பொங்கல் சில தகவல்கள்

சங்கராந்தியன்று சொர்க்கவாசல்!

பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். ஆனால் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் மகரசங்கராந்தி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயில்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் தர்மசாஸ்தா திருத்தலத்தின் அருகே உள்ளது. அண்ணப்ப சுவாமி திருக்கோயில். வருடத்தில் பொங்கல் நாளன்று மட்டுமே இந்தக் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இக்கோயிலின் 140 படிகள் ஏறிச் சென்று வழிபட ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் செல்லமுடியாது.

தந்தைக்குக் காட்சி!

மகர சங்கராந்தியன்று சபரிமலை ஐயப்பன் பொன்னம்பலமேட்டில் ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இந்த நேரத்தில் ஐயப்பன் கருவறையில் தனது தந்தை ராஜசேகரன் வழங்கிய தங்க நகைகளை அணிந்து ராஜ அலங்காரத்தில் தந்தைக்குக் காட்சி அளிப்பார்.

பொங்கலுக்கு மட்டும் வழிபாடு!

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கத்ரி மலைப்பகுதியில் உள்ளது மஞ்சுநாதர் கோயில். இந்தக் கோயிலில் அன்னப்பா, மலைராயா என்ற இரு தெய்வங்களுக்குத் தனிச் சந்நதிகள் இருக்கின்றன. பொங்கல் திருநாளன்று மட்டும் இந்த இரு சந்நதிகளின் கதவுகள் திறக்கப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடைபெறுகின்றன.

யானைக்கு கரும்பு!

பார்த்திபனூர் அருகேயுள்ள மேலம்பெருங்கரை சிவபெருமான் ஆலயத்தில் எட்டு யானைத் தலை சிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தைப் பொங்கல் அன்று இந்த சிலைகளுக்கு முன் கரும்புகளை வைத்து பொங்கலிட்டு வணங்குகிறார்கள்.

நெ. ராமன்

Related Stories: