ஒரு வீரத் தியாகியின் உணர்வு..!

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நேர்வழி காட்ட இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். ஓர் ஊருக்கு ஒரே சமயத்தில் இரண்டு தூதர்களை அனுப்பினான். ஆனால் அந்த ஊர் மக்களோ இறைத்தூதர்களைப் பொய்யர்கள் என்று கூறி, அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்தனர். மூன்றாம் மனிதர் ஒருவர் விரைந்து வந்தார். இறைத்தூதர்களை மறுத்துக் கொண்டிருந்த, இறைவனின் சட்டங்களை மீறிக் கொண்டிருந்த தன் சொந்த சமூகத்தினருக்குச் சத்தியத்தை எடுத்துரைத்தார். நேர்வழியைப் போதிக்கும் இறைத்தூதர்களை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இவ்வாறு கூறிய ஒரே காரணத்திற்காக அந்தச் சமுதாயத்தினர் அவரைக் கொடூரமாகக் கொன்று விட்டனர். அவருடைய உதிரம் கீழே சிந்துவதற்கு முன்பே அவரிடம் சொல்லப்பட்டது.

அசரீரி முழங்கியது: “சொர்க்கத்தில் நுழைந்துவிடு.” அடுத்த விநாடி அந்த வீரத்தியாகியின் வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் என்ன தெரியுமா?‘யா லைத்த கவ்மீ யஅலமூன்’ “ஆஹா...என் சமுதாயத்தவர் அறிந்தால் எத்துணை நன்றாய் இருக்கும்! இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதை.” (குர்ஆன் 36: 2627) இது குர்ஆனின் 36ஆம் அத்தியாயமான யாஸீனில் இடம் பெற்றுள்ள 26, 27ஆம் வசனங்களாகும். அந்த வீரத்தியாகியின் போற்றத்தக்க பண்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவருடைய சமூகத்தினர் சற்று முன்புதான் அவரைக் கொடூரமாகக் கொலை செய்திருந்தனர். அதுவும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார் என்பதற்காக.

ஆயினும் அந்தச் சமூகத்தினர் மீது அவருடைய உள்ளத்தில் கோபமோ பழிவாங்கும் உணர்வோ இம்மியளவும் இல்லை. அவர் அந்தச் சமூகத்தைச் சபிக்கவும் இல்லை. வெறுப்பை உமிழவும் இல்லை. அவர் இப்போதும் அவர்களுக்காக நன்மையையே நாடுகிறார். “எனக்கு ஏற்பட்ட நல்ல முடிவை நான் உயிர் வாழ்ந்த போது என் சமுதாயத்தினர் உணராவிட்டாலும் என் மரணத்தின் மூலமாவது உணர்ந்து நேர்வழிபெற்றால் எத்துணை நன்றாய் இருந்திருக்கும்” என்று உருகினார். அந்த வீரத்தியாகியின் உணர்வை. உருக்கத்தை, பகைவர்க்கும் அருளும் நன்நெஞ்சை உலக மக்கள் அனைவரும், உணர வேண்டும் என்பதற்காகவே அவர் சொன்னதை இறைவன் தன் வேதத்திலேயே பதிவு செய்து அறிவித்து விட்டான். பழிக்குப்பழி, வெட்டுக்குத்து என எப்போது பார்த்தாலும் கத்தியும் அரிவாளுமாய் வெறுப்பைச் சுமந்து அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு ‘யாஸீன்’ அத்தியாயத் தின் இந்த 26, 27 வசனங்கள் வழிகாட்டுகின்றன.

இந்த வார சிந்தனை

“தவறு செய்தவர்களை மன்னித்து விடுங்கள். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா?”(குர்ஆன் 24:22)

சிராஜுல்ஹஸன்

Related Stories: