குழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்

விருதுநகரிலிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. இங்கு பழமையான நல்லதங்காள், நல்லதம்பி கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் நல்லதங்காளின் 7 குழந்தைகள் சிலைகள் உள்ளன. கோயில் அருகில் நல்லதங்காள் தனது குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்த பாழடைந்த கிணறும் உள்ளது.

தல வரலாறு

புராண காலத்தில் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என 2 குழந்தைகள் பிறந்தனர். உடல்நலக்குறைவால் ராமலிங்க சேதுபதியும், இந்திராணியும் இறந்ததால், நல்லதம்பி ஆட்சி பொறுப்பை ஏற்றார். நல்லதங்காள் பருவ வயதை அடைந்தபின்னர், அவரை தற்போதைய சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கு நல்லதம்பி திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர் காசிராஜன்நல்லதங்காள் தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 7 குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், மானாமதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், உணவின்றி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

நல்லதங்காள் குடும்பமும்  பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனதால் மனமுடைந்த நல்லதங்காள், தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு  அர்ச்சுனாபுரத்திற்கு வந்தாள். ஆனால் அங்கு நல்லதம்பி இல்லாததால் ஏமாற்றமடைந்த நல்லதங்காள், நல்லதம்பியின் மனைவியிடம் தனது வறுமை நிலையை விளக்கி கூறினாள். இதனை அலட்சியம் செய்த நல்லதம்பியின் மனைவி, நல்லதங்காள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு உணவிட மறுத்தார். நல்லதங்காள், தனது குழந்தைகளுடன் உணவின்றி தவித்து வந்தார். நீண்ட நாட்களாகியும் நல்லதம்பி வராததால், விரக்தியடைந்த நல்லதங்காள் கிணற்றில் 7 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊர் திரும்பிய நல்லதம்பி, நடந்த சம்பவத்தை கேள்விப்படடு அதிர்ச்சியடைந்தார். பின்னர் நல்லதங்காள் குதித்த அதே  கிணற்றில், அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அங்கு தோன்றிய சிவபெருமான் தற்கொலை செய்து கொண்ட நல்லதம்பி, நல்லதங்காள் மற்றும் குழந்தைகளை உயிர்ப்பித்தார். தொடர்ந்து உயிர்த்தெழுந்த நல்லதங்காள் தங்களுக்கு சிவபெருமானின் திருவடியில் இடம் தருமாறு வேண்டினார். அதற்குரிய காலம் வரும் வரை, அப்பகுதியில் அம்பாளாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்குமாறு சிவபெருமான், நல்லதங்காளிடம் கூறி விட்டு மறைந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர், நல்லதங்காள் அப்பகுதியில் தெய்வமாக காட்சியளிக்கிறார். இதனை நினைவுபடுத்தும் வகையில் நல்லதங்காளுக்கும், நல்லதம்பிக்கும் பக்தர்கள் 2 கோயில்களை கட்டி வணங்குகின்றனர். அவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்து கொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பு பகுதியில் இன்றும் காணலாம். நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் நல்லதங்காள், நல்லதம்பி தெய்வமாகவும் அவர்கள் வாழ்ந்த அரண்மனை கோயிலாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

குழந்தைப் பேறு வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும் எலுமிச்சம்பழத்தை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை நல்லதங்காள் அம்பாள் முன்பும், 7 குழந்தைகள் சன்னதியிலும் கட்டி பக்தர்கள் வணங்குகின்றனர். குழந்தைப் பேறு பெற்ற பக்தர்கள் அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்துகின்றனர். தங்களது குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்றும் பெயரிடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் துணிகளை கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கிறது.

Related Stories: