தாடகையை வதம் புரிந்து விட்டு ராமர் வழிபட்ட சிவாலயம்

குமரி மாவட்டம், தெரிசனங்கோப்பில் அமைந்துள்ளது ராகவேஸ்வரம் ஆலயம். இவ்வூர் நாகர்கோவிலுக்கு வடக்கே 13 கி.மீ தொலைவில் உள்ளது. விஸ்வாமித்திர மகரிஷியும், பல முனிவர்களும் நடத்தி கொண்டிருந்த யாகங்களை தாடகையும், ஏனைய அரக்கர்களும் சேர்ந்து சிதைத்து விட்டனர். அதனால் அவர்களை  அடக்குவதற்காக விஸ்வாமித்திரர், ராமரையும் இலக்குமணனையும் தென்னகத்திற்கு அழைத்து வந்தார் என்று ராமாயணம் கூறுகிறது. அப்படி வந்தபோது தவத்திற்கு இடையூறு  செய்த தாடகையை ராமபிரான் வதம் புரிய நேரிட்டது. இந்த இடம்தான் திருசரம்கோர்ப்பு எனப்பெயர் பெற்றது. பின்னர் அது மருவி தெரிசனங்கோப்பு  என்று ஆகிவிட்டது. சரம் என்றால் அம்பு. திருசரம் என்றால் ராமபிரான் கோர்த்த அம்பு என்று பொருள். அரக்கியே ஆனாலும் தாடகை ஒரு பெண் அல்லவா, எனவே பெண்ணைக் கொன்ற பாவம் நீங்க ராமபிரான் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்.

தசகண்ட ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமபிரான் நிறுவியது ராமேஸ்வரம், அவனது தங்கை தாடகையை வதம் செய்த பாவம் தீர நிறுவியது  ராகவேஸ்வரம். இரண்டு ஆலயங்களுமே ராமபிரானது பெயராலேயே விளங்குகின்றன. தெரிசனங்கோப்பை அடுத்துள்ள மலையிலேயே தாடகை வாழ்ந்தாள் என்கிறார்கள். இப்போதும் அந்த மலை, தாடகைமலை என்றே அழைக்கப்படுகிறது. ராகவேஸ்வரர் ஆலயம் பழையாற்றின் மேற்கே  உள்ளது. தாடகை மலை ஆற்றிற்கு கிழக்கே உள்ளது. தாடகை மலையின் தோற்றம் வித்தியாசமாகவும், வியப்பானதாகவும் காணப்படுகிறது. குருதி தோய்ந்தவாறு,  தலைவிரி கோலத்தில் ஒரு பெண் படுத்துக் கிடப்பது போன்று மலை காட்சியளிக்கிறது. இப்போதும் அந்த அரிய காட்சியை தெரிசனங்கோப்பு ஊரின் கீழப்பகுதியில் நின்று வெகுதெளிவாகக் காணமுடியும்.

ராகவேஸ்வரர் ஆலயம்  சோழர்காலக் கட்டிட அமைப்பில் உள்ளது. இருபுறமும் படிகளைக் கொண்ட கோயில்  முகப்பும், விமான அமைப்பும் சோழர் கட்டிடக் கலையமைப்பிற்கு சான்றுகளாகும். மண்டபங்களில் நிறைய மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. இச்சின்னங்களோடு பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் ஆகிய அருகாமையிலுள்ள ஊர்களின் பெயர்களும் பாண்டிய மன்னர்களை நினைவூட்டுகின்றன. எனவே பாண்டிய மன்னர்களோடும் இவ்வாலயம் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. இக்கோயிலில் ராகவேஸ்வரருக்கும், உலகநாயகி அம்மனுக்கும் தனித்தனியே சந்நதிகளும், பிரகாரங்களும் உள்ளன. கன்னி மூலையில் விநாயகரும், தென்மேற்கு  மூலையில் சுப்பிரமணியரும் காட்சி தந்து அருளுகின்றார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சோழர்கள் வரலாற்றில் புகழ் பெற்று விளங்கும் ராஜராஜசோழன், கன்னியாகுமரிக்கு விஜயம் செய்தபோது முதன் முதலில் இவ்வாலயத்திற்கே வருகை தந்ததை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ராமர் செய்த பாவங்கள் விலக, அலைகடலில் நீராடி ராமநாதரை வழிபடும் தலம் ராமேஸ்வரம். செய்த தீவினைகள் விலக ஆற்றிலே நீராடி ராகவேஸ்வரரை வழிபடும் தலம் தெரிசனங்கோப்பு.  இதை முன் உதாரணமாக கொண்டே மன்னர் பெருமக்களும் போர்ப் பாவங்களை நீக்கி கொள்ளும் பொருட்டு, ராமபிரானின் வழியில் இவ்வாலயங்களை தரிசித்தும், திருப்பணிகள் செய்தும் வந்துள்ளனர், மக்களும் இங்குள்ள பழையாற்றில் புனித நீராடி, ராகவேஸ்வரரை தரிசனம் செய்து பாவ விமோசனம் பெறுகிறார்கள் என்பதே உண்மை.

× RELATED பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீக்கும் வைகாசி பிரதோஷ சிவபெருமான் வழிபாடு