×

நீங்காமல் மிச்சமிருக்கும் விஷம்!

பகவத் கீதை - 77

காயேன மனஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம்த்யக்த்வாத்ம சுத்தயே (5:11)

‘‘யோகிகள் தம் இந்திரியங்களால் செயல்களைப் புரிகிறார்கள் என்றாலும் அதெல்லாம் சித்த சுத்திக்காகத்தான். அவர்கள் அகக் காரணங்கள் மட்டுமின்றி,  புறக்காரணங்களாலும் மோக வயப்படுவதில்லை.’’ மோகவயப்படாமல் கர்மாக்களை இயற்றுவது என்பது ஒருவகையில் முந்தைய ஜென்மங்களின் பாவப்  பரிகாரமே என்கிறார் கிருஷ்ணன். கோபப்படுபவன் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறான்; பொய் சொல்பவன் கூடுதல் சாமர்த்தியத்துடன் அதிகமாகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான்;  திருடுபவன், புது நுட்பத்துடன் மேலும் திருடிக்கொண்டேதான் இருக்கிறான்.

நாம் செய்வது தவறு, பிறருடைய நலத்துக்கு ஊறு விளைவிப்பது என்று தெரிந்தும் அந்தத் தவறை ஒன்றாக, பலவாகச் செய்வது என்பது இப்போதைய  நடைமுறையாகிவிட்டது. தான் சம்பந்தப்பட்ட விஷயம், சம்பந்தப்படாத விஷயம் எல்லாவற்றிலும் இவ்வாறு தவறிழைப்பது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் திடீரென்று ஞானோதயம் பிறக்கும்; அதுவும் கொஞ்ச நாட்களில் நம்மாலேயே புறக்கணிக்கப்பட்டுவிடும்.

யோகியர் இயற்றும் கர்மாக்கள் எல்லாம், பெட்ரோல் மாதிரி. ஒரு கார் பெட்ரோலால் இயங்குகிறது. ஓடிக்கொண்டிருக்கும்போதே, பெட்ரோல் தீர்ந்து போகுமானால்,  உடனே கார் நிற்காது, கொஞ்ச தூரம் ஓடிவிட்டுதான் நிற்கும். அதேபோல சைக்கிள் ஓட்டுகிறோம், வெகு வேகமாக பெடல் மிதிக்க, சைக்கிள் அதைவிட  வேகத்தில் ஓடுகிறது. சற்று தொலைவுக்குப் பிறகு நாம் பெடல் செய்யாவிட்டாலும், சைக்கிள் கொஞ்ச தூரம் ஓடிய பிறகுதான் நிற்கும்.

மோக வயப்படாமல் கர்மம் இயற்றும் ஒரு யோகி, எப்போதுமே அந்த வலையிலிருந்து மீளத்தான் முயற்சிக்கிறார். இது பூர்வ ஜன்மத்துக் கணக்கு, அதை அவர்  நேர் செய்யவேண்டும். எந்த மோகமும் கொள்ளாமல் செயலாற்றுவாரானால் அவர் முந்தைய ஜன்மத்துக் கடன்களில் சிலவற்றைக் கழித்து விடுகிறார். அவரது  ஆயுட்காலம் முடிந்த பிறகு அடுத்த ஜன்மத்தில் மீண்டும் மோகமற்ற கர்மயோகியாக மாறி இந்தப் பிறவியில் இன்னும் கொஞ்சம் கடன்களைத் தீர்த்து விடுகிறார்.  மீண்டும் இன்னொரு பிறவி, ஒரு கட்டத்தில் கடனெல்லாம் அடைந்த பிறகு, அவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடுகிறார். இது யோகிகளின் கடன் சுமையைப்  பொறுத்து, ஓரிரு ஜன்மங்களிலேயே கைகூடலாம்.

‘ஒருவருக்கு ஏழு பிறவிகள் உண்டு’ என்று சொல்வார்கள்.
‘‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்’’
- என்கிறாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதை.

அதாவது இந்தப் பிறவிக்கும் இன்னும் ஏழு பிறவிக்கும் நாராயணனே நமக்குப் புகலிடம் என்று கூறுகிறாள், ஆண்டாள். எழேழ் பிறவி என்பதால் மொத்தம் 49  பிறவிகள் என்றுகூட கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அப்படியென்றால், அத்தனை காலம் காத்திருக்க வேண்டுமா, ஏழு பிறவிகளின் முடிவிலேயே பரந்தாமன்  எழிலடியைச் சேர்ந்துவிட முடியாதா என்ற ஏக்கமும் சேர்ந்துகொள்கிறது. ஒருவேளை பரமாத்மாவின் பேரருளைப் புரிந்துகொள்ள அறிவிலிகளுக்கு  நாற்பத்தொன்பது பிறவிகள் தேவைப்படும் என்ற உட்பொருளுடன் ஆண்டாள் சொல்கிறாளோ?

ஆகவே, யோகி என்பவன் தன் சுகங்களைத் தியாகம் செய்துவிட்டுக் காத்திருப்பானாகில், ஒவ்வொரு ஜன்மமாக இதே யோகநிலையைக் கடைபிடிப்பானாகில்  அவன் தன் ஏழாவது ஜன்மத்தில் பரம்பொருளைச் சென்றடைவது உறுதி.  வெறுமே யோகா, தியானம் பழகி அவற்றில் உச்ச கட்ட பயிற்சியையும்  முடித்திருந்தாலும் சரி, அவர் உணர்வுக்கு அடிமைப்பட்டவரானால் அதுநாள்வரையிலான பயிற்சியை அவர் அவமதிப்பது போலாகும். சமீபத்தில் அப்படி சிறந்த  பயிற்சி பெற்ற ஒரு நடிகர், ஒரு பொது விழாவில் தன்னை ‘செல்ஃபி’ எடுத்த நபரின் மொபைல் போனைத் தட்டி எறிந்தார்.

சுமார் ஐம்பது பேர் வெளி வாசலிலிருந்தே இப்படி செல்ஃபி எடுத்து வருவதாகவும், அது தனக்கும், தன் பிற ரசிகர்களுக்கும் இடையேயான பார்வையால்  பரிமாறிக்கொள்ளும் அன்புக்கு இடையூறு செய்வதாகவும், அதனால்தான் தான் அப்படிச் செய்ததாகவும் விளக்கம் கொடுத்தார்.  ஆனாலும், திரையுலகில் ஒரு  யோகியாகக் கருதப்பட்டவர் இவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற செயல்தான் என்று அவர் விளக்கத்தால் சமாதானமுறாத ரசிகர்களிடம், இறுதியாக தான்  அப்படி நடந்துகொண்டது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார் நடிகர்.

புலன்களை அடக்கக் கற்றுக்கொடுக்கும் ஒரு வழிமுறைதான் யோகா-தியானம். முக்கியமாக கோபம் போன்ற கெடு உணர்வுகளை அடக்கப் பயிற்றுவிக்கிறது.  ஆனால் அப்படியும் கோபத்தை அடக்க முடியவில்லை என்றால், அத்தனை வருட பயிற்சிகளையும் மீறிய அந்தக் கோபம் அவரே அறியாமல் அடிமனதில்  தேங்கியிருக்கக் கூடியதாக இருக்கும். யார் மீதோ, எதற்காகவோ கோபப்பட வேண்டியது அடக்கப்பட்டு, அமுக்கி வைக்கப்பட்டிருந்தது, இப்போது  வெளிப்பட்டிருக்கலாம்.

ஒரு யோகி, இக்கால வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், அவன் எந்த சந்தர்ப்பத்திலும், யாரிடமும், எதற்காகவும் உணர்ச்சி வசப்படமாட்டான். ஏனென்றால்,  அவனுக்குத் தெரியும், மூளையைக் கேட்டுகொண்டுதான் மனம் செயல்படவேண்டும் என்பது. மனம் சொல்வதைக் கேட்டு மூளை செயல்படக்கூடாது. காரணம்,  மனம் என்பது நம்மிடம் இருக்கும், உருவமில்லாத ஓர் உறுப்பு. அதற்கு உருவம் இல்லாததால்தான் அது தன் விருப்பப்படி அலைபாய்கிறது.

ஆனாலும் துரதிருஷ்டவசமாக அது நம்முடைய உறுப்புகளில் ஒன்றாகவே செயல்படுகிறது! கையோ, காலோ ஒரு அளவுக்குதான் நீட்ட முடியும் என்று மூளை  சொல்லும்போது, ‘இன்னும் கொஞ்சம் நீட்டித்தான் பாரேன்,’ என்று மனசு உசுப்பிவிடும். அப்படி நீட்டி நாம் ஏதேனும் விபத்தில் சிக்கிக் கொண்டோமானால், நம்  வலியைப் பார்த்து, அதே மனசு வருத்தப்படவும் செய்கிறது. அதேபோல நம்மைப் பற்றிய உண்மையான தகுதியை, நம் சந்தோஷத்துக்காக மிக பிரமாண்டமாகப்  பெரிதாக்கிக் காட்டும். உண்மை எது என்பதை மூளையைப் பயன்படுத்தி நாம் தெரிந்து கொண்டால் மட்டுமே, மனதின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட முடியும்.  ஏனென்றால் மூளைதான் நம் ஒவ்வொருவரின் ‘தலைமைச் செயலகம்’.

அதன் கட்டுப்பாட்டுக்குள்தான் உடல் உறுப்புகள் எல்லாம் இயங்க வேண்டுமே தவிர, உருவமே இல்லாத, மாயமாய் நமக்குள்ளேயே உலவுகின்ற மனம் என்ற  உறுப்பின் ஆணைப்படி செயலாற்றக் கூடாது என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் - என்கிறது  திருக்குறள். அதாவது எந்தெந்தப் பொருட்களில் இருந்தெல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருட்களால் ஒருவருக்குத் துன்பமில்லை. அவற்றில்  மனம் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று பொருள். ஒரு வேடிக்கை பாருங்கள் - இந்தக் குறளை உச்சரிக்கும்போது நம் உதடுகள் ஒட்டாது!

நமக்குப் பின்னால் வெளிச்சம் இருக்கும்போது நமக்கு முன்னால் நிழல் விழுகிறது. வெளிச்சம் நெருங்க நெருங்க, நிழலுருவம் பெரிதாகிக்கொண்டே போகிறது.  அதாவது நம் இயல்பான உயரத்தை விட, நம் இயல்பான பருமனை விட. இதனால் நாம் மிகப்பெரியவனாக ஆகிவிட்டதாகக் கருதிக்கொள்ள முடியுமா? அது  எத்தனை அபத்தம். இப்படித்தான் மனசு நமக்கென்று ஒரு பிரமாண்டமான தோற்றத்தை உருவாக்கி நம்மையே ஏமாற்றுகிறது. ‘உடனிருந்தே கொல்லும் வியாதி’  என்று பெரியோர்கள் சொன்னது வேறு எதையும் இல்லை, நம் மனசைத்தான்.

என் வீடு பெரிதாக இருந்தால், என்னுடைய சொத்துகள் ஏராளமாக இருந்தால், என்னைப் போற்றி வணங்குபவர்கள் மிக அதிகமாக இருந்தால், நான் பெரியவன்.  அதாவது பெரியவன் என்ற நிழல்! வீடு, சொத்துகள், வணங்குபவர்கள் எல்லாம் வெளிச்சம். கூடும், குறையும். குறைந்தால் நான் சிறியவன். ஆனால் வெளிச்சமே  சாசுவதமானதுதானா? இல்லாமலேயே போகக்கூடியதும் ஆயிற்றே அது!  வீடு முதலான சொத்துகள் மதிப்பீட்டில்தான் ‘நான்’ உயர்வதும், தாழ்வதுமாக  இருக்கிறதே தவிர, இருப்பில் இல்லை. ஏனென்றால் இருப்பு எத்தனை நாளைக்கு என்ற கணக்கு அந்தப் பரந்தாமனுக்கே தெரியும்!

மோகத் தியாகம் செய்வது என்பது என்ன? ஒரு யோகி விமானப் பயணம் மேற்கொண்டிருந்தார். பேரழகியான விமானப் பணிப்பெண் ஒருத்தி, பயணிகள்  அனைவருக்கும் மது விநியோகித்துக் கொண்டிருந்தாள். அந்தவகையில் யோகியிடம் வந்தாள். மதுக்கோப்பையை நீட்டினாள். யோகி அதை வாங்க மறுத்தார்.  ‘எனக்கு விருப்பமில்லை, வேண்டாம்,’ என்றார். அவள் மிகவும் வற்புறுத்தினாள். ‘‘அற்புதவகை மது இது. விலை மிகவும் உயர்ந்தது. எங்களின் மதிப்பு  வாய்ந்த பயணிகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டது. நீங்கள் அவசியம் வாங்கி அருந்தத்தான் வேண்டும், கொஞ்சமாவது’’ என்று மன்றாடினாள்.  ஒரு பேரழகி, மதுக்கோப்பையுடன் இவ்வளவு கெஞ்சும்போது, அவர் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளாதது பிற பயணிகளுக்கு வியப்பூட்டியது.

‘‘சரி, எதை என்னுடைய அன்பளிப்பாக உங்கள் விமான ஓட்டிக்குக் கொடுத்துவிடு,’’ என்று சொன்னார் யோகி. ‘‘ஐய்யோ…. அவரது புத்தி தடுமாறிவிடுமே!  ஒழுங்காக அவரால் விமானம் ஓட்ட முடியாதே! நாம் அனைவருமே கீழே விழுந்து நொறுங்கிச் சாவோமே!’’ என்று பதறினாள் அவள். ‘‘அதைத்தான் நானும்  சொல்கிறேன். நான் ஒரு நேர்வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். போதை மயக்கத்தால் நானும் திசை மாறிவிட நேரிடும். நீ சொல்கிறாயே என்று இப்போது நான்  எடுத்துக்கொண்டேன் என்றால், அது, நான் மேற்கொண்டிருக்கும் என் வாழ்க்கை முறையையே கேவலப்படுத்துவதாகும். அதற்கு நான் உடன்பட மாட்டேன்.

மன்னித்துக் கொள்,’’ என்று பதிலளித்தார் யோகி.  நிரந்தரப் பழக்கமாகவா இது வந்து நம்மைப் பற்றிக்கொள்ளப் போகிறது? கொஞ்சம் சுவைக்காக, சிறிதளவு  உட்கொண்டால் நம் மன வலிமை பாதிக்கப்படாது என்று எடுத்துக் கொள்ளும்போதுதான் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுகிறது. அது, அந்த மனிதன் என்ற  கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுவதிலோ அல்லது பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலோ போய் முடிகிறது.

(தொடரும்)

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி