அன்பில் இறைவனையாம் அறிவோம்!

திருமூலர் மந்திர ரகசியம்

Advertising
Advertising

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிக்கடி சொல்வார். ‘‘சிலர்,மேடையில் இருப்பவர்களைப் பாராட்டும்  முகமாக, ‘இவர் இந்திரன், இவர் சந்திரன், இவர் கடல்’ என்றெல்லாம் பாராட்டுவார்கள். உண்மையில் அது பாராட்டா ? இல்லை.

அவமானம்! எப்படி? இந்திரன் - மாற்றான் மனைவியை விரும்பியவன்; சந்திரன் - குரு துரோகி; கடல் - நிரம்ப நீர் இருக்கிறதே தவிர, நமக்குக் குடிக்க உதவாது. அதுபோல, மாற்றான் மனைவியை விரும்பியவன் என்றும், குருதுரோகி என்றும், உதவாதவன் என்றும், மறைமுகமாக இகழ்ச்சியாகப் பேசுவார்கள். இது புரியாமல், தங்களைப் பாராட்டுவதாகச் சிலர் நினைத்துக் கொள்வார்கள் என்பார், வாரியார் சுவாமிகள். இப்படி இகழ்வதைத் தெரிந்து கொள்ளாமல், இருப்பவர்கள் பலர். ஆனால், இறைவனுக்கு எல்லாம் தெரியும். பழைய திரைப்படப் பாடல் ஒன்றில் கேட்டது நினைவிற்கு வரும்.

 யாரும் அறியாமல் செய்யும் தவறென்று

 ஏமாற்றும் நினைப்பை மாற்றுங்கள்

 எங்கும் எதிலும் ஒன்றாய் நின்றவன்

 ஒருவன் அறிவான் எல்லாம்

 காலம் பார்த்து நேரம் பார்த்து

 அவனே தீர்ப்பும் சொல்வான்

தெய்வத்தின் ஏகத்துவத்தையும், அனைத்தும் அறியும் சர்வக்ஞத்வத்தையும் சொல்லும் திரைப்படப் பாடல் அது.இவ்வாறு இகழ்வதைப் பற்றியும் இறைத் தன்மையைப் பற்றியும், அழகாகச் சொல்கிறார் திருமூலர்.

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

உகந்து அருள் செய்திடும் உத்தம நாதனை

கொழுந்தன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு

மகிழ்ந்தன்பு செய்யும் அருள் அதுவாமே

(திருமந்திரம் - 280)

கருத்து: சிலர், இறைவனிடம் அன்பு கொள்ளாமல் இறைவனை இகழ்ந்ததையும்; சிலர் இறைவனிடம் அன்புகொண்டுஇறையருள் பெற்றதையும்; ஈசன் அறிவார். அதற்கேற்பவே தெய்வம் தன் அருளை விரும்பி வழங்கும். தன்னிடம் தலையாய அன்பு கொண்டவர்க்குத் தெய்வம் மிகுந்த மகிழ்ச்சியோடு அருள் செய்யும். இறையருள் தன்மை அது. இகழ்வது - அன்பு செய்வது எனும் இரண்டையும், மிகவும் அழகாகச் சொல்லும் பாடல் இது. முதலில் இகழ்வதைப் பார்க்கலாம். யாராவது நம்மை இகழ்ந்தால், பொறுக்க மாட்டேன் என்கிறது. பதிலடி கொடுக்கிறோம். அப்படியென்றால், இறைவனும் நம்மைப்போல் தானா? உண்மையான இகழ்ச்சியும் தூய்மையான அன்பும் இறைவனுக்குத் தெரியும்.

சாக்கிய நாயனார் என்பவர், கல்லை எடுத்து சிவபெருமான் மீது வீச, சிவபெருமான் அதை மலர்களாகவே ஏற்றுக் கொண்டார் என்பதைப் பெரிய புராணம் விரிவாகவே சொல்கிறதே. காரணம்? சாக்கிய நாயனார் கல்லைத்தூக்கி வீசினா லும், அதைத் தூய்மையான பக்தியோடு மலராகப் பாவித்து வீசினார். இங்கே செயலைவிட, அன்பே கணக்கிடப்பட்டது.

கண்ணப்ப நாயனார் வரலாறும் இதேதான்; செருப்புக் காலைத் தூக்கி, சிவபெருமான் மீது வைத்தார். அங்கும் செயலைவிட, தூய்மையான அன்பே கணக்கிடப்பட்டது. அவர்கள் எல்லாம் இகழ்ந்ததைப்போலத் தோன்றினாலும், இறைவனுடைய அருளைப் பெற்றார்கள். ‘இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்’ என இப்பாடல் கூறுவதன் விளக்கம் இதுவே.

‘ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப் பாசத்துடன் வைத்துப் பரிவு செய்வார்களை’ என மற்றொரு திருமந்திரப் பாடலும், இந்த உண்மையை விளக்கும். அதேசமயம், வழிபாடு செய்வதைப்போலச் செய்து ஏமாற்றுவதையும் ஈசன் அறிவார். அதற்கேற்றார்போல, ஈசனும் அருள் புரிவார். உதாரணமாக, ராவணன் சூரபத்மன் முதலானோர் இந்த வகைதான்.

கடுந்தவம் செய்து கயிலாயநாதரான சிவபெருமானை, நேருக்குநேராகத் தரிசித்து வரம் பெற்றும் , அதன் பிறகு ராவணனின் செயல்பாடுகள், தெரிந்ததுதானே! “சுவாமியிடம் இருந்து வரம்பெற்று விட்டோம். இனிமேல் நம்மைக் கேட்க யார் இருக்கிறார்கள்?” என்ற எண்ணத்தில் ராவணன் ஆடிய ஆட்டங்களும், அதன் விளைவுகளும் தெரிந்தவை தானே?

சூரபத்மன் வரலாறும் இதேதான்; கடுந்தவம் செய்து ஏராளமான வரங்களைப் பெற்றான். விளைவு? நல்லவர்களையெல்லாம் ஆட்டிப் படைத்து, ஆறுமுகனால் சம்ஹாரம் செய்யப்பட்டான். இதே கதைதான் நம்முடையதும். பெற்றோர்களுடன் திருவிழாவிற்குப் போகிறோம். எதையாவது பார்த்து ஆசைப்படுகிறோம். பெற்றோர்கள் என்னதான் சொன்னாலும், நாம் கேட்பதாக இல்லை. நம் முனைப்பே முன்னால் நிற்கிறது. பெற்றோர்களும் நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். அதைத் தின்றதும் நோய் வருகிறது.

நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்த அதே பெற்றோரே, மருத்துவரிடம் சொல்லி ஊசிபோட்டுக் கசப்பு மருந்து தரச் சொல்கிறார்களல்லவா? அதுபோல, நாம் பலவற்றை விரும்புகிறோம். நாம் கேட்பதைப் பரம்பொருள் கொடுத்து விடுகிறது. அதனால் பிரச்னை என்று வரும்போது, கசப்பு மருந்தைப்போலத் தண்டனை தருகிறது. விவரம் புரியாத குழந்தை, ‘‘எங்க அம்மா எனக்குக் கசப்புமருந்து தராங்க’’ என்று புலம்புவதைப்போல, ‘‘தெய்வம் ஏதோ, எனக்குத்தான் கஷ்டத்தைக் கொடுக்கிறது’’ என்று புலம்புகிறோம்.

இவ்வாறு செய்யும் அதே ஈசன் தூய்மையான அன்பு கொண்ட அடியார்களுக்கு, மகிழ்வோடு அருள்செய்கிறாராம். மாணிக்கவாசகருக்காக மண்சுமந்து மன்னவன் கைப்பிரம்பால் அடி பட்டதும்; சுந்தரருக்காகத் தூது போனதும்; ஞானசம்பந்தருக்காகப் பாண்டிய மன்னரின் கூனைநீக்கி அவருக்கு அருள் புரிந்ததும்; திருவுக்கரசருக்காகத் தண்ணீருடன் பொதிசோறு அளித்ததும் - இறைவன் மகிழ்வோடு அருள் செய்த வரலாறுகளே! ஆம்! தண்டனை கொடுத்த இறைவனே, தூய அன்பு கொண்டவர்களுக்காகத்தானே தேடிவந்து அருள் செய்த வரலாறுகளும் உண்டு. ஆகையால், ‘‘இறைவனிடம் தூய்மையான- பேரம் பேசாத அன்பு வைத்தால், பக்தி செலுத்தினால், மகிழ்ந்து அருள்புரிவார் இறைவன்’’ எனக்கூறி பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர்.

இது நடக்குமா? என எண்ண வேண்டாம். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பதைப்போல, பழகப்பழகத் தூய்மையான அன்பும் பக்தியும், தாமாகவே நம்மிடம் வந்து சேரும். அன்பு மயமான வழிபாடு என்றாலே, பளிச்சென்று நினைவுக்கு வருபவர் கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனாரை மனதில் வைத்துக்கொண்டு, அடுத்த பாடலைப் பார்க்உகலாம்.

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்

அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்

இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி

அன்பில் அவனை அறியகிலாரே

(திருமந்திரம் - 286)

கருத்து: இனிமேல் பிறப்பும் இறப்பும் இல்லாதவரே, “ சிவபெருமானிடம் அன்பு செய்து அவரை அடைவோம் ’’ என்று துணிவார்கள். அவர்கள் இப்போது எடுத்திருக்கும் பிறப்பும், அது நீங்குவதான இறப்பும், அவர்களுக்கு இன்பத்தைத் தருவதற்காக காரணங்களாகும். இதை உணராதவர்கள், பிறவாத் தன்மையரான சிவபெருமானை, அன்பு செலுத்தி அடையும் வழியை அறியாமல்,பிறப்பு- இறப்பில் கிடந்து உழல்கிறார்களே! திருமூலருக்குத்தான், நம் மீது எவ்வளவு இரக்கம் குழந்தைகளின் துயரநிலை கண்டு, தாயார் வருந்துவதைப்போல, நம் நிலையை எண்ணி, அவர் இரக்கப் படுகிறார்.

அன்பு மயமான வழிபாடு என்றாலே, பளிச்’சென்று நினைவுக்கு வருபவர் - கண்ணப்பநாயனார். அன்பின் பிழம்பாய்த் திரிவார்’ என்று

சேக்கிழார்சுவாமிகளும்;’அவனுடைய வடிவெலாம் நம் பக்கல் அன்பு என்றும்’ என, சிவபெருமானாலும் பாராட்டப்பட்டவர் - கண்ணப்ப நாயனார். அன்பு மயமான வழிபாட்டின் உச்சநிலை, கண்ணப்ப நாயனாருடையது.

இன்று நம்மில் பலர், “சார்! கோயிலுக்குப் போறது; தோத்திரப்பாடல் ஏதாவது சொல்றது; இதெல்லாம் என்னால முடியாது. நான் எல்லாம், கண்ணப்ப நாயனார் மாதிரி பக்தி செய்யறவன்” என்று பேசுவதைக் கேட்டிருப்போம். கேட்டால், “கண்ணப்பநாயனார் செருப்புக்காலத் தூக்கி சாமி மேல வெக்கிலியா?” என்ற கேள்வியும் வரும்.

கண்ணப்பநாயனார் ஊண் உறக்கம் இன்றி, ஆறே நாட்களில் இறைவனை அடைந்தவர்; தன் ஒரு கண்ணை அகழ்ந்து எடுத்து இறைவனுக்கே கண்தானம் செய்தவர்; மற்றொரு கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயன்றவர். சொல்லப்போனால், அன்பு-அன்பு-அன்பு மட்டுமே. ஆகையால் ‘கண்ணப்பநாயனாரைப்போல’ என்று சொல்லி, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அப்படிப்பட்ட தூய்மையான அன்பின் வெளிப்பாட்டை விளக்குவதே இப்பாடல்.

அன்பு மயமான அந்த முறையில் ஈடுபட்டவர்களுக்கு, இனிமேல் பிறப்பு - இறப்பு என்பது இல்லை. முக்திதான். அதை முழுமையாய் உணர்ந்ததால், ‘‘சிவபெருமானை அன்பினால் அடைவோம்’’ என அவர்கள் அழுத்தமாகக் கூறி, அதன்படியே செயல்படுவார்கள். மேலும், இப்பாடலில் ‘இன்பப் பிறப்பும் இறப்பும்’ என்றுள்ள வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை. ஆம்! உலகில் எத்தனையோ ஜீவராசிகள் இருக்க, நமக்கு மனிதப்பிறவி கிடைத்ததே! அது இன்பம் தானே! அதிலும் உலகமே புகழும் ஞானபூமியான நம் நாட்டில் பிறவி கிடைத்ததே! ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என அருந்தமிழ் மூதாட்டி அவதரித்து, மனிதப் பிறவியின் மேன்மையைப் பேசிய பூமியிது.

அதுசரி! இன்பப் பிறப்பு என்று சொல்லி, இறப்பையும் சொல்லி இருக்கிறாரே திருமூலர்? தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா? உதாரணமாக, வண்டியில் ஏறிவிட்டோம்.வழியில் அற்புதமான காட்சிகள், உணவுகள் என எல்லாம் கிடைத்தாலும், குறிப்பிட்ட இடம் வந்ததும், இறங்கித்தானே ஆக வேண்டும்? அதுபோல, இறைவனை அறிந்து உணர்ந்து வழிபடும் இன்பமான பிறப்பு, முக்தியை அடையும்போது, இறப்பும் இன்பமே என்பது ஞானிகளின் எண்ணம்.

பாடலின் முடிவில், இறைவனிடம் அன்பு செலுத்தத் தெரியாமல் இருக்கிறார்களே எனும் திருமூலரின் ஏக்கம் புலப்படும் .இறைவனிடம் அன்பு செலுத்துவது என்பது, மிகவும் சுலபமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால், அதுசுலபமல்ல! உதாரணமாக, ஏதோ ஓரிரு அறைகள் கொண்ட வீட்டில் நாம் இருக்கிறோம். பெரும்பெரும் மாளிகைகளைப் பார்க்கும்போது, ‘‘வாழ்ந்தா இந்த மாதிரியான வீட்டுல வாழணும்’’ என்று எண்ணவும் செய்வோம். சற்று யோசிக்கலாம் வாருங்கள்! ஓரிரு அறைகள் உள்ள சின்னஞ்சிறிய வீட்டையே நம்மால், தூய்மையாக வைத்திருக்க முடிய வில்லையே; நிர்வாகம் செய்ய இயலவில்லை. அப்படியிருக்க, பெரும்பெரும் மாளிகைகளில் நாம் இருக்கமுடியுமா? நிர்வாகம் செய்யத்தான் இயலுமா?

அதுபோல, நம்மைச்சுற்றி இருக்கும் சிலரிடம் அன்பு செலுத்தத் தெரியாத அல்லது அன்பு செலுத்த விரும்பாத நாம் , அனைத்து இடங்களிலும் பரவிக்கிடக்கும் ஆண்டவனிடம் அன்பு செலுத்துகிறேன் என்பது இயலுமா?

வீட்டைப் பகுதிபகுதியாகத் தூய்மை செய்தால், வீடு முழுமையாகத் தூய்மை அடைந்து விடுமே! அதுபோல நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு செலுத்தத் தொடங்கினால், இறையருள் எனும் பெரும்மாளிகை தானாகவே நம் வசப்படுமே! அன்பு செலுத்த அறியாமல் இருக்கிறார்களே எனத் திரு மூலர் ஏங்குவது, ‘அன்பை அகத்தில் இருந்து தொடங்கத் தெரியாமல் இருக்கிறார்களே’ என நமக்கு அறிவுறுத்தி, வழிகாட்டுவதே ஆகும்.

வேறு வழியே இல்லை! அருகில் இருப்பவர்களிடம் இருந்து அன்பை செலுத்தத் தொடங்குவோம்! ஆண்டவன் அருள் தானாகவே நம்மிடம் வந்து சேரும்!

                                                                            

பிஎன் பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

Related Stories: