தீரா நோய்கள் தீர்க்கும் திருத்தலங்கள்

நம் பாரத பூமி பாரம்பரியமும் இறை நம்பிக்கையும் உள்ள பூமி. எத்தனை எத்தனை திருத்தலங்கள்; எத்தனை எத்தனை நம்பிக்கைகள்! ஒவ்வொரு தலத்துக்கும் ஒருவித மகிமை. அதில் குறிப்பாக, உடல்குறையை நீக்கவல்ல திருத்தலங்கள் நம் தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. அங்கு சென்று நலம் பெற்றோர் அநேகம் பேர். மருத்துவம் சாதிக்காத, சாதிக்க இயலாத பல அற்புதங்களை, இறையருள் சாதிக்கும் என்று அன்பர்கள் பெரு நம்பிக்கை கொண்டுள்ளார்கள்; அனுபவபூர்வமாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். அதுபோன்ற ஆலயங்கள் சிலவற்றை நாம் இங்கே தரிசிப்போம்.

கண் நோய்கள்:

மதுரையை அடுத்த சாத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில், இங்கே அம்மன் தன் குளிர்ப் பார்வையால் ஆசி வழங்குகிறாள். கண்ணுக்குக் கண்ணாக பக்தர்களைப் புரந்தருளுகிறாள். ‘என் கண்ணே, என் விழியே,’ என்று சீராட்டிப் பாராட்டுகிறாள். ஆமாம், கண் நோய் உள்ளவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனுக்கு வேண்டிக் கொள்கிறார்கள். அந்த மனமுருகிய பிரார்த்தனைக்குப் பிறகு, வெள்ளியால் ஆன கண் மலர் வாங்கி உண்டியலில் சேர்க்கிறார்கள். அதையடுத்து சில ஏழைகளுக்கு முடிந்தவரை அன்னதானம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தம்முடைய கண் சம்பந்தமான கோளாறுகள் விலகி வாழ்வில் ஒளி மிகுவதாக நம்புகிறார்கள்.

இருதய நோய்கள்:   

சென்னை நகரை அடுத்து உள்ளது ஆவடி என்ற தலம். இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருநின்றவூர். இத்தலத்துக்கு ரயில் நிலையமும் உண்டு. இங்கே, ஈசன் இருதயலீஸ்வராகப் பேரருள் புரிகிறார். பூசலார் நாயனார் என்ற சிவனடியார் மானசீகமாகவே கயிலைநாதனுக்கு ஒரு கோயில் அமைத்து, கும்பாபிஷேகமும் செய்தார். அவரது இருதயத்தில் உருவான கோயில்தான் இந்த இருதயாலீஸ்வரர் கோயில். இருதய நோய் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு பௌர்ணமி அன்று வருகிறார்கள். உள்ளம் உருகும் வகையில் ஐயனைப் பிரார்த்தனை செய்து, அவருக்கு அபிஷேகமும் செய்து மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்து பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு அவர்கல் கோயிலை விட்டு நீங்கும்போதே இருதயத்தின் ‘லப்&டப்,’ எந்த பிசிறும் தட்டாமல் ஒலிப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்கள்.

கால் சம்பந்தமான நோய்கள்:  

‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுகிறான்’ என்று சுறுசுறுப்பானவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது வழக்கம். அவ்வளவுத் துடிப்பான கால்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமானால் அதை நீக்குபவரும் சக்கரத்தாழ்வாராகவே அமைவதுதான் எத்தனைப் பொருத்தம்! ஆமாம், குறிப்பிட்ட கோயில் என்றில்லை, சக்கரத்தாழ்வார் கொலுவீற்றிருக்கும் எந்தக் கோயிலுக்கும் சென்று கால்நோய் தீரப் பெறலாம். முக்கியமாக இவருக்கு செவ்வாய்கிழமை அன்று அர்ச்சனை செய்து, மனமுருகி அவரை 9 பிரதட்சணம் செய்வது பாதிக்கப்பட்டவர்களின் வழக்கம். இதுபோல தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் செய்தால் அவருக்கான பிரார்த்தனை நிறைவுறும். அவர் மேலும் மகிழும் வகையில் 9வது செவ்வாய்கிழமையன்று முடிந்த அளவுக்கு சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு. கால் சம்பந்தமான நோய்கள் காணாமல் போகும்.

புற்று நோய்:  

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜாபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அருள்பாலிக்கிறார் தன்வந்திரி பகவான். பிரபஞ்சத்தின் முதல் மருத்துவர் இவர்தான். ஆம், பாற்கடல் கடையப்பட்டபோது சர்வரோக நிவாரணியான அமிர்த கும்பத்தை சுமந்து வந்தவர் இவர்தானே! அனைத்து நோயையும் நீக்கவல்ல இவர், மருத்துவ உலகிற்கு இன்றுவரை சவாலாக நிற்கும் புற்றுநோயையும் குணபடுத்த மாட்டாரா என்ன? இந்த நம்பிக்கையில்தான் புற்றுநோய் பாதித்த பக்தர்கள் இந்தக் கோயிலில் விசேஷ பூஜைகள் செய்கிறார்கள். முற்றிலும் குணமாகாவிட்டாலும், அந்த நோய் கட்டுப்பட்டாவது இருப்பது பெரிய ஆறுதல்தான் என்கிறார்கள் அவர்கள்.

வயிறு சம்பந்தமான நோய்கள்:   

‘வயிற்றைக் கேட்டுக் கொண்டுதான் வாய் சாப்பிடவேண்டும்’ என்ற பழமொழி, நமக்குள்ளேயே இருந்துகொண்டு நாம் சவைப்பதையெல்லாம் செரிக்கவைக்கும் வயிற்றின் பரிதாப நிலையைப் பார்த்து சொல்லப்பட்டதுதான். நாம் பார்க்க முடியாதபடி ஒரு நாளின் 24 மணிநேரமும் ஒரு விநாடிகூட ஓய்ச்சல் ஒழிவின்றி பணியாற்றுகிறது வயிறு. அதற்கு ஏதேனும் பிரச்னை என்றால், மருத்துவரை நாடுகிறோம். அதனை நாம் அவமதிக்கும் கொடுமைக்குத் தக்கபடி அது கோளாறு அடைந்து விடுகிறது. மருத்துவமும் ஒரு கட்டத்தில் விழிபிதுங்க முழிக்கும்போது, நமக்குக் கடவுள் நினைவு வருகிறது. அத்தகைய ஒரு கடவுள், ஈரோடு நகரில் உள்ள பெரிய மாரியம்மன். இந்த அம்மனுக்கு வேண்டிக்கொண்டு உப்பு, மிளகு வாங்கி கோயில் வளாகத்தில் போட்டு, பிறகு முடிந்த அளவுக்கு சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது சிக்கலில்லாத நம்பிக்கை.

மனநலம் குன்றியவர்கள்:  


உணர்வுகள் சிதைக்கப்படும்போது, மனம் நலம் குன்றிவிடுகிறது. குணங்கள் அரும்புவது அந்த மனதிலிருந்துதான். அவை எப்படிப்பட்டவை என்பதைப் பொறுத்து மனச் சிதைவின் அளவு தீர்மானமாகிறது. புற தாக்குதல்களும், அக விகாரங்களும் பக்குவமில்லாத மனதை வாட்டும்போது அது நொந்து போகிறது. அந்த மனதுக்குரியவர் மட்டுமல்லாமல், அவரைச் சார்ந்திருப்போரெல்லாம் வருத்தம் சூழ் வாழ்வேண்டிய நிலை. இத்தகைய மனங்களை மருத்துவமும் கைவிடும்போது, அகோர வீரபத்திரர் ஆதரவுடன் அரவணைக்கிறார். இவர் சிங்கபெருமாள் கோயிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அனுமந்தபுரம் என்ற தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இங்கே பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை எடுத்துக்கொண்டால், மனச் சிதைவுகள் சீர்படுகின்றன என்பது நம்பிக்கை.

பேச்சு வராத குழந்தைகள் குணமடைய:  

மழலைச் சொல் கேளாத பெற்றோர், அந்த மழலையைப் பெற்றும் துரதிருஷ்டசாலிகள்தான். தத்தித் தத்தி நடக்கும் பருவத்தில் திக்கித் திக்கியாவது குழந்தை பேச அது மிகப்பெரியதொரு உலக அதிசயமாக பாவிப்பது பெற்றோரின் இயல்பு. ஆனால் இந்தப் பேறு கிடைக்காமல் ஏங்கும் பெற்றோருக்கு அபயம் அளிக்கிறாள் செண்பகவல்லித் தாயார். விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி தலத்தில் பூவநாதசுவாமி கோயிலில் தனி சந்நதியில் கொலுவீற்றிருக்கிறாள் அன்னை. இந்தத் தாயாருக்கு புடவை வாங்கி சார்த்தி, சில ஏழைக் குழந்தைகளுக்கு முடிந்தவரை அன்னதானமும் செய்தால், தாய் மகிழ்வாள்; உங்கள் குழந்தையும் தன் பேச்சால் உங்களை மகிழ்விக்கும். இந்த நம்பிக்கைக்கு பல நூறு ஆண்டு பாரம்பரியம் உண்டு.

சர்க்கரை நோய் தீர:  

இனிமையாகப் பேசுவதும் தவறோ; இன்சொல் கேட்பதும் தவறோ என்றுகூட வருத்தப்படும் அளவுக்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். இளவயதில் வறுமை காரணமாக இனிப்பு சாப்பிட முடியாமல் போனவர்களும், முதிய வயதில் சர்க்கரை நோய் காரணமாக அவ்வாறு சாப்பிட இயலாமல் அவதிப்படுபவர்களும் மருத்துவர்களைப் பார்ப்பதோடு, சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனையும் தரிசிக்கலாம். இந்த அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சர்க்கரைக் காப்பு செய்தால் சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கிவிடுகிறது அல்லது கட்டுக்குள் அடங்குகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆனால் அன்னையின் பாதுகாப்பு இருக்கும் கர்வத்தில் மீண்டும் தாராளமாக சர்க்கரையுடன் நட்பு கொண்டுவிடாமலும் இருக்க வேண்டும்.

தீராத நோய் நொடிகள் அகல:

எதனால் என்றே தெரியாமல், என்னவென்றும் புரியாமல் சிலவகை நோய்கள் பீடித்து ரொம்பவும்தான் அலைக்கழிக்கும். இவை மட்டுமல்ல, எந்தவித உடல் நலக் கோளாறுக்கும் தெய்வீக டாக்டராக விளங்குகிறாள் தையல் நாயகி. பெயரே ஆபரேஷன் செய்யும் சர்ஜனை நினைவுபடுத்துகிறதோ? இந்த அன்னை கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயிலில் கோயில் கொண்டிருக்கிறாள். இந்த அம்பாளுக்கு செவ்வாய் அன்று நெய் மாவிளக்கு இரண்டு போட்டு, விளக்கு எரிந்து முடிந்தபின், அதைப் பிரசாதமாக சாப்பிட்டு, அந்த ஆலயத்தில் தரும் சாந்துருண்டை பிரசாதத்தையும் மருந்தாக எடுத்துக் கொண்டால், தீராத நோய், நொடிகள் எல்லாம் அகலும் என்பது பொதுவாக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சில மருத்துவர்களுக்கும் இருக்கக்கூடிய நம்பிக்கை.

× RELATED தீராமல் உள்ள நோய்கள் நீங்க வைகாசி மாத...