முருகன் அருளும் தலங்கள்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாதர் ஆலயத்தில் பழநி முருகப்பெருமானைப் போலவே தோற்றம் தரும் முருகப் பெருமானை  தரிசிக்கலாம்.

வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளின் வாழ்விற்கு வழி காட்டி அவர்களுக்கு அருளும் முருகனை வழிவிடும் முருகன் எனும் பெயரில் ராமநாதபுரத்தில் தரிசிக்கலாம். அண்ணன் கணபதியுடன் கந்தன் கருவறையில் அருளும் தலம் இது.

கடலூரில் வெற்றிவேல் முருகன் எனும் திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்கிறார்.  மழலை வரம் வேண்டுவோர் மூன்று எலுமிச்சம்பழங்களை இவருக்கு படைத்து வேண்டிட அவர்களுக்கு மழலை வரம் கிட்டுகிறது. திருமணத்தடை உள்ளோர்கள் வெற்றிலைத் துடைப்பு எனும் முருகனுக்கு அபிஷேகம் செய்த நீரை வெற்றிலையில் தெளித்து முகத்தைத் துடைக்கும் பரிகாரத்தை செய்து தடை நீங்கப்பெறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள வேளிமலையில் மூலவர் குமாரசுவாமியாகவும் உற்சவர் மணவாளகுமரனாகவும் அருள்புரிகின்றனர். வேடுவ குலத்து வள்ளியை முருகப்பெருமான் திருமணம் புரிந்த தலம் இது. இங்கு வழங்கப்படும் கஞ்சிதர்ம பிரசாதம் சகலநோய்களையும் தீர்ப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிடங்கூரில் சுப்ரமண்யராக பிரம்மச்சாரி வடிவில் முருகப் பெருமானை தரிசிக்கலாம். கேரள கோயில்களிலேயே உயரான கொடிமரமும் அதன் மேல் மயிலும் இடம் பெற்றுள்ள சிறப்பு பெற்ற தலம் இது. இந்த சந்நதிக்குள் பெண்கள் தரிசிக்க அனுமதியில்லை. கொடிமரத்தருகே நின்றுதான் தரிசிக்க முடியும்.

கோயமுத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் ரத்னகிரி முருகன் திருக்கோயில் உள்ளது. இந்திரனை அசுரர்களிடமிருந்து காக்க அவனை தன் வாகனமாக முருகப்பெருமான் ஏற்றருள் புரிந்த தலம் இது. இங்கு முருகப்பெருமானுக்கு வன்னி இலையால் அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

சிவகங்கை மாவட்டம் கோவனூரில் உள்ள பில்லூரில் முருகப்பெருமான் திருவருள்புரிகிறார். சித்த வைத்தியர்கள் சிறப்பாகக் கருதும் பூநீர் உற்பத்தியாகும் தலம் இது. சித்த மருத்துவர்களும், சித்த மருந்துகள் உண்போரும் தரிசிக்க வேண்டிய தலம் இது.

சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றத்தில் சுவாமிநாத சுவாமி எனும் பெயரில் அழகன் முருகனை தரிசிக்கலாம். சித்திரை வருடப்பிறப்பன்று இக்குன்றின் 120 படிகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இத்தல நடராஜர் வலது பதம் தூக்கி ஆடிய நிலையில் அருள்வதால் தன்பாதம் தூக்கிய நடராஜர் என வணங்கப்படுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரையில் சுவாமிநாத சுவாமியாக தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை தரிசிக்கலாம். சித்தப்பிரமை உடையவர்கள் இத்தலத்திற்கு வந்து தரிசித்து தீர்த்தப் பிரசாதம் சாப்பிட சித்தப் பிரமை நீங்கிவிடும் அற்புதம் நிகழ்கிறது.

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமண்யரை தரிசிக்கலாம். நான்முகனின் கர்வத்தை அடக்க படைப்புத்தொழிலை மேற்கொண்ட காமதேனு வெண்ணெய்மலையை உருவாக்க அதில் முருகப்பெருமான் எழுந்தருளியதாக தலபுராணம் கூறுகிறது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட தேனு தீர்த்தத்தில் 5 நாட்கள் மூழ்கி முருகனை வழிபட பிள்ளைப்பேறு கிட்டிடும் தலம் இது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அன்னைக்கும் ஏகாம்பரநாதருக்கும் இடையே சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள ஆலயம் குமரக்கோட்டம். நான்முகனை சிறையிலடைத்த முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவில் படைப்புத் தொழிலை ஆரம்பித்த தலம் இது. நாகம் குடைபிடிக்கும் இத்தல உற்சவர் குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் பேரழகுடன் திகழ்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் ஷண்முகநாதரை வணங்கி மகிழலாம். சாபத்தால் மலைவடிவான முருகனின் மயில்சாபவிமோசனம் பெற்றதலம் இது. குன்றக்குடிக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் நினைத்தவை நடந்தே தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத அனுபவ நம்பிக்கை.

சேலம் மாவட்டம் ஊத்துமலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் பால சுப்ரமண்யர் அருள்கிறார். அகத்திய முனிவர் பூஜித்த முருகப்பெருமான் இவர். வணங்குவோர்க்கு தொழில்வளம் சிறக்க இந்த பால சுப்ரமண்யர் ஆசி வழங்குகிறார்.

Related Stories: