×

பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இன்று மாலை தைப்பூச தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். காவடி எடுத்து ஆடியும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடு பழநி. இங்குள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு பழநி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 15ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.திருக்கல்யாணம் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. சிம்ம லக்கினத்தில் வள்ளி  தெய்வானை சமேதர முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வந்தார்.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை காண நேற்று காலை முதலே பழநியில் பக்தர்கள் குவியத் துவங்கினர். அவர்களது அரோகரா கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச் நிலையம் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சத்திற்கும் அதிகமான பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர். கடற்கரையில் பக்தர்கள் ஓம் எழுதி அதில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். தைப்பூசத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள், 8 மணிக்கு மேல் அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடக்கிறது.

காலை 9 மணிக்கு சுவாமி அலைவாயுகந்தபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலாவாக கோயிலை சேருகிறார். இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் ரயில், பஸ், வேன், கார், ஆட்டோ மற்றும் நடைபயணமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் திருச்செந்தூர் வீதிகளில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தெரிந்தன. இதேபோல் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் எல்லாம் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.

Tags : festivals ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்