×

பம்பையில் பக்தி பிரவாகம்

வெள்ளிவானில் கூட்டமாக
ஊர்வலம் நடத்தும் கார்த்திகை மேகமே!
பள்ளிக்கட்டுடன் சபரிமலை பயணமே!
பம்பை கரையில் பக்தர்கள் கூட்டம்!
பக்தி பிரவாகத்தில் ஐயப்பன் அருள்
தோட்டம்!
பக்தியுள்ள மனதில் ஞானமுடன்
முக்தி வந்து சேரும்!
பந்தளராஜன் பார்வை நேரில்
வந்தருளும்!
காயப்பட எறிவார்கல் பூவெனமாறும்!
கோபத்தில் விட்டசொல் குறிதவறிப்போகும்!
துன்பம்கோடிவந்தாலும் துவண்டோடிவிடும்!
முற்பிறவி பாவம் மூண்டெழும்போது
பக்திலயம் கைகொடுத்து காக்கும்!
இப்பிறவி பயன் எல்லாம்
இனிது நிறைவேறும்-வற்றாத
இன்பம் கேணியாய் ஊறும்!
பக்தியுள்ளோர் வாய்மொழி
தத்துவங்களாகும்!
படிப்படியாய் தாள்திறந்து
பரமனடி காட்டும்!
சிந்தை, சொல் தெளிவாகி
தேனங்கே சுரக்கும்!
தன்னலம் இறந்துபோக
பிறர்நலம் பிறக்கும்!
உலகமே நாடக மேடையென்னும்
உண்மை விளங்கும்!
அகமும், புறமும் அர்த்தமுள்ள
வாழ்க்கை மலரும்!
அன்பு, அறம், அமைதி
ஜீவநதியாக மேலெழுந்து பொங்கும்!
தெய்வம் கோவில்கட்டி
நிரந்தரமாய் தங்கும்!
கண்கள் பூக்க! கால்கள் கடுக்க
உடல் வேர்க்க! கரடு, முரடு பாதை
கடந்து செல்லும் பயணம்!
பதினெட்டு படி தொட்டு
சந்நிதானம் சேர்ந்ததும்
சாஸ்தாவின் அருளால்
புதுப்பிறவி ஜனனம்!
ஒன்பது வாய் கூட்டுக்குள்
சுற்றிவரும் காற்று!
ஐம்புலன் அடக்கியுன்
ஆயுள்விதி மாற்று!
நாடிசத்தம் நின்று போனால்
நாலுபேர் துணை வேண்டுமிதை
நன்குணர்ந்து கொண்டு
பதினெட்டு படியேறி வணங்கு!

விஷ்ணுதாசன்

Tags :
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி