×

ரங்கா, ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை ரங்கா, ரங்கா கோஷம் விண்ணதிர முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்   வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் 8ம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து நம்பெருமாள் தினம் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பகல் பத்து நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று  நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.  மோகினி அலங்காரத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டார்.

அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். முன்னதாக, நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேதவிண்ணப்பங்களை கேட்டருளினார். பின்னர் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.   அப்போது ரங்கா... ரங்கா... கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார். அவரைத்தொடர்ந்து பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷத்துடன்  சொர்க்கவாசலை கடந்தனர்.   10 நிமிடத்திற்கு பின் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசித்து சேர்த்தி சேவை நடந்தது.  

6.30 மணிக்கு சாதரா மரியாதை நடைபெற்றது. 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். காலை 8.15 முதல் பொது மக்கள் சேவை நடைபெற்று வருகிறது. பெருமாளை தரிசிக்க பல்லாயிரகணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்தனர்.
கோயிலை சுற்றிலும் பேரிகாட் அமைத்து பக்தர்கள் வரிசையாக அனுப்பப்பட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள் காலையில் பெருமாளை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர். காலை 10 மணி அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். நள்ளிரவு 12 மணி வரை பெருமாளை தரிசிக்கலாம் என்பதால் இன்று முழுவதும் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் நோக்கி வந்த வண்ணம் இருப்பார்கள்.

இன்றிரவு 8 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும், 9 மணிக்கு வெள்ளி சம்பா அமுது படைத்தலும், இரவு 10.30 மணிக்கு உபயக்காரர் மரியாதையும் பொதுமக்கள் சேவையும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு நாழி கேட்டான் வாயிலைத் தாண்டி வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நாளை அதிகாலை 1.30 மணிக்கு சர்ப்பகதியில் மூலஸ்தானத்தை அடைகிறார். சொர்க்கவாசல் திறப்பு விழாவில் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, புகழேந்தி, சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கத்தில் கோயிலை சுற்றி  பாதுகாப்பு பணியில்  4 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  வழக்கத்துக்கு மாறாக  கோயிலுக்குள் பக்தர்களை விட போலீசாரே அதிகமாக காணப்பட்டனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Ranga ,devotees ,Sriharanka Opening ,Sri Lanka ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...