×

மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை தரும் வைகுண்ட ஏகாதசி

மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள். ஒவ்வொரு மாதமும் சுக்ல பட்சம் என்ற வளர்பிறையிலும் கிருஷ்ணபட்சம் என்ற தேய் பிறையிலும் வரும் 11வது நாள், ஏகாதசி. ஏகம் என்றால் ஒன்று, தசி என்றால் பத்து என்று பொருள்படும். ஏகாதசி என்றால் 11வது நாள்
என்பதாகும். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஐக்கியப்படுத்தும் நாளே ‘வைகுண்ட ஏகாதசி’. மார்கழி மாத வளர்பிறையில் வருகிற ஏகாதசியே பெரிய ஏகாதசி அதாவது ‘வைகுண்ட ஏகாதசி’யாக கொண்டாடப்படுகிறது.

கிருதயுகத்தில் ‘நதிஜஸ்’ என்ற அரக்கனின் மகன் முரன், மக்களையும் தேவர்களையும் பயமுறுத்தி கொடுமை புரிந்து வந்தான். அவனால் பெருந்துன்பங்களை அடைந்த அவர்கள் பொறுக்க முடியாமல் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். மகா விஷ்ணு முரனுடன் கடும்போர் புரிந்து களைப்படைந்த நிலையில் ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நய வஞ்சமாக முரன் அவரைக் கொல்ல முற்பட்டான். அச்சமயம் மகாவிஷ்ணுவின் 11 இந்திரியங்களிலிருந்து ஒரு சக்தி, செளந்தர்ய தேவதையாகத் தோன்றி முரனுடன் போரிட்டு அவனை அழித்தாள்! தனது 11 இந்திரியங்களிலிருந்து தோன்றிய அவளுக்கு ஏகாதசி’ என்று பெயரிட்டார். ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்றும் கேட்டார்.

‘‘இந்த நாளில் எவர் தங்கள் நாமத்தை ஜெபித்து விரதம் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் பாவங்களைப் போக்கி மோட்சம் அளிக்க எனக்கு சக்தி தர வேண்டும்’’ என்று கோரினாள் ஏகாதசி.‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று திருமால் வரம் அருளிய நன்னாளே வைகுண்ட ஏகாதசி. ஒருமுறை ‘வைகுண்ட ஏகாதசி’ விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களை கடைபிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், இது முக்கோடி ஏகாதசி என்றும், மோட்ச ஏகாதசி என்றும், பீம ஏகாதசி என்றும் வர்ணிக்கப்படுகிறது.

பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் ‘நஞ்சுண்ட ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. ‘‘அர்ச்சிப்பதற்கு துளசியும், விரதங்களில் ஏகாதசியும் எனக்கு உகந்தவை’’ என்று விஷ்ணு பகவான் கூறியிருக்கிறார். ‘ஏகாதசிக்கு சமமான விரதம் உலகில் இல்லை’ என்று  அக்னிபுராணம் கூறுகிறது. இவ்விரதம் இருப்பவர்களுக்கு சகல பாக்கியங்கள் கிடைக்கும். கல்வி, உயர்பதவி குழந்தை பாக்கியம் கிட்டும். பாவங்கள் அகலும். எட்டு வயது முதல் 80 வயது வரை அனைவரும் இவ்விரதத்தை கடைப்பிடித்து பகவான் மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெற்று பேரின்பமாக வாழ்வோம்!

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?