வடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

குறிஞ்சிப்பாடி: வடலூரில் 148 தைப்பூச ஜோதி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து நாளை காலை வரை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 148 வது ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், தொடர்ந்து தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஞானசபை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியும் ஏற்றப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்தியஞானசபையில் இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. இதில் ஏழுதிரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணிக்கும் ஜோதிதரிசனம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை (22ம்தேதி) அதிகாலை 5.30 மணி என ஆறு காலங்கள், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 23ம் தேதி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வள்ளலார் பயன்படுத்திய பேழையை வைத்து, பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருவறை தரிசனம் நடைபெறவுள்ளது. ஜோதி தரிசன விழாவுக்கு வரும் சன்மார்க பக்தர்கள் வசதிக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.  

ஏழு திரைகள் அர்த்தம்

கருப்புத்திரை இறையை மறைக்கிறது

நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது

பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது

சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது

பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது

வெண்மைத்திரை பொய்ப்பதியை மறைக்கிறது

கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது

152 ஆண்டுகளாக அணையாத அடுப்பு

ஏழை மக்களின் பசியை, ஒரு பிணி (நோய்) என்று சொன்னவர் வள்ளலார். ஜாதி, மதங்கள் தலை விரித்தாடிய 1867ம் ஆண்டு அது. ஜாதி, மத பேதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரின் பசியையும் போக்க முடிவெடுத்தார் வள்ளலார். அதற்காக, சத்திய தர்மச்சபையை வடலூரில் நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் ‘அணையா அடுப்பு’.1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். இன்று வரை அந்த அணையா நெருப்பு பலரின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் கடலூர் மாவட்டத்தைப் பல முறை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: