மாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : திருமங்கலக்குடி

Advertising
Advertising

பொன்னி எனும் காவிரியின் வடகரையில் அமைந்த தேவாரத் தலங்கள் வரிசையில் வட திருமங்கலக்குடி எனும் திருவூர் ஒரு தனிச்சிறப்புடையதாகும். தமிழ் முனி, குறுமுனி என்றெல்லாம் போற்றப்பெறும் அகத்தியர் தன் திருக்கரங்களால் காவிரி நீரை எடுத்து வந்து மங்கலக்குடி ஈசனை நீராட்டி அர்ச்சித்து வழிபட்ட திருத்தலம்தான் திருமங்கலக்குடி சிவாலயமாகும்.

இதனை,சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறிவரை

வாரி நீர்வரு பொன்னி வடமங்கலக்குடி

நீரின் மாமுனிவன் நெடுங்கையொடு நீர்தனைப்

பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே

- என்பார் திருஞானசம்பந்தப்பெருமானார்.

இப்பாடலடிகளை கூர்ந்து நோக்குவோமாயின் நவமணிகளையும், அகிலையும் சந்தன மரங்களையும் மலைப் பகுதிகளிலிருந்து வாரி பெருவள்ளமாக எடுத்து வரும் காவிரியின் வடகரையில் நின்ற அகத்திய முனி தன் கமண்டலத்தால் நீரை முகராமல் தன் கைகளிலேயே குவித்து எடுத்து வந்து மங்கலக்குடி ஈசனை நீராட்டி அவரே அர்ச்சித்த புராணப் பெருமையுடையவன் அப்பெருமான் என்பதே ஞானக் குழந்தையின் கூற்றாகும்.

காகமாகச் சென்ற கணபதிப் பெருமான் அகத்தியனின் கமண்டலத்தைக் கவிழ்த்துவிடவே சய்ய மலையிலிருந்து சோழ நாட்டிற்கு பெருகி வந்தவளே காவிரிப்பெண். எங்கே அவர் கமண்டலம் கொண்டு அக்காவிரி நீரை மங்கலக்குடியில் முகர்ந்திருப்பாராயின் அவள் மீண்டும் அவர்தம் கமண்டலத்திற்குள்ளேயே தங்கி விடுவாள் என அம்முனி கருதினார்போலும். அதனால்தான் நீரின் மாமுனிவன் நெடுங்கையொடு நீர்தனைப் பூரித்து ஆட்டினான்போலும்.

திருநாவுக்கரசு பெருமானாரோ அகத்தியன் அவ்வாறு அர்ச்சித்ததைக் கூற விழைந்தவர் மாகாளி, வெங்கதிர்ச் செல்வனாகிய சூரியன், விண்ணோடு மண்ணும் நேர்கொண்ட சங்கு சக்கரதாரியான திரிவிக்கிரம பெருமானும் அவன் திருப்பாதங்களை விண்ணக கங்கை நீரால் ஆட்டியவனான பிரமனும் அர்ச்சித்த பெருமையுடையவர் மங்கலக்குடிநாதர் என்பதை,

 மங்கலக்குடி ஈசனை மாகாளி

வெங்கதிர்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்

சங்கு சக்கர தாரி சதுர்முகன்

அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே

என்று போற்றிப் பரவியுள்ளார். அத்தகு பெருமையுடையது திருமங்கலக்குடி எனும் இத்தலம்.

கும்பகோணத்திலிருந்து காவிரியின் வடகரை வழியே செல்லும் மயிலாடுதுறை சாலையிலுள்ள வேப்பத்தூருக்கும், சூரியனார் கோயிலுக்கும் இடையே இத்தலம் உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையும் மங்கலக்குடி வழியேதான் செல்கின்றது. சோழர்கால கல்வெட்டுக்களில் இவ்வூர் விருதராஜ பயங்கர வளநாட்டு வேம்பற்றூரான எதிரிலி சோழ சதுர்வேதி மங்கலத்து பிடாகை (சிற்றூர்) மங்கலக்குடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டிலோ விருதராஜ பயங்கர வளநாட்டு, மண்ணி நாட்டு திருமங்கலக்குடி என்ற குறிப்பு காணப்பெறுகின்றது.

இத்தலத்துப் பெருமானை தற்காலத்தில் பிராணவரதேஸ்வரர் என்றும், அம்பிகையை மங்களநாயகி என்றும் அழைக்கின்றனர். தலமரமாக வெள்ளை எருக்கும், தல தீர்த்தமாக காவிரி நதியும் திகழ்கின்றன. கோப்பெருஞ்சிங்கனின் இருபத்தைந்தாம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற இத்தலத்துக் கல்வெட்டு ஈசனை, “மங்கலக்குடி உடையார்” என்றும், “புராண நாயனார்” என்றும் குறிக்கின்றது. குலோத்துங்க சோழனின் கல்வெட்டோ மூலவர் பெயரினை “மங்கலக்குடி புராண விடங்கர்” என்று கூறுகின்றது.

கிழக்கு நோக்கிய வண்ணம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு திருச்சுற்றுகளுடனும் திகழும் இவ்வாலயத்துள் மூலவர் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ விமானமும், தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் ஆலயமும் அமைந்துள்ளன. மூலவர் கோயில் அமைந்த திருச்சுற்றில் முன் மண்டபமும், திருச்சுற்று மாளிகையும்  காணப்பெறுகின்றன. ஸ்ரீ விமானத்தைச் சுற்றிலும் அதனுடன் இணைந்த சுற்று நடை மாளிகை எனப்பெறும் மண்டபம் அமைந்துள்ளது. விமானத்து கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, உமையுடன் ரிஷபாந்திதகர், பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன.

தட்சிணாமூர்த்தியின் கோஷ்டம் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் பெருமானை வணங்கும் அடியார் ஒருவர் சிற்பம் உள்ளது. அதன் அருகே, “முல்லைக்குடையான் தியாகப்பெருமாள் எனும் வானவன் பல்லவராயன்” என்ற கல்வெட்டு எழுத்துப் பொறிப்பு உள்ளது. இவர் தட்சிணாமூர்த்தி சிற்பத்தினையோ அல்லது சோழ அரசனின் பிரதிநிதியாக இருந்து திருக்கோயிலை கற்றளியாகப் புதுப்பித்தவராகவோ இருத்தல் கூடும்.

இரண்டாம் கோபுர வாயிலிலுள்ள ஒரு உருவச்சிலைக்கு அருகாக அவர் பெயரினை “வரகுணப்பெருமாள்” எனக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்றுள்ளது. துர்க்கையின் கோஷ்டத்திற்கு அருகே தனியாக அமர்ந்த கோலத்திலுள்ள காவிரித் தாயின் சிற்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூலவர் கோயிலுக்கு முன்பாக அமைந்த கிழக்கு திருச்சுற்று மண்டபத்தின் விதானத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பெற்ற ஓவியங்கள் காணப்பெறுகின்றன. அவற்றில் பல காட்சிகளுக்கு மேலாக காட்சி விளக்கங்கள் தமிழில் எழுதப் பெற்றுள்ளன.

பெரும்பாலும் நாயன்மார் சிலரின் வரலாற்றினைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மண்டபக் கூரையிலிருந்து மழைநீர் கசிவு ஏற்பட்டமையாலும், திருப்பணிகளாலும் பல ஓவியக் காட்சிகள் அழிந்துள்ளன. சிவலிங்கத் திருமேனியின்மீது ஒரு காலை வைத்தவாறு அம்பால் தன் கண்ணை அகழ்ந்தெடுக்கும் கண்ணப்பர், கானகத்தில் பசுக்களை மேய்த்தவாறு குழலூதும் ஆனாய நாயனார், அவருக்கு இடபாரூடர் காட்சி கொடுத்தல், அப்பூதியடிகள் வீட்டில் அமுது உண்ண அமர்ந்திருக்கும் திருநாவுக்கரசர் போன்ற ஓவியக் காட்சிகள் குறிப்பிடத்தக்க சிறப்புடையவையாகும்.

திருச்சுற்று மாளிகையில் பதினொரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன. கணபதி, ஆறுமுகன், கஜலட்சுமி, பைரவரீன் போன்ற பரிவார மூர்த்திகளும் திருச்சுற்றில் இடம் பெற்றுள்ளனர். மூலவர் லிங்கத் திருமேனி பேரழகு வாய்ந்ததாகும். லிங்க பாணம் உயர்ந்து காணப்பெறுகின்றது. உடற்பிணியுடையோர் பதினொரு ஞாயிற்றுக் கிழமைகளில் அதுவும் கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி இக்கோயிலுக்கு வந்து வௌ்ளை எருக்கு இலையில் தயிர் அன்னத்தை ஈசனுக்கு நிவேதனம் செய்து உண்டால் அவர்தம் நோய் முற்றிலுமாக நீங்கும் என அன்பர்கள் விரதம் கொண்டு இங்கு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு மாங்கல்யக் காப்பு அருள்பவளாக இங்கு காம கோட்டத்தில் திகழும் மங்களாம்பிகையை பெண்கள் போற்றி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் மணம் வேண்டியும், மங்கலப் பெண்டிர் மாங்கல்ய பலம் பெறவும் இந்த அம்பிகைக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கு மங்கலநாதன் அருளோடு மங்கலநாயகி அருள்பாலிக்கின்றாள் என்பது கண்கூடு.

சுங்கம் தவிர்த்த முதலாம் குலோத்துங்க சோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1086) வில்லவராயன் என்ற அலுவலன் செய்த அரசு நடவடிக்கைகளைப்பற்றி மகாமண்டபத்து தென்புறச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டு விளக்குகின்றது. மூன்றாம் இராஜராஜ சோழனின் இருபத்து நான்காம் ஆண்டு கல்வெட்டுச் சாசனமொன்று அதே மண்டபத்தின் தென்புறச் சுவரில் காணப்பெறுகின்றது.

அதில் அம்மன்னவனின் இருபத்து மூன்றாம் ஆண்டில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாகவும், ஆண்டராண்டான் என்பானும் மற்றும் சிலரும் சேர்ந்து அவ்வூர் கோயிலின் சொத்துக்கள் சிலவற்றை கையாடல் செய்ததையும், அதை பின்பு கண்டறிந்து நியாயஸ்தர்களும் மற்ற அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதை விவரிக்கின்றது.

கோப்பெருஞ்சிங்கன் என்ற பிற்கால பல்லவ மன்னனின் இருபத்தைந்தாம் ஆண்டு (கி.பி. 1268) சாசனமொன்று இவ்வாலயத்து வடபுறச் சுவரில் இடம்பெற்றுள்ளது. அச்சாசனத்தில் விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருமங்கலக்குடி உடையாரான ஈசனார் புராண நாயனார் கோயில் முதல் பிராகாரத்தின் மேலைத் திருநடை மாளிகையின் வடபக்கத்தில் உள்ள நாயகர் திருமண்டபத்துத் தெற்கில் பத்தியில் அரையன் உதையஞ் சேந்தானான தொண்டைமான் என்பவர் ஆளப் பிறந்தீஸ்வரமுடையார் என்ற சிறிய சிவாலயம் ஒன்றினை எடுப்பித்தார் என்று கூறுகின்றது.

அத்தொண்டைமானாரின் சொந்த ஊர் பாண்டி குலாசனிவளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்துப் பெருமங்கலம் என்ற குறிப்பும் அங்கு கூறப்பெற்றுள்ளது. இவ்வூர் தற்போது தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் அம்மன்பேட்டை என்ற பெயரில் திகழ்கின்றது. பெருமங்கலம் எனும்

அவ்வூரின் பழம் பெயரினை மக்கள் அறிந்திராவிட்டாலும் அவ்வூர் சிவாலயத்திலுள்ள ஒரு கல்வெட்டு அதனை அழியவிடாமல் காத்து நிற்கின்றது. சோழநாட்டில் பெருமங்கலம் என்ற பெயரில் மூன்று திருவூர்கள் உண்டு.

புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு அருகே திகழும் பெருமங்கலம் எனும் ஊர் ஏயர்கோன் கலிக்காமர் பிறந்த ஊராகும். குடவாயிலுக்கு அருகே சேங்காலிபுரம் சாலையில் உள்ள பெருமங்கலம் எனும் ஊரும் சோழர் கால திருவூர் என்பதை சேங்காலிபுரத்து குலோத்துங்க சோழீச்சரத்து கல்வெட்டு உறுதி செய்கின்றது. திருமங்கலக்குடி கல்வெட்டு கூறும் ஆர்காட்டு கூற்றத்து பெருமங்கலத்தினனாகிய தொண்டைமான் என்பான் திருமங்கலக்குடி திருக்கோயிலுக்குள்ளேயே ஆளப்பிறந்தீஸ்வரமுடையார் என்ற சிற்றாலயத்தை எடுப்பித்ததோடு அக்கோயிலுக்காக நிலக்கொடையையும் அளித்துள்ளான்.

திருமங்கலக்குடி சிவாலயத்தில் இரண்டு ஆடவல்லான் செப்புத் திருமேனிகள் உள்ளன. ஆனித் திருமஞ்சனத்தின்போது ஒரு நடராஜருக்கும், மார்கழி ஆதிரையில் மற்றொரு நடராஜருக்கும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி திருவீதி உலா எடுப்பது இத்திருக்கோயிலின் நடைமுறையாகும். அகத்திய மாமுனி காவிரி நீரால் திருமஞ்சனம் செய்து அர்ச்சித்து வழிபட்ட திருமங்கலக்குடிக்குச் சென்று அந்த பொன்னி நதியில் நீராடி மங்கலக்குடி ஈசனையும் மங்களாம்பிகையயும் வழிபட்டு நாமும் பேறுபெற்று உய்வோம்.

முதுமுனைவர் குடவாயில்

பாலசுப்ரமணியன்

Related Stories: