ஏழை பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தலைமலை சாஸ்தா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் கடையம் ஊரில் ராமநதி அணை உள்ளது. அணை அருகே தலைமலை சாஸ்தா  கோயில் கொண்டுள்ளார். தலைமலை என்பதற்கு காரணம். பொதிகை மலை தான், முதன் முதலில் தோன்றிய மலை, தலையாய மலை என்றும்  கூறப்படுகிறது. அதன்காரணமாக இங்குள்ள சாஸ்தாவிற்கு தலைமலை சாஸ்தா என பெயர் வரலாயிற்று. இந்த சாஸ்தா, நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று தான் தன்னை நாடி வந்த ஏழை பெண் ஒருத்திக்கு பிரசவம் பார்த்தது. கடையத்தில் வாழ்ந்து வந்த  விவசாய தொழிலாளி சுப்பையன், இவரது மனைவி செல்லம்மாள்.  ஒரு நாள்.. வயலில் கூலி வேலை செய்யும் சுப்பையன் தனது மனைவியிடம் “புது  அரிசி பொங்குற, பால் பாயசம் வச்சு வை புள்ள, நாக்கு ருசியா சாப்பிட்டு நாளாச்சு” என்ற படி, மண் வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு  புறப்பட்டான். கணவன் சென்றதும், சுப்பையன் மனைவி செல்லம்மாள், சமையலுக்கு தயார் ஆன செல்லம்மாள், அடுப்பு எரிக்க விறகு இல்லாததை  கண்டாள்.

பின்னர் நாமே சென்று விறகு எடுத்து வரலாம் என முடிவு செய்து, மலையடி வாரப்பகுதிக்கு சென்றாள். வழியில் அவளை கண்ட உறவுப்பெண் “என்ன  தாயி, கர்ப்பிணி நீ விறகு பொறக்க போறியாங்கும், அக்கம் பக்கத்து வீடுகளில் நாலு கம்ப வாங்கி இன்னைக்குள்ள கதையபாரு ஆத்தா, நாளைக்கு உம்  புருஷன்கிட்ட சொல்லி விறகுக்கு போயிட்டு வரச்சொல்லு.” என்றாள். “வடிவு ஆத்தா, ஒரு நாள் ஜோலிய கெடுத்திட்டு போன, துட்டுல்லா போகும்.  அதேன் நான் போயிட்டுவந்திடலாம்ன்னு நினைச்சு புறப்பட்டேன்.” என்று பதில் கூறிய செல்லம்மாளுக்கு அந்த முதுமையடைந்த பெண் அறிவுரை  கூறினாள் “சரி அந்தி கருக்கலுக்கு முன்ன வூடு வந்து சேரு தாயி” என்று அந்த உறவுக்கார பெண் கூறிச்சென்றாள். செல்லம்மாள் கயிறுடன் நடந்து சென்று தலைமலை சாஸ்தா கோயில் பகுதியை வந்தடைந்தாள். அங்கு மரம், செடிகளுக்கு இடையே காய்ந்த  நிலையில் நிற்கும், மரக்கம்புகளை முறித்து எடுத்தாள்.

அப்படி எடுத்துக் கொண்டிருக்கும் போது, அடர்ந்து வளர்ந்திருந்த 2 செடிகளுக்கு இடையே காய்ந்த நிலையிலுள்ள சிறிய மரக்கம்பு ஒன்று கிடந்தது தெரிந்தது. அதை கண்ட செல்லம்மாள், தனது கைக்கொண்டு இழுத்தாள். அந்த கம்பு  அசைந்தது. மீண்டும் அந்த கம்பை வேகம் கொண்டு இழுக்க முற்பட்ட போது, உறுமல் சத்தத்துடன் எழுந்து நின்றது கரடி, அதனைக்கண்ட  செல்லம்மாள் அஞ்சி நடுங்கி கத்தியபடி, ஓடினாள். கரடி அவளை பின் தொடர்ந்து விரட்டியது. நிறை மாத கர்ப்பிணியான செல்லம்மாளால் ஓட முடியாத போதும், உயிர் பயத்தில் தலைமலை சாஸ்தா கோயிலை நோக்கி ஓடி வந்தாள். கர்ப்பம்  தரித்த பெண்கள் 4 மாதம் ஆன பின் கோயில் நடையேறக்கூடாது என்று வழக்கம் கிராமத்தில் இருந்தது. நாம் நிறை மாத கரப்பிணியாக  இருக்கிறோமே என்று அஞ்சி நின்றாள். இருப்பினும் கரடி வேகம் கொண்டு வருவதை கண்டு, சாஸ்தா என்னை மன்னிச்சிடு, சாஸ்தா என்னை  காப்பாத்து, காப்பாத்து என்று கதறியபடி கோயிலுக்குள் வந்து சாஸ்தா சிலை முன்பு படுத்துக்கொண்டு கத்தினாள். கரடியும் கோயிலுக்குள் வந்தது.

அவள் காலை கடிக்க முற்பட்டது. அப்போது சாஸ்தா விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். கரடி அவரை பணிந்து, பின்னர் விலகி சென்றது. ஓடி வந்த  களைப்பில் இருந்த செல்லம்மாள் எழுந்திருக்க முடியாமல் எழுந்து சாஸ்தா வைகண்ணீர் மல்க வணங்கினாள். சாஸ்தா, நிறை மாத கர்ப்பிணி, நீ ஏன்  இந்த கானகம் வந்தாய், உச்சி வேளை பகல் பொழுதில் நீ இப்படி வரலாமா என்று வினவினார். பின்னர் கருப்பனை அழைத்து, இவள் கணவனை அழைத்து வா, என்று உத்தரவிட்டார். அதனையேற்று கருப்பசாமி தனது குதிரை வாகனத்தில் புறப்பட்டார். மூச்சிறைக்க ஓடி வந்ததால் செல்லம்மாளுக்கு பிரசவ வலி உருவானது. அய்யனே, எனக்கு வயிறு வலிக்கிறது, மயக்கம் வருகிறது. தாயாய்,  தந்தையாய் காத்தருளும் சாஸ்தா எமக்கருள்வாய் என்று அழுதாள். கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, ம், கலங்காதே மகளே, எல்லாம்  நல்லபடியாகவே நடக்கும் என்று கூறிய சாஸ்தா, மறு நிமிடமே, உச்சிமாகாளிக்கு உத்தரவிட்டார்.

காளியே, மங்கை இவள் மகவுதனை நல்லபடியே  பெற்றெடுக்க உதவுங்கள் என்று சாஸ்தா உரைத்த மறுநிமிடமே, சாஸ்தா பீடம் இருந்த இடம் விட்டு, மேற்கு திசைக்கு பீடம் தானே நகர்ந்தது. அந்த இடம் சுற்றி மறைக்கப்பட்டது. குழந்தை பேறு முடிந்தது. ஆண் குழந்தை பிறந்தது. அப்போது சுப்பையனை அழைத்துக் கொண்டு கருப்பசாமி  வந்தார். பின்னர் கணவன், மனைவி,  குழந்தை என மூவருமாக அவர்கள் இல்லம் நோக்கி சென்றனர். அதன் பின் அவர்கள் வாழ்க்கை வளமானது.  சாஸ்தாவின் அற்புதம் நெல்லை சீமையெங்கும் பரவியது. அருள் திறன் கொண்ட சாஸ்தாவை வணங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  மக்கள் வந்து சென்றனர். இடைக்காலத்தில் கோயில் சிதறுண்டு போயிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  அப்போது சாஸ்தா சிலையை முன்பிருந்த இடத்திலேயே வைக்க பிரசன்னம் பார்த்தனர். அது கூடாது என்றும் தனக்கு மேல் கூரை அமைக்க  வேண்டும் என்று பிரசன்னத்தில் தெரிய வந்தது. அதனால் சாஸ்தாவின் வாகனம் கோயில் கூரைக்குள் இருக்கும். சாஸ்தா சிலை அதை விட்டு  வெளியே மேல் பகுதியில் இருக்கிறது.

- சி. லட்சுமி

Related Stories: