×

புத்திர பாக்கியம் எப்படி? புத்திர தோஷம் உள்ளதா?

புத்திர பாக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அம்சமாகும். இதனால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் எப்படி? புத்திர தோஷம் உள்ளதா? என்று பார்ப்பார்கள். ஜாதகத்தில் புத்திர பாக்கியஸ்தானம் என்பது 5 ஆம் இடம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே இடம்தான். பெண்கள் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்ற நான்காம் இடம் இது வயிறு சம்பந்தமான இடம். இதனால் இந்த இடம் பலமாக இருக்க வேண்டும். புத்திரகாரகன் குரு வலுவாக இருப்பது அவசியம். பெண்கள் ஜாதகத்தில் துலாம் ராசியில் ராகு, கேது, சூரியன், இந்த ராசியில் சூரியன் நீசம் அடைகிறார். மேலும் 6, 8, 12 ஆம் ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் இருந்தால் புத்திர பாக்கியம் தள்ளிப்போகும் கருச்சிதைவு ஏற்படும். ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் இருவரும் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் அமையும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க 5 ஆம் இடம் மட்டும் காரணம் அல்ல. 5 ஆம் இடம் புத்திரஸ்தானம், புத்திரர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும் இடம். ஆனால் ஆண், பெண் இருவர் சேர்க்கையின் மூலம்தான் கர்ப்பம் ஏற்படுகிறது. இதற்கு செவ்வாய், சுக்கிரன் சாதகமாக இருக்க வேண்டும். ஆண்கள் ஜாதகத்தில் வீரியஸ்தானமான மூன்றாம் இடம். மூன்றாம் அதிபதி பலமாக இருந்தால்தான் ஆண்மை, வீரியம் இருக்கும். சுக்கிரன் பலமாக இருந்தால்தான் விந்து உற்பத்தி சீராக இருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் பலம் குறைந்தோ, நீசமாகவோ இருந்தால் விந்து நீர்த்துப்போய் இருக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பெண்களுக்கு கரு முட்டைகள் சரியான வளர்ச்சி ஏற்படாது. கரு முட்டை குறைபாடு காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாத நிலை உண்டாகும்.

நான்காம் வீட்டில் ராகு, சந்திரன், சனி சம்பந்தப்படும்போது மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படும். செவ்வாயின் அமைப்பு சரியில்லை என்றால் ரத்த சோகை, அதிக உதிரப்போக்கு ஏற்படும். புத்திர பாக்கியம் அமைய இத்தனை பிரச்னைகள் இருக்கிறது. ஆகையால் ஆண்பெண் இருவரின் ஜாதகத்திலும் 5 ஆம் இடத்தை தவிர சுக்கிரன், குரு நல்ல பலத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். மூன்றாம் இடமும், செவ்வாயும் பலமாக இருந்தால்தான் வீரிய சக்தியும் விந்து சுரப்பும் அதிகம் இருக்கும். மேலும் அந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற தசா புக்திகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகையால் ஜாதகத்தில் புத்திர தோஷம் என்று 5 ஆம் வீட்டை மட்டும் பார்க்கக்கூடாது. உடல் ரீதியாக என்ன பிரச்னை 4, 5, 10, 11 போன்ற ஸ்தானங்களைப் பார்ப்பது அவசியம். 3 ஆம் இடமாகிய வீரியஸ்தானத்தையும், குரு, சுக்கிரன் இருவரின் பலத்தையும் தெரிந்து அதற்குரிய மருத்துவத்தையும், சாஸ்திர பரிகாரங்களையும் செய்வது சிறப்பானதாகும்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!