்ற சிரமங்கள் உண்டாகிறது. இவற்றில் 12ம் பாவகத்தால் உண்டாகும் சிரமத்தினைக் கூட சமாளித்துவிடலாம். ஆறாம் பாவகமும், எட்டாம் பாவகமும் வலிமை பெறும்போது அதனைச் சமாளிக்கும் திறன் ஜென்ம லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும் மட்டுமே உண்டு. ஜென்ம லக்னத்தில் வலிமையான கிரஹங்கள் அமர்ந்தாலும், லக்னாதிபதி வலிமை பெற்றிருந்தாலும் இதுபோன்ற சிரமங்களை எளிதாக சமாளிக்க இயலும்.

இந்த 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் ஒரு மனிதனின் வாழ்வினில் கடுமையான சிரமத்தினை உண்டாக்கினாலும் ஒரு சில நேரத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் வித்தியாசமான மாற்றுப் பலனையும் உண்டாக்கும். இந்த மூன்று வீடுகளின் அதிபதிகளும் ஆட்சி அல்லது உச்ச பலம் பெற்றிருந்தாலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வீடு மாறி பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருந்தாலும், மூவரில் யாருடைய பலம் அதிகரித்திருக்கிறதோ அவர்களுடைய தசாபுக்தியின் காலத்தில் எதிர்பாராத வகையில் நற்பலனையும் கூட உண்டாக்குவார்கள். இதற்கு “விபரீத ராஜ யோகம்” என்று பெயர். இந்த விபரீத ராஜ யோகத்தினைக் கொண்டவர்கள் கடுமையான பிரச்னைகளை வாழ்வினில் சந்தித்தாலும் அதே பிரச்னைகளை மையமாகக் கொண்டு எதிர்பாராத வகையில் நற்பலன்களும் வந்து சேரக் காண்பார்கள்.

திருமணத்திற்குப் பின் இவர்களால் உடனடியாக தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை. அவ்வாறு உடனடியாக மாற்றிக்கொள்வதாலும் பெரிதாக எந்தப் பயனும் உண்டாகப் போவதுமில்லை. கர்ப்பம் தரிக்கும்போது மிகவும் பலகீனமாக இருப்பதால் வெளியிலிருந்து ரத்தத்தைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது பல  பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்நாட்களில் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் ஒரே பெண்மணி குறைந்தது பத்துப் பிள்ளைகளைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்ந்தார். இக்காலத்திய பெண்கள் ஒன்றிரண்டு பெற்றெடுப்பதற்குள் ஓராயிரம் பிரச்னைகள். சாப்பாட்டு முறையில் நாகரிகம் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அது நம் நாட்டு நாகரிமாக இருக்க வேண்டும்.

தலைவாழை இலை போட்டு கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர் என்று வயிறு நிறைய உண்ண வேண்டும். நம் வயிற்றுக்குச் சாப்பிடுவதில் வெட்கம் எதற்கு? தோழியரின் கேலியும், கிண்டலும் பிரசவ காலத்திற்குத் துணை புரியாது. பேறு காலத்தில் நன்றாக உணவருந்த வேண்டும் என்பதற்காகத்தான் வளைகாப்பு, பூச்சூட்டல் போன்ற விழாக்களை வைத்தார்கள், பலவிதமான உணவு வகைகளையும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரிமாறி சாப்பிட வைத்தார்கள், நம் முன்னோர்கள். இளம்பெண்கள் யாவரும் தங்களுடைய உணவுப் பழக்கத்தினை பாரம்பரிய உணவாக மாற்றிக் கொள்ளுங்கள். இளம்பெண்களின் ஆரோக்யமே இந்தியாவின் எதிர்காலம் என்பது நினைவில் நிற்கட்டும்.

கே.பி. ஹரிபிரசாத் சர்மா

(தொடரும்)

Related Stories: